ஈழத் தமிழர்களை விடுவிக்க கோரி திருச்சி சிறப்பு முகாம் முற்றுகை-

செவ்வாய் ஜூன் 28, 2022

சென்னை- திருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழத் தமிழர்களை விடுவிக்கக் கோரி, மே17 உள்ளிட்ட இயக்கங்கள் சார்பில் வருகின்ற 29ஆம் திகதி திருச்சி சிறப்பு முகாமை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மே 17 சார்பில் விடுத்துள்ள அறிக்கையில்;

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாம் என்னும் ஈழத்தமிழர்களுக்கான தனி சிறையில் உள்ள ஈழத் தமிழர்கள் தங்களை விடுவிக்க வேண்டுமென கடந்த 20-05-2022 முதல் தொடர் உண்ணாநோன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அதன் உச்சகட்டமாக கடந்த ஜூன் 24 அன்று உமாரமணன் என்ற ஈழத்தமிழர் தீக்குளித்துள்ளார். அவர்களது ஒரே கோரிக்கை, சித்திரவதை கூடமாக இருக்கும் திருச்சி சிறப்பு முகாமிலிருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்பதே.

போராடும் ஈழத்தமிழர்களின் விடுதலைக்கு ஆதரவாக, ஈழத் தமிழர்களை சித்திரவதை செய்யும் திருச்சி சிறப்பு முகாமை உடனடியாக இழுத்து மூட வலியுறுத்தி மே பதினேழு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஒருங்கிணைக்கும், திருச்சி சிறப்பு முகாமை முற்றுகையிடும் போராட்டம் வரும் புதன் (29-06-2022) காலை நடைபெறுகிறது.

ஈழத்தமிழர்களை சித்திரவதை செய்யும் திருச்சி சிறப்பு முகாமை உடனடியாக இழுத்து மூடு!

40 நாட்களாக உண்ணாநோன்பு போராட்டத்தில் ஈடுபடும் ஈழத்தமிழர்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக விடுதலை செய்!

போராட்டத்தில் தீக்குளித்த ஈழத்தமிழரான உமாரமணன் என்பவருக்கு உரிய நீதியை வழங்கிடு!

தமிழ்நாட்டை நம்பி வந்த தொப்புள்கொடி உறவுகள் மீதான அடக்குமுறையை உடனடியாக நிறுத்திடு! என அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.