என்றும் எங்கள் மனோ அக்கா - கலாநிதி சேரமான்

திங்கள் மார்ச் 15, 2021

18.05.2009 இற்குப் பிறகு மனோ அண்ணை (வேலும்மயிலும் மனோகரன்) எடுத்த அரசியல் நிலைப்பாட்டுடன் எனக்கு உடன்பாடு இருந்ததில்லை.

கே.பி அண்ணையை இயக்கத் தலைவராக ஏற்றுக் கொண்டமை, உருத்திரகுமாரன் தலைமையில் நாடுகடந்த அரசாங்கத்தை உருவாக்கியமை என அவர் மீது நான் அதிருப்தி கொண்டதற்கு பல காரணங்கள் இருந்தன.

31.05.2018 அன்று பிரெஞ்சு நாடாளுமன்றில் திருச்சோதி அண்ணை ஏற்பாடு செய்திருந்த தமிழ் இறைமை மாநாடு மற்றும் எனது நூல் வெளியீட்டு நிகழ்விற்கு மனோ அண்ணையும் வந்திருந்தார். அவரோடு வந்திருந்திருந்த தயா என்ற இன்னொருவர் என்னைப் பல கோணங்களில் படம் எடுத்தார்.

சேரமானைப் படம் எடுப்பது தான் தனது நோக்கம் என்று மாநாட்டிற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒருவரிடம் அவர் கூறியது யூரோ ஸ்ராரில் நான் பாரிஸ் செல்லும் போதே எனது காதில் வந்து சேர்ந்தது.

மனோ அண்ணையும், அவரும், பிரெஞ்சு நாடாளுமன்றில் எனது உரையை உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருந்தார்கள். மனோ அண்ணை கடைசி வரை அமர்ந்திருந்து எனது உரையையும், கேள்விகளுக்கு நான் அளித்த பதில்களையும் கேட்டுக் கொண்டிருந்தார்.

மனோ அண்ணைக்கு என்னை நன்கு தெரியும். அவரோடு வந்திருந்த தயா என்பவருக்குத் தான் என்னைத் தெரியாது. அவர் அடிக்கடி கிளிநொச்சி சென்று கே.பி அண்ணையை சந்திப்பவர். எனவே அவர் ஏன் என்னைப் பல கோணங்களில் படம் எடுத்தார் என்பதை அறிவது ரொக்கட் விஞ்ஞானம் அல்ல.

அன்று நான் மனோ அண்ணையுடன் கதைக்கவில்லை. மனோ அண்ணையும் என்னோடு கதைக்கவில்லை.

1997 ஆனி முதல் 1999 வைகாசி வரை நான் ஈழம் இல்லத்தில் இருந்த பொழுது என்னோடு வாஞ்சையோடு நடந்து கொண்டவர் மனோ அண்ணை. அப்பொழுது மனோ அண்ணை அனைத்துலக செயலகப் பொறுப்பாளராக இருந்தார்.

வன்னியில் ஜெயசிக்குறு எதிர்ச்சமர் நடந்த காலம். எனக்கு அப்பொழுது வயது 17. ஒவ்வொரு நாளும் வன்னியில் இருந்து வரும் செய்திக் குறிப்புகளை ராமா சேர் (அன்ரன் ராஜா) ஆங்கிலத்தில் செய்தி அறிக்கையாக எழுதுவார். அதை தமிழில் மொழிபெயர்த்துத் தமிழ் செய்தி அறிக்கையை நான் தயாரிப்பேன். இரண்டையும் மனோ அண்ணை சரி பார்த்து அனுமதி வழங்கியதும் அதைக் கணினி மூலம் தொலைநகல் வடிவில் உலகெங்கும் உள்ள 200-300 ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள் போன்றோருக்கு அனுப்புவேன்.

சில வேளைகளில் வன்னியில் இருந்து தேசத்தின் குரல் பாலா அண்ணை எழுதி அனுப்பும் அறிக்கைகள் (இரண்டு மொழிகளிலும் அவரே எழுதி அனுப்புவார்) வந்தால் அவற்றில் எந்த மாற்றமும் இல்லாமல் அனுப்புவோம்.

என்னோடு பிரான்சில் இருந்து நாளொன்றுக்கு குறைந்தது ஒரு தடவையாவது மனோ அண்ணை தொலைபேசி எடுத்துக் கதைப்பார். சில வேளைகளில் ராமா சேரிடம் இருந்து ஆங்கில அறிக்கைகள் வருவதற்குத் தாமதமாகும். அது வரை நான் ஈழம் இல்லத்தில் காத்திருப்பேன். மனோ அண்ணை பிரான்சில் காத்திருப்பார். ராமா சேரின் ஆங்கில அறிக்கை வர சில வேளைகளில் நள்ளிரவு 12 மணி ஆகிவிடும். பிரான்சில் 1 மணியாகியிருக்கும். நான் மனோ அண்ணைக்கு எடுத்தால் அவர் உடனே அழைப்பை எடுப்பார். சில வேளைகளில் அவரது துணைவியாரான மனோ அக்கா தொலைபேசி அழைப்பை எடுப்பார்.

ஒரு தடவை நள்ளிரவு 12 மணியளவில் என்னோடு மனோ அண்ணை கதைத்து செய்தி அறிக்கையை நான் வெளியிட்ட பின்னர் அதிகாலை 1:30 மணியளவில் பெக்கத்தில் உள்ள வீட்டிற்குப் போய் உறங்கச் சென்றேன். 2:45 மணியளவில் என்னை வந்து சாந்தீபன் அண்ணை எழுப்பினார். மறுமுனையில் மனோ அண்ணை.

'வன்னியில் பெரிய அடி நடந்திருக்கு. உடனடியாக வெளிக்கிட்டு ஒபிசுக்குப் போம். அவசரமாக பிறெஸ் றிலீஸ் விட வேணும்' என்றார் மனோ அண்ணை.

அதிகாலை 3:30 மணியாளவில் ஈழம் இல்லத்திற்குப் போய் அறிக்கையை வெளியிட்டேன். பாலா அண்ணை எழுதிய அறிக்கை. அமெரிக்கப் படைகளிடம் பயிற்சி பெற்ற சிறீலங்கா சிறப்புப் படைகளின் எயார் மொபைல் பிரிகேட் இயக்கத்தின் எதிர்த் தாக்குதலில் சுக்கு நூறாகியிருந்தது. 200 சிங்கள சிறப்புப் படையினர் பலியான எதிர்ச்சமர் அது.

செய்தி அறிக்கைகள் தொடர்பாகத் தான் அதிகமான சந்தர்ப்பங்களில் மனோ அண்ணை என்னோடு கதைப்பதுண்டு. ஆனாலும் சில வேளைகளில் நான் தனியாக இருக்கும் போது தொலைபேசி எடுத்து மனோ அண்ணை கேட்பார், 'என்ன சாப்பிட்ட நீர்?'

'கோர்ன் பிளேக்ஸ்' என்று சொன்னால் 'நீர் என்ன குழந்தைப் பிள்ளையோ?' என்று கேட்பார்.

'மிக்சர், பிஸ்கட்' என்றால் 'உங்கை பக்கத்திலை தமிழாக்கள் இல்லையோ?' என்று கேட்பார்.

ஒரு நாள் சொன்னார், 'நீர் உங்கை ஒழுங்காக சாப்பிடுகிறதில்லை என்று மனோ அக்காட்டைச் சொன்னான். அவா கேட்கிறா உமக்கு கேக் செய்து அறிவு களத்தில் பேப்பர் எடுக்க வரேக்குள்ளை அனுப்பி விடட்டோ எண்டு. நீர் உந்தக் கோர்ன் பிளேக்சையும், பிஸ்கட்டையும் விட்டுப் போட்டு பசிக்கேக்குள்ளை கேக் சாப்பிடலாம்.'

நான் சிரித்து விட்டு மறுத்து விட்டேன்.

ஒரு வாரத்திற்குள் ஈழம் இல்லத்தில் மாற்றம் நிகழ்ந்தது. மனோ அண்ணை சாந்தன் அண்ணையுடன் கதைத்திருக்க வேண்டும். பரா மாஸ்டர், சவுந்தரராஜன் அண்ணை, ஜெயந்தன் அண்ணை, தனம் அண்ணை, இந்திரா அக்கா என வாரத்தில் ஐந்து நாட்கள் ஒவ்வொருவரும் எனக்கென்று சமைத்த உணவு கொண்டு வரத் தொடங்கினார்கள்.

அதன் பின் 'என்ன சாப்பிட்ட நீர்?' என்று மனோ அண்ணை கேட்டால், 'புட்டு, சோறு, இறைச்சிக் கறி, மீன் கறி' என்று பதில் சொல்லத் தொடங்கினேன்.

'அப்ப உமக்கு கேக் அனுப்ப வேண்டாம் எண்டு மனோ அக்காவிட்டைச் சொல்லுறன்' என்றார் மனோ அண்ணை.

1999 வைகாசி மாதம் ஈழம் இல்லத்தை விட்டு வெளியில் ஏரியாவுக்கு வந்த பின்னரும் என்னோடு மனோ அண்ணை தொடர்பில் இருந்தார்.

2001ஆம் ஆண்டு நான் ரி.ரி.என், ஐபிசி என சென்ற பின்னரும் மனோ அண்ணைக்கும் எனக்கும் இடையிலான தொடர்பு இருந்தது.

2002ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஏனோ தெரியாது, எனக்கும் அவருக்கும் இடையிலான தொடர்பு இல்லாமல் போனது.

2003ஆம் ஆண்டு வெளிநாட்டுக் கட்டமைப்புகள் மறுசீரமைக்கப்பட்ட பின்னர் இயக்க செயற்பாடுகளில் மனோ அண்ணை இல்லாமல் போனார்.

18.05.2009 ஆண்டு யுத்தம் முடிந்ததும் கே.பி அண்ணையை இயக்கத் தலைவராக மனோ அண்ணை ஏற்றிருப்பதாக அறிந்தேன். அதைத் தொடர்ந்து உருத்திரகுமாரன் தலைமையில் நாடுகடந்த அரசாங்கம் அமைப்பதற்கு கே.பி அண்ணை எடுத்த முயற்சிகளுக்கு மனோ அண்ணையும், சர்வே அண்ணையுமே பின்புலத்தில் நிற்பதாக அறிந்தேன்.

அன்று முதல் இரண்டு பேரும் எனது அரசியல் எதிரிகள் ஆனார்கள்.

2002 வரை நான் அறிந்த மனோ அண்ணையை இன்றும் மதிக்கிறேன்.

18.05.2009 இற்குப் பின் வெளிப்பட்ட மனோ அண்ணையை இன்றும் அரசியல் எதிரியாகவே கருதுகின்றேன்.

மனோ அண்ணையின் துணைவியாரான மனோ அக்கா இன்று காலாமாகினார் என்று அறிந்தேன்.

பிரான்சிலிருந்து எனக்கு கேக் அனுப்ப முன்வந்த மனோ அக்கா, நள்ளிரவு 12 மணியாயினும் சரி, அதிகாலை 3:30 மணியாயினும் சரி நான் மனோ அண்ணைக்கு தொலைபேசி எடுக்கும் பொழுது நித்திரையில் இருந்து எழுந்து எனது அழைப்பை எடுத்துக் கதைப்பார். பின்னர் மனோ அண்ணையிடம் அழைப்பைக் கொடுப்பார்.

இன்று அவர் உயிரோடு இல்லை.

கடந்த 12 ஆண்டுகளாக நானும், மனோ அண்ணையும் இரு துருவங்களில் நிற்கும் அரசியல் எதிரிகள். இனியும் அப்படித் தான். அதில் எந்த மாற்றமும் வரப் போவதில்லை.

ஆனாலும் தனது துணைவியார் மனோ அக்காவை இழந்து நிற்கும் மனோ அண்ணைக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

(இப் பதிவு 13.03.2021 அன்று முதற் தடவையாக முகநூலில் வெளியிடப்பட்டது).