ஈழமுரசின் மூத்த ஊடகவியலாளர் மீதான படுகொலை முயற்சி – ஒப்புக் கொண்ட சிங்கள உளவாளி!

ஈழமுரசின் மூத்த ஊடகவியலாளர் மீது 18.09.2014 அன்று பிரான்சில் மேற்கொள்ளப்பட்ட படுகொலை முயற்சியை தாமே ஏற்பாடு செய்ததாக சிங்கள உளவாளி ஒருவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அமுதன் என்றழைக்கப்படும் பார்த்தீபன் எனும் பெயருடைய குறித்த நபர் பிரித்தானியாவில் அகதி என்ற போர்வையில் வசித்து வருகின்றார்.
இன்று வைபர் குழுமம் ஒன்றில் வெளியிட்ட ஒலிப்பதிவிலேயே இவ்வாறு குறித்த சிங்கள உளவாளி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிக்களப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளராக விளங்கிப் பின்னர் சிங்கள அரசின் கையாளாக மாறிய விநாயகம் என்பவரைப் பற்றி எழுதியமைக்காக இப்படுகொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும், இப்படுகொலை முயற்சிக்கும் தமிழகத்தில் வசிக்கும் நாம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் பங்கு இருந்ததாகவும் தனது வாக்குமூலத்தில் இவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு குறித்த ஊடவியலாளரின் விரலை வெட்டப் போவதாகவும், தலையில் கல்லைப் போட்டுக் கொல்லப் போவதாகவும் அமுதன் என்ற குறித்த சிங்கள உளவாளி தனது வாக்குமூலத்தில் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பான முறைப்பாடு காவல்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விநாயகம் என்ற நபரின் மனைவி, பிள்ளைகளைப் பணயக் கைதிகளாக வைத்திருந்து அவரைப் பயன்படுத்தி 2015ஆம் ஆண்டு வரை புலம்பெயர் தேசங்களில் கோத்தபாய ராஜபக்ச குழப்பம் விளைவித்தமை, 2015ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியில் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்ட பொழுது அம்பலமாகியமை குறிப்பிடத்தக்கது.