ஹாங்காங் விவகாரத்தில் அவசியமற்ற தலையீடு....!

ஞாயிறு டிசம்பர் 01, 2019

ஹாங்காங் போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதல் தொடர்பாக விசாரிக்கப்பட வேண்டும் என்ற ஐ.நா. மனித உரிமை அமைப்பின் செயலாளருக்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.

ஹாங்காங்கைச் சேர்ந்தவர்கள் வேறு நாடுகளுக்குச் சென்று குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டால், அவர்களை அந்த நாடுகளிடம் ஒப்படைக்க வகை செய்யும் ஒப்படைப்பு சட்டம் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டு இதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

ஆனால், இந்த சட்டத்திருத்த மசோதாவுக்கு, பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் மக்கள் வீதிக்கு வந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.  நாடாளுமன்றத்தின் அருகே தீவிரமான போராட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 10 லட்சம் பேர் திரண்டனர்.
 

இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தியும், ரப்பர் குண்டுகளால் சுட்டும் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். இந்த வன்முறை மற்றும் காவல் துறை  நடவடிக்கையில் பலர் காயமடைந்தனர்.

 

போராட்டக்காரர்களில் ஒரு பகுதி

 


காவல் துறை  தங்கள் அடையாளங்களை கண்டுபிடித்துவிடக்கூடாது என்பதற்காக போராட்டக்காரர்கள் முகமூடிகளை அணிந்துகொண்டு போராடி வருகின்றனர். இப்படி முகமூடிகளை அணிந்து போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கையை ஹாங்காங் அரசு அறிவித்தது.

முகமூடிகளை அணிவது சட்ட விரோதம் என்ற அவசர சட்டம் தொடர்பான அறிவிப்பால் போராட்டக்காரர்களின் வேகம் பல மடங்கு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், போராட்டத்தை ஒடுக்குவதற்கு போலீசாரை வைத்து மக்கள் மீது தாக்குதல் நடத்திய ஹாங்காங் நிர்வாகத்தின் மீது பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என மனித உரிமை அமைப்பின் செயலாளர் மிச்சேல் பச்சலெட் வலியுறுத்தி இருந்தார்.

அவரது கருத்துக்கு சீனா நேற்று கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஜெனிவா நகரில் உள்ள சீனத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ’ஹாங்காங் விவகாரத்தில் மிச்சேல் பச்சலெட் தெரிவித்த கருத்து சீனாவின் சிறப்பு நிர்வாகப் பகுதியான ஹாங்காங்கின் உள்நாட்டு விவகாரத்தில் செய்யும் அவசியமற்ற தலையீடு ஆகும்.

இதுபோன்ற கருத்து கலவரக்காரர்களுக்கு ஊக்கமளிப்பதுடன் வன்முறை சம்பவங்கள் அதிகரிக்கவும் காரணமாக அமைந்து விடும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.