ஹிருணிகா மற்றும் மைத்திரி விக்ரமசிங்கவின் பெண் விடுதலை

வெள்ளி ஜூலை 01, 2022

ரணில் விக்ரமசிங்க அண்மையில் தனது மாமனாரின் பத்திரிகையான டெய்லி மிரரிடம் அற்புதமான கருத்தொன்றை வெளியிட்டிருந்தார்.

கொழும்பு 7 பிரதேசத்தில் 5 ஆம் ஒழுங்கையில் உள்ள தனது வீட்டை முற்றுகையிட சென்றிருந்த ஹிருணிகா பிரேமச்சந்திரவை சமூக ஊடகங்களில் அவமானம் செய்ய வேண்டாம் என ரணில் கூறியிருந்தார்.

தனது வீட்டை முற்றுகையிட சென்ற ஹிருணிகா உட்பட பெண்களை ரணில் பொலிஸாரை பயன்படுத்தி துன்புறுத்தினார். பொலிஸார் பலவந்தமாக ரணிலின் வீட்டுக்கு பாதுகாப்பு வழங்குவதில்லை.

நாட்டின் ஜனாதிபதி அல்லது பிரதமரின் வீட்டுக்கு எதிரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடக்கின்றது என்பதை அறிந்தால், ஒன்றில் அதனை மேற்கொள்ள இடமளித்து விட்டு அமைதியாக இருப்பார்கள் அல்லது அதனை அடக்க பொலிஸாரை அழைப்பார்கள்.

ரணில் இரண்டாவதை தெரிவு செய்தார். இதனை தெரிவு செய்த ரணில், வேறு யாருமல்ல, தெற்காசியாவில் பெண்களின் விடுதலை, பெண்களுக்கு அரசியலில் ஈடுபடும் உரிமை, பெண்களின் தலைமைத்துவம், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பற்றி விரிவுரை வழங்கும் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவின் கணவர்.

சாதாரணமாக ஐக்கிய தேசியக்கட்சியின் கொள்கைகள் உருவாக்கப்படும் போது, பெண்கள் சம்பந்தமான கொள்கைகளை மைத்திரியே உருவாக்குவார். இலங்கை அரசியல் கட்சிகளின் கொள்கை அறிக்கைகளில் மைத்திரியின் தலையீடு காரணமாகவே முன்னுரிமை கிடைத்தது.

இதன் காரணமாகவே ஐக்கிய தேசியக்கட்சியின் கொள்கை அறிக்கையில் பெண்களுக்கான தனியான பகுதி உள்ளடக்கப்பட்டது. 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் அறிக்கைக்கு மைத்திரி யோசனை ஒன்றை முன்வைத்தார்.

கணவன், தனது மனைவியிடம் பாலியல் விருப்பு வெறுப்புகளை நிறைவேற்றிக்கொள்ளும் போது மனைவி அதனை நிராகரித்து, கணவனுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்யும் உரிமையை பாதுகாக்கும் சட்டத்திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்ற யோசனையை முன்வைத்தார்.

கொள்கை அறிக்கையை தயாரிக்கும் குழுவினர் இதற்கு எதிர்ப்பை தெரிவித்தனர். இது மேற்குலக நாடுகளுக்கு பொருந்துமே தவிர இலங்கைக்கு பொருந்தாது எனக் கூறினர்.

அத்துடன் ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழுவில் பெண்களின் விடுதலைக்கான குரல் கொடுக்கும் பெண்களை உள்ளடக்க மைத்திரி, ரணிலை தூண்டினார்.

2015 ஆம் ஆண்டு ரணில் பிரதமராக பதவியேற்ற பின்னர் மைத்திரிக்கு பெண்களின் விடுதலை சம்பந்தமாக விரிவுரையற்ற உலகில் பல நாடுகளிடம் இருந்து அழைப்பு கிடைத்தது.

அவர் எழுதிய பெண்கள் உரிமைகள் தொடர்பான நூல்களுக்கு விருதுகளும் கிடைத்தன. மைத்திரி விக்ரமசிங்க, பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் செயற்பாட்டாளர் மாத்திரமல்ல. 

களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் கூட. மேலும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தின் உறுப்பினராகவும் இருக்கின்றார். 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி மகிந்த அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்பட்ட ஊர்வலத்திலும் கலந்துக்கொண்டார்.

ரணில் பிரதமராக பதவியேற்றதை மைத்திரி எதிர்த்தாரா?

இந்த நிலையில், கடந்த மே மாதம் ரணில் விக்ரமசிங்கவை கோட்டாபய ராஜபக்ச பிரதமராக நியமித்ததை கண்டித்து அறிக்கையை வெளியிட்டது.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம். தேர்தலில் தோல்வியடைந்து தேசிய பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவான ஒருவருக்கு பிரதமர் பதவியை வழங்குவது தர்மீக விரோத செயல் என அந்த சங்கம் கூறியிருந்தது.

மைத்திரி விக்ரமசிங்க விரிவுரையாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் என்ற வகையில் அந்த அறிக்கை ஏற்றுக்கொண்டார?. அது தெரியாது. எனினும் ரணில் விக்ரமசிங்க, பிரதமராக பதவியேற்கும் நிகழ்வில் மைத்திரி கலந்துக்கொண்டார்.

ரணில் 2020 ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், மைத்திரி சுகவீனமுற்று வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற போது, மகிந்த, ஷிரந்தி, நாமல் ஆகியோர் அவரை பார்க்க வைத்தியசாலைக்கு சென்றிருந்தனர்.

இதன் போது ரணில் தேசிய பட்டியலில் நாடாளுமன்றத்திற்கு வர வேண்டும் என மகிந்த கூறிய போது, மைத்திரி அதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டார் என ரணிலின் மாமனாராது பத்திரிகையான சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

மைத்திரியின் எதிர்ப்பை மீறி ரணில் நாடாளுமன்றத்திற்கு வந்தாரா?. இது அவர்கள் இருவருக்கு மட்டுமே தெரியும்.

ஜே.ஆரின் தீர்மானத்தை எதிர்த்த எலினா ஜெயவர்தன

1988 ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜெயவர்தன இரண்டாவது முறையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தீர்மானித்த போது அதனை கடுமையாக எதிர்த்தவர் அவரது மனைவியான எலினா ஜெயவர்தன.

மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதியாக பதவிக்கு வர தேவையான வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றங்களை செய்ய ஜே.ஆர். குழு ஒன்றையும் நியமித்திருந்தார்.

எனினும் எலினா அழுத்தங்களை கொடுத்து அதனை தடுத்து நிறுத்தினார். ரணசிங்க பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துமாறு எலினா ஜெயவர்தனவே ஜே.ஆருக்கு அழுத்தங்களை கொடுத்தார். 

எலினா ஜெயவர்தனவை போல், அரசியலில் இருந்து விலகுமாறும் தேசிய பட்டியலில் நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டாம் என ரணிலுக்கு அழுத்தங்களை கொடுக்க மைத்திரிக்கு முடிந்ததே முடியாமல் போனதோ தெரியவில்லை.

ஹிருணிகா உட்பட பெண்களுக்கு எதிரான நடவடிக்கையை மைத்திரி தடுத்து நிறுத்தி இருக்கலாம்

ஆனால், ஹிருணிகா அவர்களின் வீட்டை முற்றுகையிட்ட போது, பொலிஸாரை வர வேண்டாம் என்று கூற அவருக்கு முடிந்திருக்கும். பொலிஸார், ஹிருணிகாவை துன்புறுத்திய போது, அதனை அவர் தடுத்து நிறுத்தி இருக்கலாம்.

ஏன் அவர் அப்படி செய்யவில்லை என்பதை, இலங்கையின் பெண்கள் அமைப்புகள் மைத்திரி விக்ரமசிங்கவிடம் கேட்க வேண்டும். இலங்கையில் பெண்களின் விடுதலை பற்றி பேசும் பல பெண்கள் அமைப்புகள் கொழும்பை மையமாக கொண்ட அமைப்புகள்.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதி பெண்கள் அமைப்புகள் மைத்திரி விக்ரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தன. இந்த கடிதம் கொழும்பு டெலிகிராப் இணையத்தளத்தில் வெளியாகியது.

நாட்டின் மிகப் பெரிய கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியை அழிக்க வேண்டாம் என ரணிலுக்கு அழுத்தங்களை கொடுக்குமாறு அந்த கடிதத்தில் கோரப்பட்டிருந்தது.

பெண்கள் அரசியலில் ஈடுபடும் உரிமை பற்றி பேசும் மைத்திரி விக்ரமசிங்க, பெண்கள் அரசியலில் ஈடுபட இருக்கும் ஐக்கிய தேசியக்கட்சியை அழிக்க வேண்டாம் என தனது கணவருக்கு அழுத்தம் கொடுக்குமாறு கூறப்பட்டிருந்தது.

 

மைத்திரி விக்ரமசிங்க அரணிலில் ஈடுபடாத அரசியல்வாதியின் மனைவி என்ற கதை உண்மையல்ல. 2015-2019 ஆம் ஆண்டு வரையான அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளில் மாற்றங்கள் செய்வது சம்பந்தமான விடயங்களில் அழுத்தங்களை கொடுத்த சந்தர்ப்பங்கள் இருந்தன.

ரணில் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு செல்வதை தடுக்க முடியாது போயிருக்கலாம் என்று எண்ணினாலும் ஹிருணிகா உட்பட பெண்களுக்கு எதிராக பொலிஸாரை பயன்படுத்தி துன்புறுத்தும் போது அதனை தடுக்க மைத்திரி விக்ரமசிங்கவுக்கு வாய்ப்பிருந்தது.

ஹிருணிகாவை கிண்டல் செய்யும் வகையில் சமூக ஊடகங்களில் அவரை அவமானப்படுத்த வேண்டாம் என ரணில் கூறியிருக்கலாம். இந்த விடயத்தில மைத்திரி விக்ரமசிங்கவுக்கு பெண்களின் விடுதலையை விட தனது கணவர் பெரிதாக தோன்றியிருக்கலாம். அதில் தவறும் இல்லை.

கட்டுரையாளர் -உபுல் ஜோசப் பெர்னாண்டோ

மொழியாக்கம் – ஸ்டீபன் மாணிக்கம்