என்னை விடாதே பிடி என்ற கதையாக...

வெள்ளி ஜூன் 07, 2019

ஓர் ஊரில் அதட்டல் சண்டியர் ஒருவர் இருந்தார்.இதைக் கூறும்போது அதட்டல் சண்டியர் என்றால் என்ன?என்று நீங்கள் கேட்பீர்கள்.

எந்தச் சண்டையும் பிடிக்காமல் ஆ... கூ... என்று கத்திக்குளறி அடிபாட்டுக்குத் தயாராகு வது போல காட்டிக் கொள்பவரைத்தான் அதட்டல் சண்டியர் என்றேன்.

அது சரி அதட்டல் சண்டியர் என்று அகராதிகளில் ஏதும் உண்டா என்றால் இல்லவே இல்லை.இது நம் உருவாக்கமும் அதற்கான விளக்கமும் மட்டுமே.ஏற்புடையதாக இருந்தால் அங்கீகரியுங்கள்.

இல்லையேல் அதட்டல் சண்டியர் என்ற வாசகத்தைத் தவிர்த்துவிடலாம். இது சிறு குறிப்பு மட்டுமே.

இப்போது கதைக்கு வருவோம்.அந்த அதட்டல் சண்டியருக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் இருந்தார்.

அந்த நண்பரின் பணி அதட்டல் சண்டியர் சண்டைக்குப் போகும்போதெல்லாம் அவரைப் பிடித்துக் கொள்வதுதான்.

நான் சண்டையிடுவது போல ஆலாவர்ணம் காட்டிக் கொள்வேன். நீ என்னைப் பிடித்துக் கொள்ள வேண்டும். நானோ விடடா என்னைப் பிடியாதே விடடா என்று கத்துவேன்.

ஆனால் நீயோ எக்காரணம் கொண்டும் என்னை விட்டு விடக்கூடாது. இதுதான் இரு வருக்குமான உடன்படிக்கை.

இந்த உடன்படிக்கை தளம்பாமல் சில காலம் ஓடிற்று.

ஒரு நாள் வழமைபோல் அதட்டல் சண்டியர் சண்டையில் ஈடுபட்டார். சண்டை உச்ச மடைந்தது.எதிரில் நிற்பவரைத் தாக்கத் தயாராகுவது போல அதட்டல் சண்டியர் கோபா வேசம் கொள்கிறார்.

அவரின் நண்பர் அவரைப் பிடித்துக் கொள்கிறார்.
எனினும் எதிரில் நிற்பவரோ துணிச்சல் மிக்கவராக இருந்தார். அதட்டல் சண்டியரைத் தாக்குவதற்கும் அவர் தயாரானார்.

இச்சந்தர்ப்பத்தில்; என்னை விடடா! ஒரு கை பார்க்கிறேன் என்னை விடடா! என்று அதட்டல் சண்டியர் கத்த, அவரின் நண்பர் தன் பிடியை விட்டுவிட்டார்.

அவ்வளவுதான் அதட்டல் சண்டியர் பயந்தடித்தபடி என்னைப் பிடி... என்னை விட்டு விடாதே... பிடி... என்று மறுமுனையாகக் கத்தினார்.

இப்போதுதான் அங்கு நின்றவர்களுக்கு அதட்டல் சண்டியரின் வீரம் தெரிந்தது.

இந்தக் கதையை நாம் கூறும்போது எதற்கானது இந்தக் கதை என்று நீங்கள் யாரும் கேட்கலாம்.

இங்குதான் முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஒற்றுமைப்பட்ட பதவி விலகல் பொருந்துகிறது.

ஆம்,முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒட்டு மொத்தமாகத் தங்கள் அமைச்சு மற்றும் ஆளுநர் பதவிகளை இராஜினாமாச் செய்த போது, பெளத்த பீடங்கள் பயந்து போயின.திரும்பவும் முஸ்லிம் அரசியல்வாதிகள் தங்கள் பதவிகளைப் பொறுப்பேற்க வேண்டுமென பெளத்த பீடங்கள் இப்போது கெஞ்சுகின்றன.

ஆக, மேற்போந்த கதையில் அதட்டல் சண்டியர் யார்? எதிரில் நின்ற துணிச்சல் மிக்கவர் யாவர் என்பது புரிகிறதல்லவா.

இதுதான் ஒற்றுமையின் பலம் என்றுணர்க.

நன்றி வலம்புரி