இலங்கைக்கு திரும்பிய தமிழ் அகதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்

ஞாயிறு ஜூலை 12, 2020

தமிழகம்/ இலங்கை: ராமேஸ்வரத்தின் தங்கச்சிமடம் பகுதியிலிருந்து கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் வெளியேறிய தமிழ் அகதி ஒருவர் சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள அவர், காங்கேசன்துறை கடற்படைத் தளத்தில் கொரோனா சூழல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 

யாழ்ப்பாணத்தின் வேலணை பகுதியை சேர்ந்தவராக அறியப்படும் 38 வயதுடைய நபரே கடற்படைத் தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை வட மாகாண சுகாதார சேவைகளின் மருத்துவர் ஆறுமுகன் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முதல்கடட்டமாக நடத்தப்பட்ட பரிசோதனையில் இந்நபருக்கு தொற்று இல்லை என உறுதிச்செய்யப்பட்டுள்ளது. இருந்த போதிலும், இந்நபர் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருப்பார் என்றும இவருக்கு 8வது மற்றும் 14வது நாளில் மீண்டும் PCR சோதனை மேற்கொள்ளப்படவுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. 

இந்த சூழலில், இந்நபர் தமிழகத்திலிருந்து படகு மூலம் வெளியேற முகவராக செயல்பட்ட நபர் தற்போது காய்ச்சலுக்கு உள்ளாகியுள்ளதாக இலங்கை ஊடகமான நியூஸ் பர்ஸ்ட் செய்தி வெளியிட்டிருக்கிறது. 

கொரோனா பெருந்தொற்று சூழல் காரணமாக இந்தியா- இலங்கை இடையேயான விமானப் போக்குவரத்து முழுமையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. அதே போல், தமிழகத்தில் உள்ள சில ஈழத்தமிழ் அகதி முகாம்களில் பலருக்கு தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் இவ்விவகாரம் முக்கியத்துவமிக்கதாகப் பார்க்கப்படுகின்றது.