எத்தியோப்பியாவில் 157 உயிர்களை பறித்த விமான விபத்துக்கு காரணம்?

திங்கள் மார்ச் 18, 2019

எத்தியோப்பியாவில் போயிங் 737 மேக்ஸ்-8 ஜெட் விமானம் விபத்துக்குள்ளான சம்பவத்தில் இதற்கு முன்னர் நடந்த மற்றொரு விபத்திலும் தொடர்புடைய முக்கிய காரணத்தை வல்லுனர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

எத்தியோப்பியா நாட்டு அரசுக்கு சொந்தமான ‘737’ ரக போயிங் விமானம் கடந்த பத்தாம் தேதி காலை அடிஸ் அபாபா நகரில் இருந்து 149 பயணிகளுடன் கென்யா தலைநகரான நைரோபி நோக்கி புறப்பட்டு சென்றது.

வானில் உயர எழும்பிய அந்த விமானம் 6 நிமிடங்களுக்குள் தரையில் உள்ள கட்டுப்பாட்டு அறையுடனான தகவல் தொடர்பை இழந்தது. பின்னர், அந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கிய விபத்தில் அதில் இருந்த 149 பயணிகள் மற்றும் விமானிகள் உள்பட 8 பணியாளர்கள் உள்பட 157 பேர் உயிரிழந்தனர்.

இந்த விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்டு, பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள ஆய்வுக்கூடத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இதில் உள்ள குரல் பதிவுகளின் அடிப்படையில் விபத்துக்கான காரணம் என்ன? என்பது அதிகாரப்பூர்வமாக தெரியவரும்.

இதற்கிடையில், விபத்துக்குள்ளான இந்த விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சிறு தடயத்தின் அடிப்படையில் இந்த கோர விபத்துக்கான காரணம் இதுவாகவும் இருக்கலாம் என விமானப் போக்குவரத்து துறை சார்ந்த வல்லுனர்களும், பொறியாளர்களும் தீர்மானித்துள்ளனர். 

 

 

பொதுவாக, நவீனகால போயிங் ஜெட் ரக விமானங்கள் விண்ணில் உயரக்கிளம்பி பறக்கும்போதும், மிருதுவாக தரையிறங்கும்போதும் வால் பகுதியில் உள்ள ‘ஸ்டேபிலைசர்ஸ்’ என்னும் சமநிலைப்படுத்தும் கருவிகள்தான் ஒரு விமானத்தின் மூக்குப்பகுதியை தாழ்த்தவும், உயர்த்தவும் உந்துசக்தியாக செயல்படுகின்றன.

இந்த ‘ஸ்டேபிலைசர்ஸ்’ கருவியில் பொருத்தப்பட்டுள்ள இரு சென்சார்களில் இருந்து வெளியேற்றப்படும் அதிர்வலைகள் விமானத்தின் மூக்குப்பகுதியை இயக்கி உயரக்கிளம்பவும், தாழ்ந்து இறங்கவும் தேவையான பணியை செய்கிறது. 

போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானங்களில் உள்ள இந்த தானியங்கி ‘ஸ்டேபிலைசர்ஸ்’ கருவிகள் விமானத்தின் மூக்குப்பகுதியை 10 வினாடிகளில் 2.7 டிகிரி செங்குத்தான கோணத்தில் தரையை நோக்கி திசை திருப்புவதாக முன்னர் தெரியவந்தது. இந்த வேகம் மிக அதிகமானது என கூறப்படுகிறது.

இதற்கு முன்னர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தோனேசியாவில் விபத்தில் சிக்கி 189 பேர் உயிரிழக்க காரணமாக அமைந்த லயன் ஏர் விமான விபத்திலும் இதேபோல் நிகழ்ந்துள்ளது. 

இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளான அந்த விமானத்தின் விமானிகள் மிக அதிகமான வேகத்தில் தரையை நோக்கி தாழ்ந்து செல்லும் மூக்குப்பகுதியை நிலைப்படுத்த முயன்றுகொண்டிருக்கும்போதே அந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கிய தகவல் அவ்விமானத்தின் கருப்பு பெட்டியில் இருந்து கிடைத்த விமானிகளின் குரல் பதிவின் மூலம் முன்னர் தெரியவந்தது.

இதேநிலை எத்தியோப்பியாவில் விபத்துக்குள்ளான போயிங் 737 மேக்ஸ்-8  விமானத்துக்கும் ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பத்தகுந்த ஆதாரம் இந்த விபத்து நடந்த பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட ’ஜேக்ஸ்குரு’ என்ற பாகத்தின் மூலம் கிடைத்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வால் பகுதியில் இருந்து மூக்குப்பகுதியை இயக்கும் இந்த ‘ஸ்டேபிலைசர்ஸ்’ கருவியின் தவறான செயல்பாட்டால் எத்தியோப்பியா விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என நம்புவதற்கு தேவையான முக்கிய ஆதாரமாக இதை எடுத்துக்கொள்ள முடியாது. 

எனினும், எத்தியோப்பியா விமானத்தின் கருப்புப்பெட்டியில் உள்ள விமானிகளின் கடைசி நிமிடக் குரல் பதிவுகளும் இந்த கருத்தை உறுதிப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.