இலங்கை இரண்டு தேசங்களாக பிரிக்கப்பட வேண்டும்....!

வியாழன் டிசம்பர் 05, 2019

இலங்கை இரண்டு தேசங்களாக பிரிக்கப்பட வேண்டும் என கொன்சர்வேற்றிவ் விஞ்ஞாபனத்தில் முன்மொழியப்படவில்லை என்று அக்கட்சியின் பிரதி தலைவர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய நாடாளுமன்ற தேர்தலுக்காக கொன்சர்வேற்றிவ் கட்சி முன்வைத்துள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கை இரண்டு தேசங்களாக பிரிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக டுவிட்டரில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

இந்த விடயம் தொடர்பாக இன்று டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள கொன்சர்வேற்றிவ் கட்சி பிரதி தலைவர்,

இலங்கை இரண்டு தேசங்களாக பிரிக்கப்பட வேண்டும் என கொன்சர்வேற்றிவ் விஞ்ஞாபனத்தில் முன்மொழியப்படவில்லை. நல்லிணக்கம், ஸ்திரத்தன்மை மற்றும் நீதியை அடைவதற்கான சர்வதேச முயற்சிகளுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவளிப்போம். இருதேசம் தொடர்பான கூற்று மத்திய கிழக்கு நாட்டுக்கு மட்டுமே தொடர்புடையது – என பதிவிட்டுள்ளார்.

இதேவேளை, இருதேசத் தீர்வுக்கு ஆதரிப்போம் என விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டது மத்திய கிழக்கிற்கு மட்டுமே பொருந்தும், சைப்ரஷ் அல்லது இலங்கைக்கு பொருந்தாது என்று கொன்சர்வேற்றிவ் கட்சியின் மூத்த உறுப்பினர் தெளிவுபடுத்தினார் என்று இலங்கை வெளிவிவகார அமைச்சும்   அறிக்கை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையை வெளியிட முன்னர் “இலங்கை இரு தேசத் தேவைப்பாட்டை கொண்ட நாடு என்று பிரித்தானியாவின் கொன்சர்வேற்றிவ் கட்சி தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது” என்று பிரித்தானியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம் அறிக்கை வெளியிட்டமையும் குறிப்பிடத்தக்கது.