ஹபீஸ் சயீதுக்கு 11 ஆண்டுகள் சிறை!

புதன் பெப்ரவரி 12, 2020

பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டிய வழக்குகளில் தொடர்புடைய ஹபீஸ் சயீதுக்கு 11 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இந்தத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்  பயங்கரவாதி ஹபீஸ் சயீத். இவர் பாகிஸ்தானில் ஜமாத் உத் தவா என்ற அமைப்பின் தலைவராக செயல்பட்டு வருகிறார்.  

பயங்கரவாத செயல்களுக்கான நிதி பரிமாற்றத்தை தடுக்க பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென நிதி நடவடிக்கை  பணிக்குழு தொடர்ந்து அழுத்தம் கொடுத்துவந்தது. 

இதையடுத்து பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டியதாக ஹபீஸ் சயீத் மற்றும்  அவரது அமைப்பை சேர்ந்த மேலும் 12 பேரை பாகிஸ்தான் கடந்த ஜூலை 17-ம் தேதி கைது செய்தது.  ஹபீஸ் சையத் மற்றும் அவரது  கூட்டாளிகள் பயங்கரவாத செயல்களுக்கு நிதி வழங்கி பல சொத்துக்களை வாங்கியுள்ளனர். அந்த  சொத்துக்கள் மூலம் மேலும் பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டியுள்ளதற்கான ஆதாரங்களை பயங்கரவாத தடுப்பு போலீசார்  சேகரித்து உள்ளனர் கூறப்பட்டது.

லாகூரில் உள்ள பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் இவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை  நடைபெற்று வந்தது. ஹபீஸ் சையது மீது மொத்தம் இரண்டு வழக்குகள் தொடரப்பட்டன. கடந்த டிசம்பர் மாதம் தொடங்கிய இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. 

இந்நிலையில், அனைத்து தரப்பு  வாதங்களும் முடிவடைந்த நிலையில் இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டிய  வழக்குகளில் தொடர்புடைய ஹபீஸ் சயீதுக்கு ஐந்தரை ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து  உத்தரவிடப்பட்டது. இரண்டு வழக்குகளிலும் ஒரே தண்டனை என்பதால் மொத்தம் 11 ஆண்டுகள் அவருக்கு சிறை தண்டனை  விதிக்கப்பட்டுள்ளது.