இல்லாத ஊருக்கு வழிகாட்டிய கதையாக...

வியாழன் நவம்பர் 14, 2019

வணக்கம் குஞ்சுகள்.

எல்லோரும் கொதிச்சுப் போய் நிற்கிறியள் எண்டது விளங்குது. அது தான் குசலம் விசாரிக்காமலே நேரடியாகவே விசயத்துக்கு வருவம் என்று முடிவு செய்தனான்.

 

எனக்குத் தெரியும் பிள்ளையள், குசலம் விசாரிக்க இல்லை என்கிறதுக்காக நீங்கள் ஒரு நாளும் கோவிக்கப் போறதில்லை என்று. என்ன இருந்தாலும் ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்று அந்த காலத்திலை சொல்கிறது போன கிழமை சரியாகத் தான் நடந்திருக்குது.

 

பல்கலைக் கழக மாணவர்களின் ஏற்பாட்டில் ஒன்று கூடி சிங்கள சனாதிபதி வேட்பாளர்மாருக்கு பதின்மூன்று அம்சக் கோரிக்கைகளை முன்வைக்கப் போகிறதாகக் கொஞ்ச நாளைக்கு முதல் தம்பட்டம் அடிச்ச ஐந்து தமிழ்க் கட்சிக்காரமும் இப்ப நவக்கிரகங்கள் மாதிரி ஆளாளுக்கு தங்கடை பின்னழகைக் காட்டிக் கொண்டு நிற்கீனம்.

 

எல்லோருக்கும் முதலிலேயே தெளிவாகத் தெரியும். உந்தத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவும், மேற்குலகமும் விரும்புகிற ஐக்கிய தேசியக் கட்சியின்ரை வேட்பாளர் சஜித் பிரேமதாசாவைத் தான் ஆதரிக்கும் என்று. இதை விளங்குறதுக்கு என்ன ரொக்கட் விஞ்ஞானமே கற்க வேண்டும்?

 

111

 

அத்திப் பழத்தைப் பிட்டுப் பார்த்தால் அத்தனையும் புழு என்கிற மாதிரி இருக்கிற எங்கடை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்காரர் என்ன கூத்தடிப்பீனம் என்று எங்களுக்கு என்ன தெரியாதே பிள்ளையள்?

 

முதலில் தமிழரசுக் கட்சிக்காரர் ஒன்று கூடிக் கூட்டம் நடத்திச்சீனம். கொஞ்ச நேரம் கழிச்சு செய்தியாளர்மாரைக் கூப்பிட்டு பேசேக்குள்ளை எங்கடை சுமந்திரன் மாத்தையா சொன்னார், தாங்கள் சஜித் பிரேமதாசாவுக்குத் தான் ஆதரவு கொடுக்கப் போகீனம் என்று. பிறகென்ன? பேசாமல் இலங்கை தமிழ் அரசுக் கட்சி என்ற பெயரை இலங்கை அரசுக் கட்சி என்று மாற்றிப் போட்டு இருக்கலாம். பொருத்தமாக இருக்கும்.

 

இப்ப நாலு நாள் கழிச்சு தாங்களும் சஜித்தைத் தான் ஆதரிக்கப் போகீனம் என்று புளொட்டும், ரெலோவும் அறிவிச்சுப் போட்டுது. பிறகென்ன? இந்த மும்மூர்த்திகளும் சேர்ந்தது தானே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. பேசாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தங்களின்ரை பெயரை ஐக்கிய தேசியக் கூட்டமைப்பு என்று மாற்றிக் கொள்ளலாம்.

 

அந்தக் காலத்தில் இருந்தே புளொட்டை சதிக்குழு என்று தான் எங்கடை தம்பி அன்ரன் பாலசிங்கம் குறிப்
பிடுகிறவர். அதாலை அவையள் வேண்டும் என்றால் சதி என்று தமிழில் பொருள்படும் புளொட் என்ற ஆங்கிலப் பெயரை அப்படியே வைச்சிருக்கலாம். அது எப்பவும் பொருத்தமாக இருக்கும். ஆனால் உந்த ரெலோக்காரருக்குத் தான் என்ன பெயர் வைக்கலாம் என்று யோசிச்சுக் கொண்டிருக்கிறேன்.

 

உங்களுக்கு ஏதாவது ஐடியாக்கள் இருந்தால் தவறாமல் எனக்குத் தெரியப்படுத்துங்கோ என்ன?

 

உதுக்குள்ளை சஜித் பிரேமதாசாவின்ரை தேர்தல் விஞ்ஞாபனத்தில் சமஸ்டித் தீர்வு இருக்குது என்று எங்கடை சுமந்திரன் மாத்தையா கதை விடுகிறார். சஜித்தின்ரை விண்ணாணம் வெளிவருகிறதுக்கு முதலே தாங்கள் முன்
வைத்த பதின்மூன்று அம்சங்களில் பெரும்பாலானவை அதில் இருக்குது என்று விண்ணாணம் கதைச்சவர் தானே எங்கடை சுமந்திரன் மாத்தையா!

 

அதுவும் அவர் சொன்னவர், தங்கடை பதின்மூன்று அம்சக் கோரிக்கைகளில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் அப்படியே இல்லா விட்டாலும் அதன் சாராசம்சம் சஜித்தின்ரை விண்ணாணத்தில் இருக்குமாம்.

 

எனக்கு வருகிற கோபத்துக்கு...

 

ஒன்று சொல்கிறேன் பிள்ளையள். சிங்களவன் எந்தக் காலத்திலும் தமிழனுக்கு சமஸ்டித் தீர்வு தர மாட்டான்.

 

சமஸ்டி தாறன் என்று தந்தை செல்வாவைப் பேய்க்காட்டி, மாவட்ட சபைகளுக்கும் குறைவான ஒப்பந்தம் ஒன்றை அவரோடு செய்து பிறகு அதைக் கிழிச்செறிஞ்ச பண்டாரநாயக்காவாக இருந்தாலும் சரி, அவருக்குப் பிறகு இன்னொரு ஒப்பந்தம் செய்து அதைக் கிழிச்செறிஞ்ச டட்லி சேனநாயக்காவா இருந்தாலும் சரி, பிறகு வந்த எவனாக இருந்தாலும் சரி தமிழனுக்கு சமஸ்டித் தீர்வு தருகிறதில் இதய சுத்தியோடு நடந்து கொண்டதில்லை.

 

அதிலையும் உந்த ஐக்கிய தேசியக் கட்சிக்காரங்கள் இருக்கிறாங்கள் பாருங்கோ? அவங்களைப் போல சமஸ்டி தருகிறம் என்று சொல்லித் தமிழர்களை ஏமாற்றுகிறதிலை விற்பன்னர்கள் வேறு ஆரும் இல்லை.

 

அதை விளங்கித் தான் எங்கடை தந்தை செல்வா கடைசியில் சமஸ்டியும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின்ரை பெயரைத் தமிழர் விடுதலைக் கூட்டணி என்று மாற்றிப் போட்டு, தனித் தமிழீழ அரசுக்கான வட்டுக்கோட்டைப் பிரகடனத்தை நிறைவேற்றினவர்.

 

சிங்களவன் தமிழனுக்கு ஒருக்காலும் சமஸ்டியும் தர மாட்டான், ஒரு மண்ணாங் கட்டியும் தர மாட்டான் என்பது எங்கடை தம்பி பிரபாகரனுக்கும் நல்லாத் தெரியும் பிள்ளையள்.

 

2002ஆம் ஆண்டு ரணில் மாத்தையா சமஸ்டி பற்றி எங்கடை தம்பி அன்ரன் பாலசிங்கத்தோடு நோர்வேயில் கதைக்கும் பொழுதே ஏதோ செப்படி வித்தை காட்டுகிறதுக்குத் தான் ரணில் சமஸ்டி பேசுகிறார் என்று மனுசனுக்கு விளங்கிப் போட்டுது.

 

அது தான் மூன்று வருசம் கழிச்சு 2005ஆம் ஆண்டு இலண்டன் அலெக்சாண்டரா மாளிகையில் நடந்த மாவீரர் நாளில் உரையாற்றும் போது, சமஸ்டி என்கிறது ஒரு மாயை என்று தம்பி பாலசிங்கம் அடிச்சுச் சொன்னவர்.

 

உங்களுக்காக அன்றைக்கு அவர் சொன்னதை அப்படியே இதிலை பதிவு செய்கிறேன். வடிவாக, ஆறுதலாக வாசிச்சுப் பாருங்கோ:

 

‘‘எங்கடை கன பேருக்குக் கோபம், ஏன் ரணில் ஐயாவுக்குப் போட்டிருந்தால், இப்ப வந்திருந்தார் என்றால் நீங்கள் பேசப் போயிருக்கலாமே என்று. அப்பிடிச் சொல்கிற ஆட்களும் இங்கே இருக்கீனம்.

 

அவன் ஐயா, அவன் பயங்கர நரி. இவன் ராஜபக்சா பரவாயில்லை. அது ஒரு பயங்கர நரி. எங்களுக்குத் தானே தெரியும்.

 

ஏனென்றால் நான் உந்தப் பேச்சுவார்த்தையில் இழுபட்டுக் களைச்சுப் போன மனுசன். இவையளை எல்லாம்... பிரேமதாசா காலத்தில் இருந்தே ரணிலை எனக்குத் தெரியும். நான் பதினேழு வயதில் பத்திரிகையாளராகி, அந்தக் காலத்தில் இருந்தே இந்த அரசியல்வாதிகளோடு பழகினனான்.

 

அப்ப இவையளின்ரை சூத்திரங்கள், இவையின்ரை ஜில்மால்கள், இவையின்ரை மசவாசுகள் எல்லாம் எங்களுக்குத் தெரியும். தலைவருக்குத் தெரியும். ஆனால் சில பேர் இருக்கீனம் என்னவென்றால் அவன் பரவாயில்லை, அவன் என்னவோ பெடரல் தாறன் என்கிறான்.

 

பெடரலிசத்தைப் பற்றி ஒன்று சொல்ல வேண்டும். ஐம்பத்தேழு வருசமாக பெடரலிசம் கதைச்சிருக்கிறம். பெடரலிசம் என்றால் எங்களுக்கு என்ன புது விசயமா ஐயா? செல்வநாயகம் காலத்தில் இருந்து பெடரல், பெடரல் என்று தானே இடறல் பட்டுக் கொண்டிருக்கிறம். பெடரலும் தர மாட்டான். அது எங்களை பெடறல் என்ற மாயையைக் காட்டி ஏமாற்றுகிற வித்தை.’’

 

இதுக்குள்ளை என்னவென்றால் ஒற்றையாட்சிக்குள் சமஸ்டி என்று கொஞ்ச நாளைக்கு முதல் எங்கடை சம்பந்தன் ஐயா புலுடா விட்ட மாதிரி, சஜித்தின்ரை தேர்தல் விஞ்ஞாபனத்துக்குள் சமஸ்டி ஒளிஞ்சிருக்கிறதாக இப்ப எங்கடை சுமந்திரன் மாத்தையா ரீல் விடத் தொடங்கியிருக்கிறார்.

 

111

 

ஆகட்டும் போகட்டும், அவரக்காய் காய்க்கட்டும், தம்பி பிறக்கட்டும், அவனுக்குக் கலியாணம் ஆகட்டும், உன்னை கூப்பிடுகிறேன் என்று சொல்கிற மாதிரித் தான் சமஸ்டி, சமஸ்டி என்று 2001ஆம் ஆண்டில் இருந்தே எங்கடை ரணில் மாத்தையா ரீல் விட்டுக் கொண்டிருக்கிறார்.

 

அதைத் தூக்கிப் பிடிச்சுக் கொண்டு, சஜித்தின்ரை விண்ணாணத்திற்குள் சமஸ்டி ஒளிஞ்சு கிடக்குது என்று சுமந்திரன் மாத்தையா சொல்கிறது, இல்லாத ஊருக்கு வழிகாட்டுகிற மாதிரித் தான் இருக்குது பிள்ளையள்.
ஆனாலும் உதை விளங்கப்படுத்தப் போனால் எங்களை முட்டாள் ஆக்கிப் போடுவானுகள்.

 

ஏற்கனவே உந்த ஐந்து கட்சிகளின் கூட்டத்தால் ஒன்றும் நடக்கப் போவதில்லை என்று விளங்கித் தான் தம்பி கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், அவரின்ரை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் கூட்டத்தை வெளிநடப்புச் செய்து கொண்டு வெளியேறிச் சென்றவையள்.

 

இருந்தாலும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிப் போயிருக்கலாம் என்று அந்த நேரத்திலை கதைச்ச எங்கடை ஆட்கள் இப்ப முழுசிக் கொண்டு நிற்கீனம்.

 

ஆடையில்லா ஊரில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன் என்கிற மாதிரித் தான் அவையளை எங்கடை ஆட்களில் கன பேர் பார்த்தவையள்.

 

அப்படித் தான் உந்த சஜித் பிரேமதாசாவின்ரை விண்ணாணத்தையும், அதுக்கு சுமந்திரன் கொடுக்கிற வியாக்கியானத்தையும் எதிர்த்து நாங்கள் கதைச்சால் எங்களைக் கொஞ்சப் பேர் முறைச்சுக் கொண்டு பார்ப்பீனம்.

 

ஏதோ, தமிழ்ச் சனம் மொக்குத் தனமாக நடந்து கொள்ளாமல் உந்தத் தேர்தலைப் புறக்கணித்துத் தங்களின் அரசியல் அபிலாசைகளை உலகத்திற்கு இடித்துரைக்கிறதுக்கு முயற்சி செய்தால் சரி.

 

வரட்டே?

 

நன்றி: ஈழமுரசு