எனது காடு!

திங்கள் டிசம்பர் 09, 2019

முசிறுகள் படர்ந்த பாலைகளில்
விளைந்து தொங்கின தங்கப் பழங்கள்.

சூரியன் மினுக்கிய தேகங்களோடு
இனித்துக் குலுங்கின பாற்கனிகள்.

மர அணில்கள் பாடிய காடுகளில்
உடும்புகள் தலை நிமிர்த்திப் பார்த்தன.

செம்பழங்கள் தொங்கிப் பதிந்த
உலுவிந்தஞ் செடிகளால்
அழகானது காட்டுப் பாதைகள்.

அருவியின் பெரு நீள வயிறுகளில்
பூத்துக் கிடந்தன வெள்ளை மணல்கள்.

இடையிடையே தெரிந்த வானத் துண்டுகளில்
மேகங்களின் நீலமுகம் சிரித்தது.

மான்களின் காற்தடம் புதைந்த குட்டைகளில்
பட்டமரங்கள் கையுயர்த்திக் கிடந்தன.

கைவிரல் நுனிகளில்
கண்மூடிக் கொலுவிருந்தன கொக்குகள்.

விளாம்பழக் கோதுகளோடு காய்ந்து கிடந்தன
யானைக் கும்பங்கள்.

பாசி பூத்திருந்த ஈர நிலங்களில்
குழந்தைப் பச்சை படர்ந்து கிடந்தது.

சருகுகள் மூடிய வனத்தின் நிலமெங்கும்
காட்டின் வாசம் வளர்ந்து கொண்டிருந்தது.

காட்டு மாங்காய்களைக் காவிக் கொண்டு
தண்ணீர்க் கொடிகளில் ஊஞ்சலாடின குரங்குகள்.

ஒரு தங்கப் புதையலைப் போல
இற்றுக் கிடந்தது காகிதத் துண்டொன்று.

பெருமரங்களின் பாடலில் இசை கொண்டது காடு.

இலையசைத்த காற்றின் தூளியில்
குளிரின் சுகம் காட்டைத் தாலாட்டியது.

பெயர் தெரியாக் குருவிகளின் பாடல்களில்
உயிர்த்துச் சிலிர்த்தது காட்டின் ஆன்மா.

இயற்கை அமைத்த கற்சுணையில்
கசிந்தேடியது குழந்தையின் வானீர்ச் சிரிப்பு.

ஆதி நீரின் சுவையில் புனிதமானது
காட்டு மரங்கள்.

காட்டின் நிலம் கிழித்தோடும் ஆற்றில்
படுத்துக் கிடந்தன மூதாதைக் கற்கள்.

சூரியனும் நிலவும் இறங்கிப் போய்க் கொண்டிருந்த
கற்களின் முதுகளில் காய்ந்து கிடந்தன
பறவைகள் வரைந்த ஓவியங்கள்.

கூழாங்கற்களை உருட்டி விளையாடியது
விலாசமறியாத நீர்க் கைகள்.

புற்களும் பூக்களுமாய் குழுமிக் கிடந்த கரைகளில்
சூரியனால் குளித்தன முதளைகள்.

காட்டின் முகத்தில் வழிந்து கொண்டிருக்கிறது.
யாரும் ஏந்திச் செல்ல முடியாத பேரமைதி

பிரிந்து விட முடியாத காதலின் பாரத்தோடு
பெருமூச்செறிகிறது காட்டின் கண்கள்.

எப்போதும் சொல்லத் துடிக்கிற புதினங்களோடு
யாருக்காகவோ காத்துக் கிடக்கிறது காடு.

தீபிகா
11.11.2019
11.17 காலை.