எதிர்வரும்  18.01.2021 முதல் சுவிசில் முடக்கங்கள்

சனி சனவரி 16, 2021

தொற்றின் வேகத்தை அதிகப்படுத்தி உள்ள உருமாறிய மகுடநுண்ணித் தொற்றின் பாதிப்பு எம்மை இம் முடக்கங்களை அறிவிக்க தூண்டி உள்ளது என்றார் சுவிஸ் அதிபர் திரு. பார்மெலின்.

நாம் ஒன்றிணைந்தே ஒரு பொது இணக்க முடிவிற்கு வரவேண்டி இருந்தது. மக்கள் தமது கருத்தினை எழுத்தில் பல கடிதங்கள் ஊடாக அளித்திருந்தனர். எங்கள் கருத்துக்கள் வேறுபட்டவையாகவும் இருந்தது. இப்போதைய எமது அறிவிப்பு பொருளாதாரத்தை பாதிக்கும் என்பது எமக்குத் தெரியும். ஆனால் நாம் முரண்பாடுகளை வளரத்துக்கொள்வது மகுடநுண்ணிக்கு அதிக மகிழ்ச்சி அளிக்கும். ஆகவே நாம் அனைத்து நோய்த்தடுப்பு நடவடிக்கையினையும் முழுமையாக கைக்கொள்ள வேண்டும். ஆகவே நாம் அனைவரும் இவ்வழியில் ஒன்றிணைந்தே பயணிக்க வேண்டும். ஒன்றிணைந்தே இதனை நாம் ஒரு சுவிஸ் நாடாக அடையமுடியும்.

நாம் தற்போது எதிர்கொள்ளும் சூழல் எமக்கு வலியைத் தருகின்றது, ஆகவே அது கோபத்தை உண்டுபண்ணுகின்றது. ஆனாலும் நாம் அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும். இப்போதைய சூழலில் மெதுவாக நாம் நல்வழியை அடைந்து வருகின்றோம் என்றார் சுவிஸ் அதிபர்.

13.01.2021 கணக்கெடுப்பின்படி 3001 மகுடநுண்ணித் தொற்றுக்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. 147 நோயாளர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அதில் 58 மரணங்கள் ஏற்பட்டுள்ளன. பலபடி சங்கிலித்தொடர் வினை முறமையிலான (PCR) பரிசோதனையில் 15.5 வீத மக்கள் நோயுற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதுபோல் எதிர்செனி (Antigen) பரிசோதனையில் 13.4 வீத மக்கள் மகுடநுண்ணித் தொற்றுக்கு ஆளாகி இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

உணவகங்கள், பண்பாட்டு-, விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நிலையங்கள் பெப்ரவரி 2021 வரை முழுமையாக மூடப்பட்டிருக்கும். நாளாந்த வாழ்விற்கு அடிப்படைத் தேவையற்ற அனைத்து கடைகளும் மூடப்படவேண்டும்.