ஈழத்தமிழர்கள் ஆபத்தில் –  சீமான் காட்டம்

வியாழன் நவம்பர் 21, 2019

காங்கிரசோடு சேர்ந்து ஈழப்படுகொலைக்குத் துணைநின்ற இனத்துரோகத்தைச் செய்த திமுக, தனது அரசியல் சுய இலாபத்திற்காகப் புலிகளின் பெயரைக் கொச்சைப்படுத்துவதா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் சீமான் வெளியிட்ட அறிக்கை: விடுதலைப்புலிகளால் சோனியா காந்தியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது எனப் பாராளுமன்றத்தில் திமுகவின் பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

காங்கிரசு கட்சியின் இடைக்காலத் தலைவர் அம்மையார் சோனியா காந்திக்கு வழங்கப்பட்ட சிறப்புப் பாதுகாப்புப் படையின் உயரியப் பாதுகாப்பு ரத்துச் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான பாராளுமன்ற விவாதத்தில், இவ்வாறு பேசியிருக்கிறார் டி.ஆர்.பாலு.

சோனியா காந்திக்கு உயரியப் பாதுகாப்பு வழங்கக்கோருவது அவர்களது உரிமை; விருப்பம். ஆனால், அதற்கு விடுதலைப்புலிகள் பெயரைப் பயன்படுத்துவதும், அவர்களால் சோனியாவின் உயிருக்கு அச்சுறுத்தல் நிலவுவதாகக் குற்றஞ்சாட்டுவதும் அபாண்டமானது; அடிப்படையில்லாதது.

ஈழ இனப்படுகொலையில் நேரடியாகத் தொடர்புடைய கோத்தபய ராஜபக்சே இலங்கையின் சனாதிபதியாகப் பதவியேற்றிருக்கும் அரசியல் சூழலில் ஈழத்தமிழர்கள் மிகப்பெரிய ஆபத்தில் சிக்கியிருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் திமுகவின் பாராளுமன்ற குழுத்தலைவர் ‘புலிகளால் ஆபத்து’ என்று பேசுவது ஏற்கனவே பல்லாண்டுகள் நெருக்கடியில் இருக்கும் ஈழத்தமிழர்கள், இன்னும் பல ஆண்டுகளுக்கு நசுக்கப்படும் சூழல் உருவாகப்போகிறது.

கோத்தபய ராஜபக்சே வெற்றிக்குப் பிறகு ஈழத்தமிழர்கள் மீது அக்கறை இருப்பதைப் போன்று அறிக்கை வெளியிட்டத் திமுகவின் தலைமை டி.ஆர். பாலுவின் இந்தப் பேச்சை ஏற்றுக்கொள்கிறதா? ஆமோதிக்கிறதா? என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.

சிங்கள இனவாத கொடுமைகளுக்கு எதிராக நின்று தமிழினத்தின் காவல் அரணாக இருந்த விடுதலைப்புலிகளைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் கருத்துகளைத் தெரிவித்த திமுகவின் பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு உடனடியாகத் தனது கருத்துகளைத் திரும்பப் பெற்று, அதற்கு மன்னிப்புக்கோர வேண்டும். இல்லாவிடில், தேர்தல் களத்தில் தக்கப்பாடம் புகட்டுவோம் என எச்சரிப்பதாக சீமான் தெரிவித்துள்ளார்.