ஈழத் தமிழ் மக்களுக்கு தை மாசம் ஒரு கறுப்பு மாதம்

செவ்வாய் சனவரி 12, 2021

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி தினமான ஜனவரி 10, 1974 இல் மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் பதினொரு பேர் வன்முறையாளர்களால்  கொல்லப்பட்டனர்.

உலகலாவிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்தவிடாமல் அப்போதைய அதிகார வர்க்கம் முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தியது 
தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் முயற்சியினால் 1964ஆம் ஆண்டு இந்தியாவின் புதுடில்லியில் தொடங்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி மன்றம், உலகில் உள்ள தமிழ் அறிஞர்களை ஒன்று திரட்டி, தமிழை வளர்க்கவும் வளம்படுத்தவும் தமிழ் ஆராய்ச்சியை ஒருமுகப்படுத்தவும் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்த திட்டமிட்டது.

26ஆவது சர்வதேச உலகக் கீழைத்தேயக் கல்வி மாநாட்டின்போதே இதற்கான முயற்சிகள் இடம்பெற்றன. தனிநாயகம் அடிகளாரும், வ.ஐ. சுப்பிரமணியமும் இந்த மாநாட்டில் கலந்துகொண்ட பேராசிரியர்களுக்கு அழைப்பு விடுத்தனர். 1964 ஜனவரி ஏழாம் திகதி உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் முதல் சந்திப்பு டில்லியில் இடம்பெற்றது.

முதலாவது உலகத் தமிழாராச்சி மாநாடு மலேசியாவிலும் 
இராண்டாவது உலகத் தமிழாராச்சி மாநாடு தமிழகத்திலும்
 மூன்றாவது மாநாடு பிரான்சிலும் நடைபெற்றது. 

பிரான்சில் நடைபெற்ற மாநாட்டில் நான்காவது மாநாட்டை ஈழத்தில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் யாழ்ப்பாணத்தில் நடத்த திட்டமிடப்பட்டது. இதன்படி நான்காவது உலகத் தமிழாராச்சி மாநாடு 1974ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் திகதி முதல் 9ஆம் திகதிவரை இடம்பெற்றது. தவத்திரு தனிநாயகம் அடிகளாரினால் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் வைத்து வைபவ ரீதியாக நிகழ்வு தொடங்கப்பட்டது.

சைவமும் தமிழும் தழைத்தோங்கிய ஈழத்தில், இஸ்லாமியத் தமிழ், கிறிஸ்தவத் தமிழ் இலக்கியங்களால் செழுமை பெற்ற ஈழத்தில், தனித்துவமான பண்பாடும் பாரம்பரியமும் தொன்மையும் மிக்க ஈழத்தில், உலகத் தமிழராயச்சி மாநாடு பெரும் எழுச்சியாய் நடந்தது. யாழ் நகரமே பாரம்பரிய பண்பாட்டின் கோலத்தின் காட்சியில் இருந்தது. தாம் பேசும் மொழிக்கு தமிழர்கள் விழா எடுத்தனர்.

ஈழத்தில் இன ஒடுக்குமுறைக்கான கருவியாக துப்பாக்கிகள் மாத்திரமின்றி மொழியும் பிரயோகிக்கப்பட்டது. 1956இல் தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டது மொழி ஒடுக்குமுறைக்காகவே என்பது வரலாறு.

அதிகார வர்க்கம்  மாநாட்டை குழப்ப முன்னரே திட்டமிட்டது. இதனையடுத்து அரச பாடசாலை மண்டபங்கள் மறுக்கப்பட்டன. அத்துடன் அப்போது மேயராக இருந்த சிறிமாவின் ஆதரவாளர் அல்பிரட் துரையப்பா யாழ் திறந்த வெளியரங்களில் நிகழ்வுகளை நடத்தவும் அனுமதி தர மறுத்தார்.

மாநாட்டை தோல்வியுறச் செய்ய வேண்டும் என்று நினைத்த அதிகார வர்க்கம், மாநாடு தொடர்பான செய்திகளை இருட்டடிப்பு செய்தது. ஆனால் இலங்கைத் தீவில் உள்ள தமிழ் திரைமாளிகளில் மாநாடு குறித்த செய்திகள் திரையிடப்பட்டன. இதனால் செய்தி பரவலை  தடுக்க முடியவில்லை. அத்துடன் உலக நாடுகளில் இருந்து வந்த தமிழ் அறிஞர்களை விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டனர். சர்வதேச தமிழ் அறிஞர்கள் திருப்பி அனுப்பட்ட செய்திகள்  ஜனநாயக மறுப்புக் கோர முகத்தை உலகிற்கு அம்பலம் செய்தது

அடக்குமுறைகளைத் தாண்டி, மாநாடு தனியாகம் அடிகளாரால் வைபவ ரீதியாக தொடங்கப்பட்டது. இதற்காக அவர் பல அச்சுறுத்தல்களை, சவால்களை எதிர்கொண்டார். மாநாட்டு அமர்வுகள் வீரசிங்கம் மண்டபத்திலும், றிமர் மண்டத்திலும் நடக்க, கலை நிகழ்ச்சிகள் யாழ் திறந்தவெளி அரங்கிலும் நடைபெற்றன. யாழ் சுண்டுக்குளி மகளீர் கல்லூரியில் தமிழர் பண்பாட்டுக் கண்காட்சி இடம்பெற்றது. ஆறு நாட்களாக யாழ்ப்பாணமே தமிழ் மொழிப் பண்பாட்டுக் கோலத்தில் மிளிர்ந்தது. மக்கள் எழுச்சியாய் திரண்டனர். இதனை கண்ணுற்ற வன்முறை கும்பல்களுக்கு  பொறுத்துக் கொள்ள இயலவில்லை..

இந்த நிலையில் மாநாட்டில் கலந்துகொண்ட சர்வசேத அறிஞர்களை வழி அனுப்பும் நிகழ்வு ஜனவரி 10 அன்று யாழ் திறந்தவெளி அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்த நிகழ்வை நடத்த சிறிமாவின் ஆதரவாளர் அல்பிரட் துரையப்பா மறுத்தமை காரணமாக யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நிகழ்வு நடைபெற்றது.வழியனுப்ப சுமார் 50ஆயிரம் பேர் வந்திருந்தனர். மண்டபம் நிரம்பிய நிலையில் வெளியிலும் மக்கள் திரண்டு இருந்தனர். பாதையை விட்டு வெளியில் புல் தரையிலிருந்து மக்கள் நிகழ்வை பார்வையிட்டனர். பாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன.

இந்த நிலையில் அங்கு வந்த வன்முறையாளர்கள்  ஏற்கனவே திட்டமிட்டபடி வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர். மாநாட்டிற்கு வந்திருந்த அப்பாவிப் பொதுமக்களை கடுமையாக தாக்கினர்.

ஒன்பதுபேர் அந்த இடத்திலேயே படுகொலை செய்யப்பட்டனர். பெண்களும் வயது முதிர்ந்தவர்களுமாக பல நூற்றுக் கணக்கானவர்கள் நெரிசலில் சிக்கி காயமுற்றனர்.

அலை கடலென மக்கள் திரண்டு மாநாட்டிற்காக விழாக்கோலம் பூண்ட யாழ் நகரம் அழுகுரலும் கண்ணீருமாய் காட்சி அளித்தது.

தமிழ் மக்களுக்கு இடம்பெறும் அநீதிகளுக்கு சம்பிரதாயபூர்வ விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டு நீதி மறுக்கப்பவடுதுபோல தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகளுக்கும் நீதி மறுக்கப்பட்டது. ஈழத் தமிழ் மக்களின் நெஞ்சங்களின் மனதில் ஆறாத வடுவாக இந்தப் படுகொலை நிலைத்தது.

1974ஆம் ஆண்டு தைமாசம் ஒரு கறுப்பு மாதமானது. அந்த வருடம் எவருடைய வீட்டிலும் பொங்கல் இடம்பெறவில்லையாம்.

பிற்காலத்தில் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கான பின்னணிக் காரணங்களில் ஒன்றாக இப் படுகொலை குறித்த வடுவும் இடம்பெற்றது.

அதேபோன்று தை மாதம் 8ம் திகதி ஈழத்தமிழர்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில்  சிங்களப் படைகளினால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபி உடைக்கப்பட்டமையும் ஒரு கறுப்பு தினமாகவே கருதப்படுகிறது.