எரிபொருள் மீதான வரியை குறைத்த 4 மாநிலங்கள்! தமிழக அரசு குறைக்குமா?

செவ்வாய் பெப்ரவரி 23, 2021

வாகன எரிபொருள் மீதான மதிப்பு கூட்டு வரியை குறைத்த 4 மாநிலங்கள், மேலும் தமிழக அரசும் வாகன எரிபொருள் மீதான கூட்டு வரியை குறைக்குமா என்று வாகன ஓட்டிகள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதும் எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ளதால் வாகன எரிபொருள் மீதான மதிப்பு கூட்டு வரியை, நான்கு மாநிலங்கள் குறைத்துள்ளன. தமிழக அரசும் வரியை குறைக்குமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து, எண்ணெய் நிறுவனங்கள் எரிபொருட்களுக்கான விலையை நிர்ணயிக்கின்றன. 

அதுமட்டுமின்றி சில்லறை விற்பனையில் மத்திய மாநில அரசுகள் வரிகளை விதிப்பதால், வாகன எரிபொருளின் விலை உச்சத்தை எட்டியுள்ளது.

எரிபொருட்களின் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடந்து வரும் நிலையில், நான்கு மாநில அரசுகள் வரியை குறைத்துள்ளன. எனினும், எரிபொருட்கள் மீதான கலால் வரியை குறைக்க மத்திய அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.

முதல் மாநிலமாக வாகன எரிபொருள் மீதான வாட் வரியை ராஜஸ்தான் மாநில அரசு 38 சதவீதத்தில் இருந்து 36 சதவீதமாக குறைத்துள்ளது. சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள மேற்குவங்க மாநிலத்தில் எரிபொருட்கள் மீதான மதிப்பு கூட்டு வரி ஒரு ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

இதேபோல் அசாம் மாநிலத்தில் எரிபொருட்கள் மீது கொரோனா நிதியாக விதிக்கப்பட்ட 5 ரூபாய், திரும்ப பெறப்பட்டுள்ளது.

மேகாலயாவில் பெட்ரோல் விலையில் 7 ரூபாய் 40 காசுகளும், டீசல் விலையில் 7 ரூபாய் 10 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளதுடன், மதிப்புகூட்டு வரி 2 ரூபாயும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

வாகன எரிபொருள் மீதான வரியால் தமிழக அரசுக்கு 13,000 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் வரும் நிலையில், தமிழக அரசு வரியை குறைக்குமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

2020ம் ஆண்டு பெப்ரவரியில் ஒரு பேரல் கச்சா எண்ணெய்யை 54.63 டாலர்களுக்கு இந்தியா வாங்கிய நிலையில், வாகன எரிபொருளான ஒரு லீற்றர் பெட்ரோல் 71 ரூபாய் 94 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 64 ரூபாய் 70 காசுகளுக்கும் விற்பனையானது.

இந்தாண்டு பெப்ரவரி மாதத்தில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 63 டாலர்களுக்கு வாங்கப்பட்ட சூழலில், ஒரு லீற்றர் பெட்ரோல் 89 ரூபாய் 29 காசுகளாகவும், டீசல் ஒரு லிட்டர் 79 ரூபாய் 70 காசுகளாகவும் நிர்ணயிக்கப்பட்டது.