ஈழத் தமிழ் மக்களை அழித்தொழிப்பதன் மூலம் சிங்கள மக்கள் தாம் மட்டும் வாழ நினைக்கிறார்களா?

வெள்ளி பெப்ரவரி 08, 2019

ஈழத் தமிழ் மக்களை அழித்தொழிப்பதன் மூலம் சிங்கள மக்கள் தாம் மட்டும் வாழ நினைக்கிறார்களா என்பதுதான் புரியவில்லை.

எதற்கெடுத்தாலும் தமிழ் மக்களுக்குக் கெடுதிசெய்வதையே தொழிலாகக் கொண்டுள்ள பேரினவாதம் மிகப்பெரும் யுத்தத்தை தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தி, பல்லாயிரக் கணக்கானவர்களைக் கொன்றொழித்துள்ளது.

இதன்காரணமாக பெற்றோரை இழந்த பிள்ளைகள், பிள்ளைகளைப் பறிகொடுத்த பெற்றோர்கள், கணவனை இழந்த மனைவி, மனைவியை இழந்த கணவன் என்ற மிகப்பெரும் துன்பம் இன்றுவரை தமிழ் இனத்தை வாட்டி வதைக்கிறது.

அதிலும் பெற்றோரை இழந்து அநாதைகளாகிப்போன சின்னஞ்சிறுசுகள்படும் அவலம் தாங்க முடியாது.
இந்த உண்மைகளைத் தெரிந்திருந்தும் சிங்களப் பேரினவாதம் இன்னமும் தமிழ் மக்களை வதைக்கவும் வஞ்சகிக்கவும் நினைப்பதுதான் ஏன் என்று தெரியவில்லை.

தமிழ் மக்கள் வாழ்ந்தால் அது தமக்குப் பாதகம் என்று சிங்களப் பேரினவாதம் நினைக்கிறதா? அல்லது இந்த நாட்டில் இருந்து தமிழ் மக்களைக் கொன்றொழித்து விட்டால் இலங்கை முழுவதும் தமக்குரி நாடாகிவிடும் என்று நம்புகிறதா என்பது புரியாமல் இருந்தாலும் சிங்கள மக்களும் சிங்களத் தரப்புகளும் தமிழ் மக்களை தொடர்ந்தும் வஞ்சிப்பது எந்த வகையிலும் நீதியாகாது.

அதேவேளை வீழ்ந்து விட்ட இனம் நாங்கள் என்ற நினைப்போடு வாழ்வதும் நம்மை வீழ்த்துமேயன்றி அந்த நினைப்பு ஒருபோதும் நம்மை தூக்கி நிறுத்திவிடாது என்பதைத் தமிழினம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆம், நாங்கள் வீழ்ந்து விட்டோம். நாம் வாழ்வதற்கு இனி வழியில்லை என்ற விரக்தி நிலை எப்போது எங்களிடம் ஏற்படுகிறதோ அப்போதுதான் நுண்கடன் வழங்குவோரும் பொது மக்களுக்கான நலச்சேவையில் ஈடுபடுவோரும் தங்கள் பணிக்காக இலஞ்சம் கேட்கத் தலைப்படுவர்.

இந்த அக்கிரம செயலை எல்லோரும் செய்யத் தலைப்படாவிட்டாலும் ஈனச்செயலில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை கணிசம் என்பதால் இலஞ்சத்தின் கொடூரமும் உச்சமாகவே இருக்கும்.ஆக, எம் இனம் வாழ வேண்டும் என்ற மனத்திடத்துடன் எங்களுக்குள் நாங்கள் குழுக்களாக இணைந்து எங்கள் சேமிப்பில் ஒவ்வொருவராக எழுகை பெறுவோம் என்ற கோசத்துடன் உதவித் திட்டங்களை நாமே நமக்கு உருவாக்க வேண்டும்.

இது ஒன்றுதான் வீழ்ந்த நம் இனம் மீண்டும் எழுகை பெறுவதற்கான ஒரே வழி. இல்லையேல் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ்ப் பெண்களுக்கு நுண்கடன் வழங்கிய நிறுவனங்கள் பாலியல் இலஞ்சம் கோருகின்றன என்ற செய்தியை ஐ.நா அதிகாரி சொல்லுகின்ற அளவுக்கு எங்கள் அவலம் சர்வதேச மேடையில் உச்சரிக்கப்படும்.
 

-வலம்புரி-