ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு அமைப்பை நிறுவும் சீனா

ஞாயிறு ஜூன் 21, 2020

சுய ஆட்சி அதிகாரம் பெற்ற ஹாங்காகில் தேசிய பாதுகாப்பு அமைப்பை சீனா நிறுவ உள்ளது.

சீனாவின் நேரடி கட்டுபாட்டில் தன்னாட்சி பெற்ற பகுதியாக இருக்கும் ஹாங்காங்கில் ஜனநாயகத்துக்கு ஆதரவாக நீண்ட காலமாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. 

ஹாங்காங்கில் குற்ற வழக்கில் கைது செய்யப்படுபவர்களை சீனாவுக்கு நாடுகடத்தும் சட்டத்திற்கு எதிராகவும், ஜனநாயக சீர்திருத்தங்களை வலியுறுத்தியும், சீனாவுக்கு ஆதரவான ஹாங்காங் அரசு பதவி விலக வலியுறுத்தியும் போராட்டங்கள் நடந்தன.

இந்த போராட்டங்களை அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் தூண்டி விடுவதாக சீனா குற்றச்சாட்டி வருகிறது.

இந்த நிலையில் ஹாங்காங்கின் சட்ட மற்றும் ஆட்சியமைப்பில் மாற்றங்கள் செய்வதற்கான, சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு மசோதா சீனா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

அந்த புதிய மசோதாவில், பிரிவினைவாதிகள் மற்றும் தேசவிரோதச் செயல்களைத் தடுப்பதற்கான கூடுதல் சட்ட அதிகாரிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. 

மேலும், வெளிநாட்டுத் தலையீடுகள், ஹாங்காங் நகரில் பயங்கரவாதத்தில் ஈடுபடுதல் ஆகியவற்றுக்கு எதிரான அம்சங்களும் அந்த மசோதாவில் இடம் பெற்றுள்ளன. 

மசோதா சீன நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதால் சட்டமாக உருவெடுத்துள்ளது. 

 

ஹாங்காங் போராட்டம்

 

நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவின் முக்கிய அம்சமாக ஹாங்காங் அரசின் அனுமதி இல்லாமல் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை சீனா நேரடியாக மேற்கொள்ளலாம். 

இந்த சட்டத்தால் ஹாங்காங்கின் சுதந்திர சுயாட்சிக்கு முடிவு கட்டப்படும் என்று ஜனநாயக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும், ஒரு நாடு

இரண்டு அமைப்பு என்ற சீன-ஹாங்காங்கின் ஆட்சி நடைமுறை இனி ஒரே நாடு, ஒரே அமைப்பு என்ற நிலைக்கு செல்கிறது.

இந்நிலையில், சீன பாராளுமன்றத்தில் நிறைவேறிய ஹாங்காங் பாதுகாப்பு மசோதா சட்ட வடிவம் பெற்று தற்போது அமல்படுத்தப்படும் நிலையில் உள்ளது. 

இதையடுத்து மக்கள் போராட்டங்கள் நடைபெறுவதை தடுக்கும் விதமாக ஹாங்காங்கில் சீனா தனது தேசிய பாதுகாப்பு அமைப்பை நிறுவ உள்ளது. 

சீன பாதுகாப்பு அமைப்பு ஹாங்காங்கில் அமைக்கப்படும் பட்சத்தில் தேசிய பாதுகாப்பு சட்டம் நடைமுறைக்கு வரும் போது ஏற்படும் போராட்டங்கள் அனைத்தும் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

போராட்டக்காரர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டு சிறையில் தள்ளப்படலாம். இதனால், ஹாங்காங்கில் கூடிய விரைவில் மீண்டும் சீனாவுக்கு எதிராக மிகப்பெரிய அளவிலான மக்கள் போராட்டம் வெடிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.