ஹைதராபாத் நகரில் கால்நடை மருத்துவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி படுகொலை செய்த நால்வரும் சுட்டுக்கொலை!

வெள்ளி டிசம்பர் 06, 2019

ஹைதராபாத் நகரில் பெண் கால்நடை மருத்துவர் கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேர் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு அவர்கள் சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு நடந்தவற்றை கூறும்படி கேட்டபோது போலீஸாரை தாக்க முயன்றதால் சுட்டுக் கொல்லப்பட்டனர் என பெயர் தெரிவிக்க விரும்பாத போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த துப்பாக்கிச்சூடு மெஹபூப் நகர் மாவட்டத்தில் சத்தன்பல்லி என்னும் கிராமத்தில் நடைபெற்றுள்ளது. இது மருத்துவர் கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

தெலங்கானாவின் கூடுதல் போலீஸ் ஜெனரல் ஜித்தேந்திரா, இன்று அதிகாலை 3 மணியளவில் குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் 4 பேரும் போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று பிபிசியிடம் தெரிவித்தார்.

தற்போது மூத்த போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி முகாமையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் ஹைதராபாத்தில் தனது பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பியபோது 27 வயதான பெண் கால்நடை மருத்துவர், கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தை கண்டித்து நாடுமுழுவதும் பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.