எனது தந்தை 12 வருடங்களிற்கு முன்னர் கொலை செய்யப்பட்டார்

சனி மார்ச் 06, 2021

இலங்கையின் மிகவும் சுதந்திரமான பத்திரிகையாளர்களில் ஒருவரான எனது தந்தை லசந்த விக்கிரமதுங்க அவ்வேளை இலங்கையின் பாதுகாப்பு செயலாளராக பணியாற்றிய கோத்தபாய ராஜபக்சதொடர்புபட்ட ஆயுதபேரம் குறித்த விபரங்களை அம்பலப்படுத்தினார்.


ராஜபக்ச அவரை நீதிமன்றில் நிறுத்தினார்,அவதூறு குற்றச்சாட்டை சுமத்தினார்.இதன் பின்னர் சண்டே லீடரில் இருந்த எனது தந்தையின் அச்சகம் ( அவர் சண்டே லீடரின் ஆசிரியராகயிருந்தார்)மீது நள்ளிரவில் ஆயுதம் தாங்கிய கும்பலொன்று தாக்குதலை மேற்கொண்டது,அவரின் இரண்டு பணியாளர்கள் தாக்கப்பட்டனர்,அச்சகம் தீக்கிரையாக்கப்பட்டது.

2009 ஜனவரி 8 திகதி- ஆயுதகொள்வனவு மோசடி குறித்து எனது தந்தை நீதிமன்றதில் சாட்சியமளிப்பதற்கு இரண்டு நாட்களிற்கு முன்னர்- அவர் தனது அலுவலகத்திற்கு சென்றுகொண்டிருந்தவேளை இராணுவ புலனாய்வு பிரிவை சேர்ந்தவர்கள் அவரின் மீது தாக்குதலை மேற்கொண்டனர், அவரை கொலை செய்தனர்,எனது குடும்பத்தை சிதைத்தனர்,எனது இதயத்தில் ஆழமான மாறாத காயத்தை ஏற்படுத்தினர்கள் இலங்கையின் பத்திரிகையாளர்களிற்கு கடும் அச்சத்தை ஏற்படுத்தினர்கள்,


நான் இதற்கு ராஜபக்சவே காரணம் என தெரிவிக்கின்றேன்,எனது தந்தையின் படுகொலைக்காக அவரிற்கு எதிராக லொஸ் ஏஞ்சல்சில் வழக்கு தாக்கல் செய்யதவேளை நான் இதனை தெளிவாக தெரிவித்திருந்தேன்.


அவர் 2019 நவம்பரில் ஜனாதிபதியாக அதிர்ச்சி தரும் முறையில் தெரிவு செய்யப்பட்டது, எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் அளவிட முடியாத வேதனையை ஏற்படுத்தியுள்ளதுடன் இலங்கையின் சிவில்சமூகத்தின் அடித்தளத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.( பிபிசி செய்தியாளர் ராஜபக்சவிடம் எனது தந்தை குறித்து கேள்வி எழுப்பியவேளை அவர் சிரித்துக்கொண்டே மழுப்பினார்.


கடந்த வாரம் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செலே பச்செலெட் இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்து கடுமையான தீர்ப்பை வழங்கும் அறிக்கையை வெளியிட்டார்.


பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை வழங்குவதற்கு தொடாச்சியாக தவறியமைக்காக, சர்வதேசசமூகம் இலங்கையை பொறுப்புக்கூறச்செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என அவர் பரிந்துரைந்திருந்தார்.
இதற்கு பதில் அளிப்பது குறித்து ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை அடுத்த வாரங்களில் ஆராயும்.
2005 நவம்பர் மாதம் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டபின்னர் அவர் அவரது சகோதரர் கோத்தபாயவை பாதுகாப்பு செயலாளராக நியமித்தார்.


அவர்கள் இருவரும் இணைந்து இலங்கையில் மிகமோசமான அநீதிகளை முன்னெடுத்தனர்.
அவர்களிற்கு எதிராக குரல்எழுப்புவதற்கான துணிச்சலை கொண்டிருந்த எந்த பத்திரிகையாளரையும் திட்டமிட்டு இலக்குவைத்தனர்.


2009 இல் எனது தந்தையின் மரணத்தின் பின்னர் அதனை மூடிமறைப்பதற்கான நடவடிக்கைகள் மிகவும் உன்னிப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டன.


ஐக்கியநாடுகளிற்கு நான் சமீபத்தில் அனுப்பிய ஆவணமும் மனித உரிமை கண்காணிப்பகமும் இதனை தெளிவாக பதிவு செய்துள்ளன.


தந்தையின் மரணத்திற்கு காரணம் என மருத்துவமனையில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த விடயங்களிற்கும் பிரேதபரிசோதனையில் தெரிவிக்கப்பட்டிருந்த விடயங்களிற்கும் வித்தியாசம் காணப்பட்டது.


விசாரணையாளர்கள் அச்சுறுத்தப்பட்டனர். பொய்யான ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டன சாட்சிகள் உருவாக்கப்ட்டனர்.


போலி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட இரு அப்பாவிகள் பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டன,கைது செய்யப்பட்ட மற்றொரு நபர் தடுப்புக்காவலில் உயிரிழந்தார்.


எனது தந்தையின் கொலையின் ஆறு வருடங்களிற்கு பின்னர் 2015 ஜனவரி 8 ம் திகதி இலங்கையர்கள் ராஜபக்சவை ஆட்சியிலிருந்து அகற்றினார்கள்,

முன்னைய அரசாங்கத்தின் கீழ் அநீதியால் பாதிக்கப்பட்ட பலருக்கு நீதியை வழங்குவதாக வாக்குறுதி அளித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தை மக்கள் தெரிவுசெய்தனர்.


பொலிஸ் விசாரணையாளர்கள் உடனடியாக டிரிபோலி படைப்பிரிவை சேர்ந்தவர்களை விசாரணை செய்ய தொடங்கினார்கள்- இந்த படைப்பிரிவு பாதுகாப்பு செயலாளராக பணியாற்றிய கோத்தபாய ராஜபக்சவின் நேரடி கண்காணிப்பின் கீழ் செயற்பட்டது..

ஆனால் விசாரணையாளர்கள் இதில் ராஜபக்சவிற்கு உள்ள தொடர்பை அம்பலப்படுத்தியவேளை விசாரணை முடக்கப்பட்டது,இலங்கை நீதித்துறையை பொருத்தவரை அவர் தோற்கடிக்க முடியாதவராக காணப்பட்டார்.


பல நூற்றாண்டுகால முன்னுதாரணத்தை கைவிட்ட நீதிபதிகள் அவர் கைதுசெய்யப்படுவதை தடுப்பதற்கான உத்தரவுகளை பிறப்பித்தனர்.

இரண்டு மனித உரிமை செயற்பாட்டாளர்கள் குறித்து அவரை விசாரiணை செய்வதற்கான வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டவேளை நீதிபதிகள் அதனை நிராகரித்தனர்.

நிதிமோசடிகள் குறித்து அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டவேளை அந்த வழக்கு விசாரணை மேலும் முன்னோக்கி நகர்வதை தடுப்பதற்காக பல சட்டத்தரணிகள் களமிறங்கினார்கள்.

இந்த தருணத்திலேயே நான் அமெரிக்க நீதிமன்றத்தின் உதவியை நாடுவதற்கு தீர்மானித்தேன்.ஆனால் ராஜபக்ச ஏற்கனவே ஜனாதிபதியாவதற்கான பிரச்சாரங்களை ஆரம்பித்திருந்தார்.

புலனாய்வு பிரிவை மீண்டும் வலுப்படுத்துவது அநீதிகளில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டுகளிற்கு உள்ளான புலனாய்வுதுறையினரை விடுதலை செய்வது என்ற வாக்குறுதிகளை முக்கியமாக அவர் முன்வைத்தார்.


எனது தந்தையை கொலை செய்தார் என குற்றம்சாட்டப்பட்ட நபர் ஒருவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதை 15 மாதங்களிற்கு முன்னர் நான் அச்சத்துடன் பார்த்தேன்.

ஜனாதிபதி என்ற அவரது புதிய அந்தஸ்த்து அவருக்கு விடுபாட்டுரிமையை வழங்கியது.

தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுவதே நாட்டின் புதிய சட்டம் என்பதை உறுதி செய்வதற்கு அவர் எந்த நேரத்தையும் வீணடிக்கவில்லை. அவர் தன்னை சட்டத்திற்கு அப்பாற்பட்டவராக வைத்திருந்த நீதிபதிகளிற்கு பதவி உயர்வை வழங்கினார்.

சிறுவர்களை கொலை செய்தார் என யுத்தகுற்றச்சாட்டுகளிற்காக தண்டிக்கப்பட்ட படைவீரரை அவர் விடுதலை செய்தார்.

இவ்வாறான சம்பவங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட புலனாய்வாளர்கள் நாட்டை விட்டு தப்பியோடினார்கள் அல்லது கைதுசெய்யப்படுவதை எதிர்கொண்டார்கள்.

இலங்கையின் குற்றவியல் விசாரணை பிரிவிற்கு தலைமை தாங்கிய சர்வதேச கவனத்தை ஈர்த்த பல முக்கிய சம்பவங்கள் குறித்த விசாரணைகளில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்திய எவ்பிஐயினால் பயிற்றுவிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரி போலியான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிஐடியின் புதிய தலைவராக ராஜபக்சவே ஒருவரை தெரிவு செய்தார்- அவர் எனது தந்தையின் கொலை குறித்த ஆதாரங்களை மறைத்தார் என குற்றம்சாட்டப்பட்டவர்.

பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி வழங்கப்படவேண்டும் என சர்வதேச சமூகம் எதிர்பார்த்துக்கொண்டிருந்தவேளை இது இடம்பெற்றது.

ராஜபக்ச தேர்தலில் தெரிவு செய்யப்பட்டமை இலங்கையில் மனிதஉரிமை மற்றும் பொறுப்புக்கூறலிற்கான கதவுகளை அடைத்துவிட்டது என்பது பாதிக்கப்பட்டவர்களின் குழுக்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் நன்கு தெரிந்துள்ளது.


பொருளாதார தடைகள் பயணத்தடைகள் சுயாதீன பொறுப்புக்கூறல் பொறிமுறைகள் போன்றவற்றை போன்ற வலுவான சர்வதேச நடவடிக்கைகள் இல்லாமல் கடந்த கால மனித உரிமை மீறல்களை மீண்டும் எதிர்கொள்ளும் அபாயத்தை இலங்கையர்கள் எதிர்நோக்குகின்றனர் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரும் விசேட அறிக்கையாளர்களும் தெரிவிக்கின்றனர்.

தனது மரணத்தை முன்கூட்டியே உணர்ந்த எனது தந்தை தனக்கான இரங்கல் கட்டுரையை தான் உயிருடன் இருக்கும்போதே எழுதினார்.

அதில் சுதந்திரத்தின் முக்கிய சாதனங்களை கட்டுப்படுத்துவதற்கான கருவியாக மரணம் மாறிவிட்டது என அவர் கவலை வெளியிட்டிருந்தார்.

12 வருடங்களிற்கு பின்னர் அந்த சாதனங்கள் ஆபத்தான நிலையில் உள்ள தருணத்தில் உலகம் பத்திரிகையாளர்கள் கொல்லப்படுவதற்கு முடிவு காண்பதற்கும் கொலைகார எதேச்சதிகாரர்கள் அதற்கான விலையை செலுத்துவதை உறுதி செய்வதற்குமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

எனது தந்தையையும் போன்றவர்களையும் கொலை செய்தவர்கள் சர்வதேச அரங்கில் ஒருவருடன் ஒருவர் பழகுவதை பார்க்கும்போது பத்திரிகையாளர்களை கொலை செய்வது புதிதாக உருவாகி வரும் ஏதேச்சதிகாரர்களிற்கு மற்றுமொரு சடங்கு என கருத தோன்றுகின்றது.