ஈழத்தமிழர்களின் உணர்வுகளை பொங்கித் தள்ளிய“பொங்கு தமிழ்”-20வது ஆண்டு!!

ஞாயிறு சனவரி 17, 2021

யாழ்.பல்கலைக்கழக சமூகத்தினரால் சர்வதேச அரங்கை உலுப்பி எடுத்த பொங்குதமிழ் அரங்கை அத்தனை இலகுவில் மறந்துவிடமுடியாது. ஈழத்தில் தமிழ் இனம் என்ற ஒன்று அவலத்தினுள் அமிழ்த்தப்பட்டுக் கிடக்கின்றது.

ஒடுக்கப்பட்டுக் கிடக்கின்றது என ஒடுக்கப்பட்டுப்போன தமிழ் மக்களின் பொங்கிப் பிரவாகிக்கும் அடிமன ஆசையின் வெளிப்பாட்டை சர்வதேச வெளியில் வெளிப்படுத்தி நின்ற அரங்க மொழிதான் பொங்குதமிழ் அரங்கு.

தமிழ் மனங்களின் அடிமன ஆசையினை வெளிக்காட்ட பிரயோகப்படுத்தப்பட்ட ஆயுதம் அரங்கு.

அந்த வகையில் மக்களின் அடிமன விருப்பைக் கூறும் களமாக இங்கு அரங்கு செயல் நிலை புரிந்தமையினால் இந்த மக்கள் எழுச்சியை பொங்கு தமிழ் அரங்கு என்று கூற விளைகின்றேன். 

ஈழத்து அரங்கின் ஆற்றுகைப் போக்குகளில் மிக முக்கிய திருப்பு முனையாக 1985 இல் அமைந்தது மண் சுமந்த மேனியர் நாடகம்.

குழந்தை ம.சண்முகலிங் கத்தினால் எழுதப்பட்டு கலாநிதி க. சிதம்பரனாதனால் நெறியாள்கை செய்யப்பட்டது. இத்துடன் தமிழ் மக்களிடம் புதிய அரங்கப் போக்கின் அறிமுகம் ஆரம்பமானது.

மக்களின் தேசிய விடுதலை என்பது இளைஞர்களினதும், புலிகளினதும் மட்டுமே தவிர அது மக்களுக்கானது அல்ல, மக்களின் ஆசை விடுதலை அல்ல என்ற எண்ணங்கள் ஒடுக்குமுறை சக்திகளிடம் பரவாலாக்கப் பட்டுக் கொண்டிருந்தது.

அந்த சந்தர்ப்பத்தில் மக்கள் அப்படிக் கூறுபவர்களின் மாயையை உடைக்கவும் தமிழ் மக்களின் விருப்புக்கள் என்ன என்பதையும் வெளிக்காட்டவேண்டிய உடனடி தேவையில் உருவான உருவாக்கமே தான் பொங்கு தமிழ்அரங்கு.

அந்த வகையில் ஈழத்தின் அரங்கப் போக்கில், சர்வதேச அரங்கில் சமுக மாற்றத்தையும் எழுச்சியையும் ஏற்படுத்தியது.

பொங்கு தமிழ் அரங்கு  யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட 1983, 1985, 1987, 1990, 1993, 1995, காலப்பகுதிகளின் தொடர் இடப்பெயர்வுகள் தமிழ் மக்கள் மீதான மிகக் கொடூரமான ஒடுக்குதல்களை தீவிரப்படுத்தியது.

யுத்த சூழல் என்பன மக்களை அவலத்தினுள் ஆட்கொண்டு வைத்திருந்தது. தமிழ் சமுகம் ஒடுக்கப்பட்ட மக்களாக மரணத்துள் வாழ்ந்து வந்தனர் .

தமது சுதந்திர உரிமை பற்றி வெளியில் துணிந்து பேசமுடியாத பயத்தினுள் இருண்ட வாழ்க்கை வாழ்ந்தார்கள் வெளியில் விருப்பை கூறமுடியாத அதித பயத்தில் உறைந்து போய் இருந்தார்கள் .

நாடகமும் அரங்கியலும் துறையில் ஒவ்வொரு வருடமும் இறுதி வருட மாணவர்கள் தங்கள் பரீட்சைக்காக நாடகம் ஒன்றை ஆற்றுகை செய்யவேண்டும் என்பது பல்கலைக் கழக பாடத்திட்டம் .

அந்த வகையில் அன்றைய நாடகமும் அரங்கியலும் துறைத் தலைவராக இருந்த கலாநிதி க.சிதம்பரநாதனின் ஆலோசனையையும் வழிகாட்டலையும் பெற்ற மாணவர்கள் ஒவ்வொருவரினதும் ஆற்றுகைகளும் தமிழ் சமூகத்தின் அடக்குதல்களையும் , மக்கள் மீதான இராணுவக் கட்டவிழ்ப்பையும் வெளிக்காட்டுவனவாக அமைந்தன.

ஈழத்து மீனவர்கள் மீதான ஒடுக்குமுறையாளர்களின் ஆக்கிரமிப்பையும் பாஸ் நடைமுறையின் கொடூரங்களையும் சுட்டிக் காட்டிய ராஜ்குமாரின் ‘’ கரிக்கும் கண்ணீர்க் கடல் அலைகள் ‘’ , கணேஷராஜா வின் ‘’ பேசாப் பொருள் ‘’ . குழு நிலையில் செய்யப்பட்ட ‘’ ஆத்மா ‘விசாரம் ‘ .’’ மண்ணின் புழுதியிலே ‘’. போன்ற நாடகங்கள் சாதாரண படச்சட்ட அரங்கில் இருந்து பல்கலைக் கழக வெளியை நிரப்பிக் கொண்டது.

இந்த பிரமாண்ட வெளியில் பார்ப்போரும் பங்கு கொள்ளும் வகையில் இந்த ஆற்றுகை நிகழ்த்தப் பட்டமையினால் பார்வையாளர்கள் பங்கு கொள்பவர்கள் ஆயினர்.

காரணமாக தமிழ் மக்களின் மனங்களிலும் வெளிக் கொட்ட முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கும் ஈழ விடுதலை வலியை வெளிக்காட்ட , சமுகத்தை ஒன்றிணைக்க முடியும் என்ற நம்பிக்கையை இந்த வெளி கொடுத்தது .

கலாநிதி , கா. சிதம்பரநாதன் மற்றும் அவர் தம் குழுவின் ஆழ்ந்த சிந்தனையின் வெளிப்பாடாக ‘’ பொங்குதமிழ் ‘’ என்ற ஈழத் தமிழ் வடிவம் 2000 ஆண்டில் பிறந்தது .

தமிழ் மக்களின் அடக்கப்பட்ட உரிமைகள் , பொங்கிக் கொண்டிருக்கும் உணர்வுகளை கொட்டித் தீர்க்க ‘’ பொங்கு தமிழ் ‘’ என்ற பதமே சரியாக அமைந்தது .

இந்த எண்ணப் பகிர்வுகள் அன்றைய பல்கலைக்கழக மாணவர்கள் பலருடன் கலந்துரையாடப்பட்டது .

இந்த அரங்க பகிர்வு , அரங்க செயற்பாட்டு குழுவுடனும் பகிரப்பட்டது. அரங்க செயற்பாட்டுக் குழுவும் , பெண்கள் பண்பாட்டு மையமும் சேர்ந்து யாழ் பல்கலைக்கழக மாணவர்களை தம்முடன் அரங்கியல் இரீதியாக ஒன்றிணைக்க முடிவு செய்தது .

இதில் அன்றைய பல்கலைக்கழக மாணவத் தலைவனாக இருந்த செல்வராஜா கஜேந்திரனின் அர்ப்பணிப்பும் தேசிய விடுதலை மீதான வெறியும் ஆழமானது. பொங்குதமிழ் நாயகனாக அவரை அடையாளம் காட்டியது.

அதுவே படிப்படியாக மூன்று , ஐந்து , பத்து , என்று மாணவர்களையும் ஆர்வலர்களையும் , அரங்க செயட்பாட்டாளார்களையும் ஒன்று கூட்டியது. ஒவ்வொரு நாளும் ஐந்து மணி தொடக்கம் இரவு பகல் பாராமல் பல்கலைக் கழக புல் வெளியில் இந்த அரங்கியல் சிந்தனைகள் பட்டை தீட்டப்பட்டன.

மேலும் அரங்க செயற்பாட்டுக் குழுவின் கந்தர்மட நிலையத்திலும் கல்வியங்காட்டிலும் கருத்தாடல்களை உருவாக்க சாத்தியமானது. இந்த பொங்கு தமிழ் அரங்கில் மக்கள் உடனடியாக ஒன்று கூடியது அல்ல.

மண்சுமந்த மேனியர் நாடகம் குடாநாடு எங்கும் பரந்தளவில் மக்களை ஒன்று சேர்த்துள்ளது. இது நிகழ்ச்சியாக நிகழ்ந்துள்ளது . ஆற்றுகைப் போக்கு மக்களைக் கவர்ந்ததுடன் தாக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்கம் இலட்சக் கணக்கான மக்களை ஒன்று திரட்டும் விழாவாக மாறியுள்ளது மகள் தாமாக விரும்பி கலந்து கொள்ளும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

மண்சுமந்த மேனியர் காலம் தொட்டு படிப் படியாக நகர்ந்த தேசிய விடுதலைக்கான அரங்கச் செயற்பாடுகளும் , அரங்க ஆற்றுகைகளும் பண்பாட்டுப் பவனி போன்ற காரணிகளும் இறுதியாக பொங்கு தமிழாக பெரும் வடிவம் பெற்றது.

ஒன்றும் , , ஐந்தும் பத்தும் என்ற பல்கலைக் கழக மாணவர்கள், அரங்காளர்களின் சங்கமிப்பும் , இணைச் செயற்பாடும் இறுதியில் பல இலட்சக் கணக்கான மக்களை ஈழத்தின் வவுனியா, மன்னார், மட்டக்களப்பு , திருகோணமலை, முல்லைத் தீவு கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களில் ஒன்று சேர்த்ததுடன் சர்வதேச நாடுகளான லண்டன் , நோர்வே , சுவிஸ், பிரான்ஸ் , கனடா , ஜெர்மனி போன்ற நாடுகள் எங்கும் பொங்கு தமிழ் அரங்கு காட்டுத் தீயானது.

பொங்கு தமிழ் அரங்க ஆற்றுகைக்கான அரங்க வெளியானது பல்கலைக்கழக மைதானம் மட்டுமன்றி தமிழ் பிரதேசங்களான வடக்கு, கிழக்கின் ஒவ்வொரு, வீதிகளும் பாடசாலை மண்டபங்களும், வயல்களும், கடற்கரைகளும் என்று தமிழனின் கதை பேசும் களங்கள் யாவும் ஆற்றுகை வெளிகளாகின. சில இடங்களின் தெரிவும் , கிராமமும் , கிராமத்து ஓசைகளும் அரங்கை உயிர்ப்பித்தது .

இலட்சக் கணக்கான மக்களை ஒன்று திரட்டிய அரங்க வெளியானது யாழ் பல்கலைக் கழக வெளி, பல்கலைக் கழக மருத்துவ பீட மைதானம், வவுனியா நகரசபை மைதானம் , மன்னார் ஜோசப் கல்லூரி மைதானம், முல்லைத்தீவு திறந்த வெளி மைதானம் , மட்டக்களப்பு மக்கேசர் விளையாட்டு மைதானம் .. என்று மக்களை ஒன்று சேர்த்தது .

இங்கு அரங்கு உயர்த்தப் பட்ட நீளமான மேடையாக அமைக்கப்பட்டு அரங்கும் , மைதானமும் மட்டுமின்றி அந்த தேசங்களும் சிவப்பு , மங்சள் நிறத்தினால் அலங்கரிக்கப்பட்டு , தேசியத் தலைவரின் பிரமாண்டமான படமும் அமைக்கப் பட்டு இருந்தது .

வீதிகள் தோறும் , வீட்டு வாசல்கள் தோறும் , நகரம் எங்கும் மஞ்சள் சிவப்பு நிறத்தினாலான அலங்காரம் தேசிய எழுச்சியை பறை சாற்றி நின்றது 

அத்துடன் ஊர் ஊரை பொங்கு தமிழ் என்ற இடையிட்ட அரங்க வடிவம் கிராமங்கள் தோறும் இயக்கம் கொண்டது , பெரிய அளவில் மக்களை ஒன்று சேர்க்க இந்த வடிவம் இயங்கியது , ஆற்றுகையாளர்கள் குழு நிலைப் படுத்தப்பட்டு கிராமம் , கிராமமாக சென்று ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அருகில் இருந்தும், உண்டும் பழகியும், சேர்ந்து வாழ்ந்தும், அவர்களுக்கு நம்பிக்கையையும் தைரியத்தையும் கொடுத்து பயங்களில் இருந்து விடுவித்து இந்த ஆற்றுகையை நிகழ்த்துகின்றனர்.

ஆற்றுகையாளர்கள் தெரு வெளி நாடகங்களை நிகழ்த்துவதும் , தேசியம் தொடர்பான அரங்கப் பாடல்களைப் பாடுவதும் , அதனூடாக மக்களை பங்கு கொள்ள வைத்து அவர்களின் அபிலாசைகளைக் கேட்பதும் தேசிய இலட்சியக் கனவுக்காக மக்கள் ஒன்று சேர்வதும் என்பதே இந்த ஊர் ஊராய் பொங்கு தமிழ் நகர்ந்தது.

ஒடுக்கப் பட்ட மக்களின் மனங்களின் காயங்களாகவும் , வலிகளாகவும் , இரத்தமாகவும் , சதையாகவும் அளவிட முடியாத கற்பனைகளின் வடிவங்களாக அவை உருக்கொண்டன.

இங்கு அரங்க காண்பியங்களில் மிக முக்கியமாக குறிப்பிட வேண்டிய பிரமாண்டமான காண்பியங்களாக ஒடுக்கு முறைக்குள்ளான பிரமாண்டமான மாதிரி வீடு , இராட்சத அரக்க உருவம்.

பிரமாண்ட மான கறுப்பு சப்பாத்து. பொங்கு தமிழ் பானை சுமந்த ஊர்தி , என்பனவற்றை குறிப்பிட முடியும். அடக்குதல்களுக்குள்ளும் , ஒடுக்குதல் களுக்குள்ளும் ஈழத் தமிழ் மக்கள் அடக்கப் பட்டு இருப்பதனை வெளிக்காட்டும் வகையில் பெரிய அளவிலான மாதிரி வீடு பிரமாண்ட வெளியில் அமைக்கபட்டு இருந்தது.

எங்கள் ஈழத்து வீடுகள் இராணுவ ஒடுக்குதல்களால் முள்வேலி இடப்பட்டு அங்கு யாருமே உட்புக முடியா வண்ணம் சுற்றி வளைக்கப் பட்டு உள்ளது.

யாருமற்ற வீட்டில் புல் , பூண்டுகளும் , செடி கொடிகளும் ,பாம்பு பூச்சிகளும் தான் வாழ முடியும் அவ்வாறு மஞ்சள் நிறமான நீளமான நச்சுப் பாம்பு அந்த வீடுகளை சுற்றி ஆக்கிரமித்து உள்ளது . அத்துடன் மிதிவெடிகளுக்கான அபாய எச்சரிக்கைகளும் சிததரிக்கப் பட்டு இருந்தன.

எல்லோர் மனங்களையும் அந்த வெளியின் குறியீடு தைத்துக் கொண்டே இருந்தது . பொங்கு தமிழ் எழுச்சியின் போது  எமது நிலம் எமக்கு வேண்டும்எமது நிலமே எமக்கு வேண்டும். என்ற உணர்ச்சி மேலிட்டால் எழுச்சி கொண்ட ஈழத் தேசிய மக்கள் உயர்ந்த வீட்டை சுற்றி இருந்த முட்கம்பி வெளிகளின் ஆபத்தையும் கடந்து வீட்டின் மேல் ஏறி கொடி ஏற்றிக் கொண்டனர் .

இது எல்லாம் திட்டமிட்ட செயல் அல்ல . ஆற்றுகை யாளர்களின் உணர்ச்சியின் சக்தியே மக்களை எழுச்சி கொள்ள வைத்தது .

இவை எல்லாம் ஒடுக்கப் பட்ட மக்களின் உணர்ச்சியின் உச்சம் ஆகும். இத்தகைய உணர்ச்சி மேலிடுகையை அன்றைய பிரதேச பத்திரிகையொன்று மிக துள்ளியமாக வெளிக்காட்டியது.

பொங்கு தமிழ் எழுச்சி வாரம் என்பது பொங்கு தமிழ் நிகழ்வுக்கான தயார்படுத்துவதற்கும் சமூகத்தையும் தேசத்தை தயார்படுத்தும் நோக்கில் ஒன்று இரண்டு வாரங்கள் அனுஸ்டிக்கப்பட்டது.

பிரமாண்ட ஒன்று கூடலுக்கான அறிவிப்பையும் , அடையாளத்தையும் இது நினைவு படுத்தும் .

இந்த காலத்தில் அரங்க ஆற்றுகைகள் , கிராமியக் கூட்டங்கள் , மக்கள் சந்திப்புக்கள், கலந்துரையாடல்கள், நிகழும். தேசத்தை எழுச்சிப் படுத்தும் வகையில் துண்டுப் பிரசுரம் விநியோகித்தல் , சுவரொட்டிகள், விளம்பரத் தட்டுக்கள் கட்டுதல் , மற்றும் எழுச்சிக் கொடிகளால் வீடுகள் ,தெருக்கள், கடைகள் நகரங்கள் எங்கும் அலங்கரித்தல் என்பன நிகழ்ந்தன.

இந்த வேளையில் பொங்கு தமிழ் ஊர்தி தமிழ் தேசம் எங்கும் பவனி வந்தது. பிரமாண்டமான பொங்கு தமிழ் பானை யை சுமந்த அலங்கரிக்கப்பட்ட ஊர்தி , எழுச்சி கொண்ட அரங்கியல் பாடல்களை ஒலி பெருக்கி ஊடாக மிதக்க விட்டு , அரங்க செயற்பாட்டாளர்களையும் சுமந்து கொண்டு வீதி எங்கும் பவனி வந்தது.

இதே போன்று 2005 இல் நிகழ்ந்த பொங்கு தமிழின் போது இராட்சத அரக்க உருவம் அரங்க வெளியை சுற்றி வந்த போது மக்கள் அதனை ஆத்திரம் கொண்டு சிதைத்து சின்னாபின்னமாக்கிக் கொண்டனர் .

அதனூடாக தம் அடக்கப் பட்ட உணர்வுகளை வெளிக்காட்டி எதிர்ப்புக் காட்டி திருப்தி கொண்டனர். ஒடுக்கப் பட்ட மக்கள் எப்போதும் தமக்கான வெளிப்பாட்டுக் களத்தை, வெளியை எதிர்பார்த்திருப்பார்கள்.

சாதாரண வெளியில் அவர்களால் இயங்க முடிவதில்லை. ஆனால் அரங்கின் ஊடாக இதனை சாத்தியமாக்க முடியும் என்பதை இந்த பொங்கு தமிழ் அரங்கு உணர்த்தியது.

தனிப்பட்ட ஒவ்வொரு மனிதனும் தனது ஒட்டு மொத்த ஆசைகளை தனித் தனியே சொல்ல முடியாது. அடக்கப்பட்ட எல்லா மக்களும் சேரும் போது அதை யாராலும் தடுக்கவும் முடியாது . அந்த வகையில் எல்லா தமிழ் மக்களும் ஒன்று சேரக்களம் கொடுத்தது பொங்கு தமிழ் அரங்கு.

கிராமங்கள் தோறும் நாடாத்தப்பட்ட பொங்கு தமிழ் தயார் படுத்தல் அரங்கின் போது ஆத்திரமும் எழுச்சியும் கொண்ட மக்கள் இராணுவத்தின் மீதான வெறுப்பை காட்ட ஆற்றுகை யாளர்களை அடித்ததும் , அவன் மீது கோபம் கொண்டதுமான சம்பவங்களும் நிகழ்ந்தன . யாழ்ப்பாணத்தின் அராலி , ஆனைக் கோட்டை போன்ற கிராமங்களில் ஒடுக்குமுறையாளர்களின் வேடம் அணிந்து , கிராமத்தின் ஒழுங்கைகளை சுற்றி வந்து , வீதியால் செல்லும் மக்களை தடுப்பதும் , விசாரணை செய்வதுமான ஆற்றுகையாளனை இராணுவம் என்று பயந்து ஒதுங்கிக் கொண்டவர்கள் போக மீதியானவர்கள் பாத்திரம் ஏற்றவரை எதிர்த்து விரட்டிய, அடித்த சம்பவங்களும் உண்டு .

இந்த சின்னச் சின்ன எழுச்சிகளின் தயார் படுத்தலே பொங்கு தமிழ் அரங்கின் எழுச்சியில் உருக் கொள்ள வைத்தது.

பொங்கு தமிழ் அரங்கின் உயிர்ப்பே இசை , அரங்க எழுச்சிப் பாடல்கள். மற்றும் பறை ஒலி ஆகியன இங்கு முக்கியம் பெறுகின்றது.

உணர்வார்ந்த எழுச்சிப் பாடல்களையும் , எழுச்சியும் , உணர்ச்சியும் கொண்ட மனங்களின் உச்ச வெளிப்பாடாக அமைந்தது. இங்கு இசை மிகப் பலமான ஆயுதமாக பயன்படுத்தப் பட்டுள்ளது .

பொங்கு தமிழ் அரங்கில் எழுச்சி மிக்க அரங்கப் பாடல்களைப் பாடுவதற்கு என்று ஆர்வமான பலரை இணைத்து அவர்களுக்கு உயிர்ப்பான பயிற்சிகள் வழங்கப்பட்டு அவை எழுச்சி ஊட்டப்பட்டன .

கல்வியங்காடு , கந்தர்மடம் ஆகிய இடங்களில் பெண்கள் பண்பாட்டு மையமும் , அரங்க செயற்பாட்டுக் குழுவும் இணைந்து எழுச்சிமிக்க அரங்கப் பாடல்களை தினம் தினம் கற்பனையாலும் தாயகக் கனவுகளாலும் வடித்தெடுத்தனர்.

உணர்ச்ச்சியும் ஆர்வமும் கொண்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், கல்வியியற் கல்லூரி பயிற்சி நெறி ஆசிரியர்கள் , யாழ் மத்திய கல்லூரி நாடகத்துறை, இசைத்துறை மாணவர்கள் , மற்றும் இராமநாதன் கல்லூரி மாணவர்கள் மட்டுமன்றி தேசிய விடுதலையில் ஆர்வம் கொண்ட வவுனியா , மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, கிளிநொச்சி , கொழும்பு ஆகிய இடங்களைச் சேர்ந்த பலர் ஆற்றுகையாளர்களாக இணைந்து கொண்டனர்.

இசைச் சக்திகளின் கம்பீரமான குரல் வளம் சர்வதேசத்தையே உலுக்க வைத்த கனதி கொண்டிருந்தது. அரங்கச் செயற்பாட்டுக் குழுவால் பட்டை தீட்டப் பட்ட பல உணர்வாளர்களின் உணர்ச்சியும் வீராப்பும் கொண்ட குரல் வளம் சாதாரண இசை வளத்தை விட இசையை பல்வேறு பரிமாணங்களில் புறத் தெரியும் , உடைத்தெறியும் ஆற்றல் கொண்டிருந்தது .

உயர்ந்தவர்கள் நாமெல்லோரும் உலகத் தாய் வாயிற்று மைந்தர் நசிந்து இனிக் கிடக்க மாட்டோம் நாமெல்லாம் நிமிர்ந்து நிற்போம் ..என்ற கவிஞன் முருகையனின் பாடல் வரிகள் உலகையே ஒரு கணம் உலுக்க வைத்தது .

இங்கு ஒவ்வொரு தமிழ் மகனும் தனது உயிர் கலந்து , அடி மன ஆசையை வேண்டி நிற்கக் காணலாம் .மன்னார் மாவட்டத்தில் நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வின் போது எங்கள் நிலம் எமக்கு வேண்டும் எங்கள் நிலமே எமக்கு வேண்டும்  என்ற உணர்வார்ந்த கோசத்தின் போது இளைஞர்கள் பலர் ஒன்று சேர்ந்து கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நிலத்தின் மண்ணை அள்ளி தம் உடல் மீது புசியும் , வானத்தின் மேலே அள்ளி எறிந்தும் , நிலத்தில் அடித்து சத்தியம் செய்தும் உருண்டும் , பிரண்டும் தம் உணர்ச்சியை வெளிக்காட்டினார்கள் .

இந்த வேகம் யாவும் அதிர்ந்த இசையாலும் , புறத் தெரறிந்த கம்பீர குரல் வளத்தின் பிடிமானம் ஆகும். 

 கலாநிதி க.சிதம்பரநாதன். செ .விந்தன் ஆகியோரின் தாயகக் கனவுகளின் கேள்விகளும் , அதிர்ந்த பறை மேளங்களின் வீச்சும் அரங்கில் உயிர்ப்புக் கொடுத்தன. பெரிய பறைகள் , நாதஸ்வரம் தவில், தபேலா, ஹார்மோனியம் , சல்லாரி , சங்கு என்பன இங்கு அரங்கக் கருவிகளாகின. அரங்கில் தம்மை முழு ,நேரமாக அர்ப்பணித்து மானுட விடுதலைக்காக அரங்கில் இயங்கியவர்களில் 80 வீதமானவர்கள் பெண்கள் என்பது வரலாற்றுப் பதிவாக்க வேண்டிய விடயம் ஆகும் .

பெண்கள் பண்பாட்டு மையத்தின் கிராமிய பயிற்சித் திட்டங்கள் , ஆகியவற்றின் ஒன்று திரட்டிய சேர்க்கையால் ஆர்வமும் ஆற்றலும் கொண்ட பெண்கள் இந்த அரங்கை நிறைத்துக் கொண்டனர் .

இந்த எழுச்சித் தாகத்தினால் தமது வீடுகளில் இருந்தும் , தூர இடங்களில் இருந்தும் பெற்றோரின் அனுமதியுடன் வந்த பெண்கள் ஆற்றுகைக் குழுவுடன் தம்மை முழுமையாக இணைத்துக் கொண்டனர் . சாதாரண வாழ்வில் பெண் சத்தம் இட்டுக் கதைக்க கூடாது , உடலை அசைத்து ஆடக்கூடாது , சத்தமிட்டு சிரிக்கக் கூடாது , பாடக்கூடாது ,பெண்மை , மேன்மை என்ற இலக்கணங்கள் எல்லாம் உடைத்தெறிந்த பெண்களாக இவர்களைப் பார்க்க முடிந்தது .

புரிந்துணர்வு கொண்ட இந்த அரங்க வெளியில் தமது உள்ளத்து ஆசைகளை கொட்டி ஆர்ப்பரித்து ஆடினார்கள் , பாடினார்கள் , கோஷமிட்டார்கள். தனிப்பட்ட சாதாரண பெண்ணின் ஆசைகளுக்கு அப்பால் ஒட்டுமொத்த தமிழ் பெண்களின் அடையாளமாக இவர்கள் உருக் கொண்டாடினர்.

உயர்ந்த ,குரலும் புறத்தெறிந்த வீச்சுக் கொண்ட உடலும், அவர்களின் அடையாளங்களாகின. இவர்களின் உடல் மொழியின் வீச்சிலும் , உணர்ச்சியிலும் சிறுவர்கள் தொடக்கம் , பெரியவர்கள் முதியவர்கள், என்று அரங்க வெளி கானல் நீராக பிரவாகம் கொண்டது . தமது கைகளை மேலே உயர்த்தி கோரிக்கைகளை கோஷமிட்டனர் .

நட்ட மரம் போன்று மௌனம் கொள்ளாது உயர்ந்து குதித்தேழுந்து ஆடிப் பாடி ஆவேசம் கொண்டு உலக அரங்கை உலுக்கி நின்றனர் மக்கள். மானுட விடுதலைக்காக அகோரங் கொண்டாடியது பெண்களின் உடல் மொழி . இவையெல்லாம் படிப் படியான நம்பிக்கையும் , புரிந்துணர்வும் கொண்ட அரங்கி னால் சாத்தியமாக்க முடிந்தது . இந்த பொங்கு தமிழ் அரங்கின் பின் அரங்கில் அசை போட்ட ஒவ்வொரு பெண்கள் மீதும் சமூகத்துக்கு மதிப்பும் மரியாதையும் வரவேற்பும் கிடைத்தது.

இந்த பொங்கு தமிழ் அரங்கின் எழுச்சியின் விளைவே சமூகத்தில் ஏற்படுத்திய அடுத்த அதிர்வு 2004 ஏப்ரல் பாராளுமன்ற தேர்தல் .இந்த தேர்தலில் பெண்கள் பண்பாட்டு மைய நிறுவுனர் பத்மினி சிதம்பரநாதன் மற்றும் யாழ் பல்கலைக்கழக மாணவத் தலைவனாக இருந்து செயற்பட்ட செ.கஜேந்திரன் ஆகிய இருவரும் யாழ்ப்பாணத்தில் வரலாறு காணாத வகையில் முன்னணியில் அதிக வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்துக்கு தெரிவானார்கள் . இவர்களின் தெரிவு என்பது பொங்கு தமிழ் அரங்கின் ஊடாக சமூகம் கற்றுக் கொண்ட பாடங்களின் கற்பிதங்கள் ஆகும்.

பொங்குதமிழ் அரங்கு பற்றி மாற்று சிந்தனைகளை நோக்குமிடத்து, பொங்கு தமிழ் அரங்கு என்றதும் இன்று வரை இராணுவம் மற்றும் அரசு தரப்பில் சிந்திக்கப் படுவதெல்லாம் இராணுவத்துக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டிய விடயம் என்றும் இதனால் மக்கள் ஒன்று திரண்டு தமது அரசியல் தந்திரங்களை குழப்பி விடுவார்கள் என்றும் இராணுவத் தரப்பிலும் இராணுவ துணைக் குழுக்களின் தரப்பிலும் பதட்டம் நிலவியது. முதலாவது பொங்கு தமிழ் நிகழ்வு யாழ் பல்ககைக்கழக வளாகத்தில் நிகழ்த்தப்பட்டபோது பல்கலைக் கழகசமூகம் தவிர வெளி சமூகம் யாரும் அனுமதிக்கப் படவில்லை. இராணுவம் அனைவரையும் தடுத்து நிறுத்தியது.

இருந்தும் பாடசாலை மாணவர்கள் , மத குருமார்கள் என்று பலரும் பங்கு கொண்டிருந்தனர். இந்த நேரத்தில் ஈடுபாடு கொண்ட பல்கலைக் கழக மாணவனொருவன் சுட்டுக் கொலை செய்யப்பட்டதும் உண்டு . அத்துடன் ஆங்காங்கே கிராமங்களில் பொங்கு தமிழ் அரங்க ஆற்றுகை கூட்டங்கள் நிகழும் போது அதனை இராணுவமும் , இராணுவத் துணைக் குழுக்களும் சேர்ந்து தடுத்து நிறுத்தும் முயற்சிகளில் ஈடுபடுவதும் , மாணவர்களைக் கைது செய்வதும் நிகழ்ந்தன.

இவை மாணவ பலங்களினால் தோற்றுப் போனதும் உண்டு. முதன் முதலாக நடைபெற்ற பெரிய அளவிலான பொங்கு தமிழ் நிகழ்வில் கொழும்பைச் சேர்ந்த புத்த மதகுருவும் சிங்கள நண்பர்களும் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டனர் , அனுராதபுரம் புத்தளம் ஆகிய பிரதேசங்களில் நிகழ்ந்த பொங்கு தமிழ் நிகழ்விலும் பல சிங்கள அதிகாரிகளும் நண்பர்களும் கலந்து கொண்டனர். ஆற்றுகையாளர்கள் துப்பாக்கி ஏந்தி நின்ற இராணுவ வீரனைப் பார்த்து , அவனது முகாம்களுக்கு சென்று , உறுதியுடன் கை கொடுத்து நட்பு பாராட்டி, அவர்கள் உணர்வுகளையும் மதித்து தங்கள் சொந்த வீடுகளுக்கு சென்று உறவினர்களுடன் சந்தோசமாக வாழும் படியாக

தம்பி இராசா இராணுவ வீரா
சிங்கள சோதரி பெற்ற புதல்வா
உந்தன் ஊருக்கு திரும்பி நீ சென்று
ஊருடன் வாழும் பேற்றினைப் பெறுவாய் 

எனக் குறிப்பிடும் சிங்கள மொழிமூலமான துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்த போது  தமது விருப்பும் அதுவே  என்று கூறி சிரித்த முகத்துடன் அரங்க குழுவிடம் துண்டு பிரசுரம் வாங்கிய இராணுவ காவலனும் உண்டு . இந்தப் பாடல் எழுச்சி நிகழ்வின் போதும் இராணுவத்தின் மேலோ, சிங்கள மக்கள் மேலோ எதிர்ப்புக் கொள்ளாமல் அவர்கள் மீது தாலாட்டாகவே பாடப் பட்டதும் குறிப்பிடத்தக்கது .

ஆரம்பத்தில் குறிப்பிட்டது போன்று பொங்கு தமிழ் அரங்கு என்பது ஈழத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை , தமிழ்த் தேசியம், மரபு வழித் தாயகம் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து மற்றவர்களையும் மதித்து தமிழர்களின் அடிப்படை விருப்பங்களையும் அபிலாசைகளையும் உரத்துச் சொல்வதாக எழுந்த ஈழத் தமிழ் தேசிய அரங்கு ஆகும் . அரசுக்கோ, சிங்கள மக்களுக்கோ எதிராகவோ அவர்களின் கௌரவங்களை பாதிக்கும் வகையிலோ அவை நடாத்தப் படவில்லை .தமிழ் பிரதேசம் எங்கும் குடி கொண்டிருக்கும் , ஆக்கிரமித்துப் போயிருக்கும் கடல் வளம் , ,மண் வளம் வயல் வளம் , மற்றும் தமிழ் மக்களின் வீடுகளையும் விட்டு அவரவர் வீடுகளில் சந்தோசமாக வாழும் படி தாலாட்டுப் பாடப்பட்டது.

ஆனால் இராணுவத்தின் தொடர் நடவடிக்கை களும் செயற்பாடுகளும் தமிழ் மக்களை மீண்டும் மீண்டும் அச்சப் படுத்துவதாகவே இருந்தது. . இராணுவத்துக்கும் அரசுக்குமான வறண்ட இனவாதம் தமிழ் மக்களை ஆயுதம் கொண்டு அடக்குவதாலே அவர்களின் ஆத்மா திருப்தி கொள்கின்றது . இங்கு தமிழ் மக்களின் உயரிய ஆயுதமாக அரங்கு  களமானது .மக்கள் ஒன்று , கூடவும் தமது உணர்வுகளைப் பரிமாறவும் , வெளிக்காட்டவும் அரங்கால் முடியும் .

அந்த வெளியை தமிழ் மக்களின் மானுட விடுதலை வேண்டிய வெளியாக நிரப்பியது பொங்கு தமிழ் அரங்கு . இங்கு மொழி , வேட உடை ஒப்பனை, நிறங்கள் , இசை , இசைக்கருவிகள், ஆடல் பாடல், மக்கள் ஒன்றிணைவ , பங்கு பற்றல், பரிமாறல், எழுச்சி, முரண்பாடு, உறவு, உயிர்ப்பு, தொடர் செயற்பாடு  ஆகிய அரங்கியல், அம்சங்களை நிறைத்துப் பார்க்கையில்  ;பொங்கு தமிழ் அரங்கு  ஈழத் தமிழ் தேசிய விடுதலைக்கான அரங்கு என்பதை உறுதி கொள்ள முடியும் .

இவ்வாறான அரங்கே ஈழத் தமிழருக்கு தேவையான அரங்க வடிவமாகவும் உள்ளது தொடர்ந்து ஜேர்மன் , பிரான்ஸ் , லண்டன், சுவிஸ் ஆகிய நாடுகளில் பொங்கு தமிழ் அரங்கை சடங்கியல் நோக்கில் இன்றுவரை .நடாத்தப்பட்டு வந்த இந்த அரங்க எழுச்சி கடந்த 2009 ஈழப் போராட்ட அழிவுகளின் பின் ஈழத் தமிழ் மக்கள் ஒன்று சேரா வண்ணம் இராணுவ கட்டமைப்புகள் பரவலாக்கப்பட்ட அவலம் மீண்டும் உருவானது ஈழ வாழ்வின் துர்ப்பாக்கியமே.

ஆயினும் ஈழத்துக்கும் அப்பால் சர்வதேச நாடுகளில் தொடர்ந்தும் மூண்டுவரும் ஈழத்தீயாக பொங்கு தமிழ் அரங்க உணர்வுகளை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது என்பது உண்மை . எழுச்சி மிக்க பொங்குதமிழ் 2003 நிகழ்வின் பின் யுத்த நிறுத்த உடன்படிக்கை தேர்தல் என பல்வேறு மாற்றங்கள் சர்வதேச ரீதியிலும் ஏற்படத் தொடங்கியது.

தமிழ் மக்கள் மீதான பிரச்சினைகளை ஆழமாகப்பார்ப்பதற்கான வழிகளை அடையாளம் காட்டியது. தமிழ் மக்களின் சிற்சில நிலங்கள் மட்டும் விடுவிக்கப்பட்டன.
2009இன் பின்னான அவலம் மக்களை மீண்டும பயத்தில் உறைய திட்டது. 2014 வரை தமிழ் மக்கள் இருண்ட யுகத்தில் புதைக்கப்பட்டனர். 2015 தை 8 உடன் சிறியதொரு வெளிச்சம் தமிழ் மக்கள் மீது பாய்ச்சத் தொடங்கியது.

இதுவரை காலம் தம் ஆக்கிரமிப்பு நிலங்களை விடுவிக்கும்படி போராடி வரும் மக்களின் சிலரது நிலங்கள் விடுவிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் வன்னியில் மக்கள் நிலங்களிலுள்ள இராணுவ காவலரண்கள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. 2009இன் பின் தமிழ் மக்கள் மீதான அவலம் குறைந்தபாடில்லை.

காணாமல் போனோரும் கைது செய்யப்பட்டோரும் என்று மக்கள் போராட்டங்கள் வலுப்பெற்றுக் கொண்டு இருக்கின்றன. சிறைக்கைதிகள் தங்கள் விடுதலைக்காக தாங்களே போராட வேண்டியவர்களாகவும் குடும்பத் தலைவர்கள் இன்றி பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் அதிகரித்த நிலையிலும் பல்வேறு பிரச்சினைகளும் நெருக்கடிகளும் மக்களை பாதிக்கச் செய்கின்றன.

தமிழ்ப் பிரதேசம் எங்கும் திட்டமிட்டு அழிக்கப்படும் அடையாளங்களாக பௌத்த விகாரைகளின் கட்டுமானம், தமிழ் வீதிகள் சிங்களபெயரில் மாற்றியமைக்கப்படுதல், முஸ்லிம் மற்றும் தென்னிலங்கை மக்களின் வியாபாரப் போட்டிகள் எனப் பல நெருக்கடிகளுடன் தமிழ் மக்கள் இன்றும் அவலப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர்.