இலண்டனில் தமிழீழ தேசியக் கொடி, தலைவரின் படம் ஆகியவற்றை அகற்றிய காவல்துறை – தப்பியோடிய நாடுகடந்த அரசாங்கம்!

வியாழன் நவம்பர் 26, 2020

இலண்டன் வெம்பிளி பகுதியில் இயங்கும் மலர் பல்பொருள் அங்காடியில் பறக்க விடப்பட்டிருந்த தமிழீழத் தேசியக் கொடியும், தேசியத் தலைவரின் படமும் பிரித்தானியக் காவல்துறையினரால் அகற்றப்பட்டுள்ளது.

 

கடந்த 23.11.2020 திங்கட்கிழமை காலை மலர் பல்பொருள் அங்காடிக்கு சென்ற நான்கு பிரித்தானிய காவல்துறைக் காவலர்கள், குறித்த வணிக நிலையில் தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றின் கொடி பறக்க விடப்பட்டிருப்பதாகத் தமக்கு முறைப்பாடு கிடைத்திருப்பதாகத் தெரிவித்ததோடு, கடையின் வெளிப்புறத்தில் பறக்க விடப்பட்டிருந்த தமிழீழ தேசியக் கொடியையும், கடையின் உட்புறத்தில் வைக்கப்பட்டிருந்த தமிழீழ தேசியத் தலைவரின் படத்தையும் அகற்றுமாறு உத்தவிட்டனர்.

 

எனினும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு விட்டதாகக் கடைப் பணியாளர்கள் தெரிவித்த பொழுது, அதை நிராகரித்த பிரித்தானிய காவல்துறைக் காவலர்கள், அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை என்றும், தமிழீழ தேசியக் கொடியையும், தமிழீழ தேசியத் தலைவரின் படத்தையும் அகற்றத் தவறினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.

 

இதனையடுத்து தமிழீழ தேசியக் கொடியையும், தமிழீழ தேசியத் தலைவரின் படத்தையும் அகற்ற வேண்டிய நிலை அங்கிருந்த பணியாளர்களுக்கு ஏற்பட்டதாக மலர் பல்பொருள் அங்காடியில் உப வாணிப நிலையம் ஒன்றை நடத்தும் வணிகர் ஒருவர் சங்கதி-24 இணையத்தின் பிரித்தானிய செய்தியாளருக்குத் தெரிவித்துள்ளார்.

 

இதனால் தற்பொழுது மலர் பல்பொருள் அங்காடியில் வெறும் சிவப்பு, மஞ்சள் கொடிகளும், அலங்காரகளுமே பறக்க விடப்பட்டுள்ளன.

 

இது இவ்விதம் இருக்க இவ்விவகாரம் தொடர்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற கும்பலின் அமைச்சர் என்று கூறிக் கொள்ளும் ஒருவரிடம் மலர் பல்பொருள் அங்காடியின் வாடிக்கையாளர் ஒருவர் இன்று மதியம் நேரில் கண்டு வினவிய பொழுது, நிலை தடுமாறிய அவர், தான் ஓரிடத்திற்கு அவசரமாகச் செல்ல இருப்பதாகக் கூறித் தப்பியோடியுள்ளார்.

 

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடிப்பதற்குப் பிரித்தானிய உள்துறை அமைச்சு கூறும் காரணங்கள் வலுவானவை அல்ல என்று தடைசெய்யப்பட்ட அமைப்புக்களுக்கான மேன்முறையீட்டு ஆணையம் கடந்த 21.10.2020 அன்று தீர்ப்பு வழங்கியிருந்தது.

 

எனினும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குமாறு பிரித்தானிய உள்துறை அமைச்சிற்கு அவ் ஆணையம் உத்தரவிடவில்லை. அதனால் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை பிரித்தானியாவில் தொடர்கின்றது.

 

உண்மை இப்படி இருக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை பிரித்தானியாவில் நீங்கி விட்டதாகப் போலிப் பரப்புரைகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற கும்பல் மேற்கொண்டு வந்தது.

 

இதனை நம்பி நடந்த பொதுமக்கள் தற்பொழுது சட்ட நெருக்கடிகளுக்கு ஆளாகி வருகின்றமை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற கும்பலின் நயவஞ்சக அரசியலை அம்பலப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.