ஹைபர்ஹிடிராஸிஸ் என்ற பாதிப்பிற்குரிய சிகிச்சை முறை!

புதன் அக்டோபர் 02, 2019

எம்முடைய உடலின் வெப்ப நிலையை சீரான நிலையில் இயங்க வைப்பதற்காக உடலில் நிகழும் இயற்கையான மாற்றங்கள்தான் வியர்வை வெளியேற்றம். இந்தசெயல் உடலில் அனிச்சையாக நடைபெறுகிறது. சிலருக்கு இத்தகைய வியர்வை வெளியேற்றம் கைகளிலும், பாதத்தின் அடிப்பகுதியிலும் இயல்பான அளவைவிட அதிக அளவில் வெளியேறும். 

இதன் காரணமாக அவர்கள் சமூகத்தில் இயல்பான மனநிலையுடன் உலா வர இயலாமல் ஏராளமான உளவியல் சிக்கல்கள் ஏற்படும். அதிலும் குறிப்பாக பதிமூன்று வயதிலிருந்து பத்தொன்பது வயது வரையிலான வளரிளம் பருவத்தில் இருப்பவர்களுக்கு இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும். Hyperhidrosis எனப்படும் இத்தகைய பாதிப்பிற்கு தற்பொழுது புதிய சிகிச்சை கண்டறியப்பட்டிருக்கிறது.

நாளாந்தம் எம்முடைய உடல்நிலையின் வெப்பநிலையை கட்டுப்படுத்துவதற்காக, உடல் அதிகபட்சமாக ஒரு லீற்றர் வரையிலான வியர்வையை வெளியேற்றுகிறது. ஆனால் ஒரு சதவீத மக்களுக்கு வியர்வை வெளியேறுவது இயல்பான அளவைக் காட்டிலும், அதிக அளவிலான வியர்வை வெளியேறும்.  இத்தகைய பாதிப்பு அவர்களுடைய உடலின் அதிகபட்ச வெப்பநிலை காரணமாகவும், அவர்கள் மேற்கொள்ளும் அதிக அளவிலான உடற்பயிற்சி காரணமாகவும் வியர்வை வெளியேறும். இதற்கு Hyperhidrosis ஹைபர்ஹிடிராஸிஸ் பாதிப்பு என குறிப்பிடப்படுகிறது.

முகம், கைகள், அக்குள் ஆகிய பகுதிகளில் இயல்பான அளவை விட அதிக வியர்வை வெளியேறுவது.. இத்தகைய பாதிப்பின் தொடக்க நிலையாகும். காரமான உணவை அதிகமாக சாப்பிடுவது, அதிக வெப்பநிலையில் பணியாற்றுவது, வேறு நோய்களின் தாக்கம், மனக்கவலை, தோல் நோய்க்காக எடுத்துக்கொள்ளும் வலிநிவாரணி மாத்திரைகள் அல்லது களிம்புகளின் பக்க விளைவுகள் ஆகிய பல காணரங்களில் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும். அதே தருணத்தில் உடல் முழுவதும் இயல்பான அளவை விட, அதிக அளவில் வியர்வை வெளியேறும் பாதிப்பு என்ற ஒன்றும் இருக்கிறது. 

சர்க்கரை நோய். உடல் பருமன். மன அழுத்தம் அவற்றின் காரணமாகவும் அதிகப்படியான வியர்வை வெளியேறக் கூடும். என்டோகிரைன் எனப்படும் நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாடுகள், நரம்பு தொடர்பான கோளாறுகள், இதயப்பகுதியின் உள்ள நுண்ணிய இரத்த குழாய்களில் ஏற்படும் தொற்றுகள் காரணமாகவும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும்.

இதற்கு தொடக்ககாலத்தில் சிகிச்சை இல்லை என்றாலும், தற்போது ஏராளமான சிகிச்சைமுறைகள் கண்டறியப்பட்டுள்ளன. மருந்துகள், மாத்திரைகள், விழிப்புணர்வு, ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவை தவிர்த்தல், வாசனை திரவியங்களை தற்காலிக நிவாரணமாக பயன்படுத்துதல் போன்றவற்றை பயன்படுத்திய பிறகும், அதிக அளவில் வியர்வை வெளியேறும் பாதிப்பு இருந்தால், அவர்களுக்கு MiraDry என்ற சிகிச்சையாலும், Thoracic Sympathectomy என்ற லேசர் சிகிச்சை மூலமும் இதற்கு நிரந்தரமாக தீர்வு காணலாம்