எனது பதவி காலத்துக்குள் ஒருவருக்கேனும் மரண தண்டனை வழங்குவேன்-மைத்திரி!

திங்கள் அக்டோபர் 21, 2019

கடந்த காலங்களில் ஊடக சுதந்திரத்தை வழங்கியதன் மூலம் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும் அவற்றுக்கு எதிராக தான் செயற்படவில்லை எனவும் தற்போது முழுமையாக ஊடக சுதந்திரம் உறுதிப் படுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (20) நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் தேசிய இளைஞர் முன்மாதிரி மூன்றாவது மாநாட்டில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை கூறினார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, இளைஞர்களை வலுவூட்டவும் அவர்களுக்குரிய சலுகைகளை வழங்கவும் தனது பதவிக் காலத்தில் பாரிய வேலைத்திட்டங்கள் பலவற்றை முன்னெடுத்தாகவும் கூறியுள்ளார்.

இளைஞர்களை பலப்படுத்துவது, அவர்களின் கருத்துக்களை விரிவுப்படுத்தல், மற்றும் ஆயுதங்கள் இல்லாமல் பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பது என்பவை குறித்து தெளிவுப்படுத்தும் நோக்கில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் அதில் நாடு முழுவதிலும் இருந்து 400 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர்.

இதன்போது கூடியிருந்த இளைஞர், யுவதிகளின் கேள்விகளுக்கும் ஜனாதிபதி பதில் வழங்கியதுடன், இளைஞர்கள் அரசியலில் பிரவேசிக்க வேண்டுமானால் அவர்கள் கல்வியில் மேம்பட்டிருக்க வேண்டும் எனவும் சிறந்த நற்பெயரை கொண்டவர்களாகவும் காணப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கல்விமான்கள் உள்ள நாட்டில் பிரச்சினைகள் குறைவதாகவும் நாடு தற்போது வளர்ச்சிக்கான பாதையில் பயணிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் போதைப் பொருள் பாவனையில் இருந்து நாட்டு இளைஞர்களை காப்பாற்ற கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு கடமையாற்றியதாகவும் ஜனாதிபதி கூறினார்.

போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்க தான் முயற்சித்த போது அதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் எனவே, அது குறித்த நீதிமன்ற தீர்புக்கு தலைசாய்ப்பதாகவும் சில வேளைகளில் தனது பதவி காலத்துக்குள்ளேயே சாதகமான தீர்ப்பு கிடைக்குமானால் போதைப் பொருள் கடத்தல்காரர் ஒருவருக்கேனும் மரண தண்டனையை நிறைவேற்றுவதாகவும் ஜனாதிபதி கூறினார்.

இந்த நிகழ்வில் சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.