ஹாங்காங் உள்ளாட்சித் தேர்தல்!

செவ்வாய் நவம்பர் 26, 2019

ஹாங்காங்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஜனநாயக ஆதரவு வேட்பாளர்கள் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். இந்தத் தேர்தல் முடிவு மூலம் சீனாவுக்கு எதிரான எதிர்ப்பு மனநிலை ஹாங்காங் மக்களிடம் பரவலாக உள்ளது என்பதை நிரூபித்துள்ளனர்.

இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தில் இருந்த ஹாங்காங் கடந்த 1997-ம் ஆண்டு விடுதலை பெற்றது. அதனைத் தொடர்ந்து சீனாவின் சிறப்பு நிர்வாக மண்டலமாக ஹாங்காங் இணைக்கப்பட்டது. சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள போதிலும், தன்னாட்சி பொருந்திய பிராந்தியமாகவே ஹாங்காங் விளங்கி வருகிறது.

ஹாங்காங்கை தங்கள் நாட்டின் ஒருபகுதியாக சீனா அங்கீகரித்த போதிலும், ஹாங்காங்கில் இதற்கு எதிர்ப்புக் குரல்கள் தொடர்ந்து எழுந்து கொண்டே வந்துள்ளன. சொல்லப்போனால் சீனாவோடு இணைந்தது முதலே ஹாங்காங்கில் சீன ஆக்கிரமிப்புக்கு எதிரான தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்தன.

கிரிமினல் குற்றவாளிகளை சீனாவுக்கும் தைவானுக்கும் நாடு கடத்தி விசாரிக்க ஏதுவாக ஒரு சட்டத்திருத்த மசோதாவை ஹாங்காங் நிர்வாகம் கடந்த ஜூன் மாதம் கொண்டு வந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.

ஹாங்காங்கில் ஆதிக்கம் செலுத்த சீனா மேற்கொள்ளும் மறைமுக முயற்சி இது எனக் கூறியும், இந்த மசோதாவை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும் ஹாங்காங் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. போலீஸாரின் அடக்குமுறைக்கு நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். எனினும், நாளுக்கு நாள் போராட்டம் வலுவடைந்து கொண்டே சென்றது.

இந்த சூழலில், சர்ச்சைக்குரிய இந்த மசோதா முழுவதுமாக திரும்பப் பெறப்படுவதாக ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லேம் அதிகாரபூர்வமாக அறிவித்தார். எனினும் ஹாங்காங்கில் போராட்டக்கார்கள், தங்களது பிற கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி போராட்டங்களைத் தொடர்ந்தனர்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த உள்ளாட்சித் தேர்தலில் (மாவட்ட கவுன்சில்) முன்னெப்போதும் இல்லாத அளவு சுமார் 3 மில்லியன் மக்கள் திரண்டு வந்து வாக்களித்துள்ளனர். இதன் காரணமாக 70% வாக்குகள் பதிவாகின.

மொத்தமுள்ள 241 இடங்களில் 201 இடங்களை ஜனநாயக ஆதரவு வேட்பாளர்கள் கைப்பற்றினர். இதன் மூலம் ஹாங்காங் உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பான்மை வெற்றியை ஜனநாயக ஆதரவு வேட்பாளர்கள் அடைந்துள்ளனர். உள்ளாட்சித் தேர்தலில் சீன ஆதரவு வேட்பாளர்கள் எதிர்பாராதவிதமாக தோல்வியைத் தழுவினர்.

சீன ஆதரவு வேட்பாளர்களின் இந்தத் தோல்வி அந்நாட்டின் கைப்பாவையாகச் செயல்படும் கேரி லேமுக்கு ஹாங்காங் மக்கள் அடித்திருக்கும் எச்சரிக்கை மணி என்று ஹாங்காங் அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

கேரி லேம்

இந்நிலையில் ஹாங்காங் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்வதாக ஹாங்காங் தலைவர் கேரி லேம் தெரிவித்துள்ளார்.

ஆனால், மாறாக சீனாவோ ஹாங்காங் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளைப் புறம் தள்ளியுள்ளது. ஹாங்காங் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் முற்றிலுமாக அந்நாட்டின் ஊடகங்களால் புறக்கணிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் முடிவுகள் தந்திரத்தின் வெளிப்பாடு என்றும் விமர்சித்துள்ளது.

நீண்ட போராட்டங்களுக்குப் பின் உள்ளாட்சித் தேர்தல் முடிவின் மூலம் ஹாங்காங் மக்கள் சீன எதிர்ப்பைத் தங்களது ஒருமித்த குரலில் வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர். இதனை சீனாவும், அதன் தலைவர்களும் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதைப் பொறுந்திருந்துதான் பார்க்க வேண்டும்.