இன அழிப்பு பத்தாண்டு நிறைவில் நீதியைப் பெற்றுக் கொள்ள அனைவரும் ஒன்றிணைவோம் - ‘கிழக்கில் இருந்து’ எழுவான்

வியாழன் மே 16, 2019

உலக வல்லரசுகளின் ஒப்புதலுடன் சிறீலங்கா அரசினால் அரங்கேற்றப்பட்ட தமிழ் இன அழிப்புக்கு பத்தாண்டுகள் கடந்துள்ள போதிலும், படுகொலை செய்யப்பட்ட இனத்திற்கான தீர்வு இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை.

படுகொலை மேற்கொண்ட தரப்பினருக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டு வெளிநாடுகளின் தூதுவர்களாக மாற்றினர். அதுமாத்திரமல்ல, ஓர் இனத்தின் விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி இரும்புக் கரங்களைக் கொண்டு நசுக்கிவிட்டனர். பாதுகாப்பு வலயத்திற்குள் வருமாறு அழைப்பு விடுக்கப்பட்ட மக்கள் கொத்துக் கொத்தாக கொன்று குவிக்கப்பட்டார்கள். உலக நாடுகள் கண்மூடி கைகட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்தார்கள்.

பயங்கரவாதத்தையும், விடுதலைப் போராட்டத்தையும் வேறுபடுத்தி பார்க்கத் தவறிய உலக நாடுகள் ஓர் இனத்தை அழிக்கக் காரணமாயிற்று. தமிழ் இனத்தின் உரிமைகள் மறுக்கப்பட்டதுடன், தாயகப் பகுதியில் அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களாலும் உரிமைப் போராட்டம் வெடித்தது.

முப்பது வருட ஆயுதப் போராட்டத்தின் போது தமிழ் மக்கள் வகைதொகை, பால்வேறுபாடின்றிப் படுகொலை செய்த வரலாறு சிங்கள ஆட்சியாளர்களுக்கு உண்டு. இந்த படுகொலைகள் அனைத்தும் வரவு வைக்கப்படாத கணக்காக உள்ளது. படுகொலைகள் தொடர்பாக விசாரணைகள் நடாத்தப்பட வேண்டும் என தமிழர் தரப்பு அழுத்தங்களை கொடுத்தாலும், கண்துடைப்புக்காக ஆணைக்குழுக்களை அமைத்து விசாரணை என்ற போர்வையில் காலத்தை இழுத்தடித்த போக்குதான் காணப்பட்டது.

ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை இன அழிப்புத் தொடர்பாக, ஆதாரங்களுடன்? நேரில் கண்ட சாட்சிகளுடன் நீதி கேட்டு சென்றபோதும், பேரினவாத சக்திகளிடம் எவ்விதமான நீதி நியாயங்களையும் பெற்றுக் கொள்ளமுடியாது என்ற அறுதியான தீர்மானத்தின் பின்புதான் உலகநாடுகளிடம் கையேந்தினார்கள். அவர்களும் பாதிக்கப்பட்ட தரப்புக்களை மதிக்காது, அவர்களுக்கான நீதிவிசாரணைகளை மேற்கொள்ளாது குற்றங்களை இழைத்த தரப்பினரை தப்பித்துக் கொள்ளும் வகையில் கால அவகாசங்களை வழங்கி நீதியை சாகடித்துள்ளனர்.

உலக நாடுகளும், மனிதநேய அமைப்புக்களும் தமிழர் விடயத்தில் ஒருபக்கப் பார்வையைப் பார்ப்பது அவர்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை நீர்த்துப்போக வைத்துள்ளது. இனஅழிப்பு இடம்பெற்று பத்தாண்டுகளும் தொடர்ந்து நீதி கோரி தொடர் அறவழிப் போராட்டங்களை எமது மக்கள் நடாத்தியுள்ளதுடன், மனிதநேச நிறுவனங்களும் இடைவிடாது எழுத்து மூலமாகவும் தமது ஆதாரங்களை வழங்கியுள்ளனர்.

ஆனால், அண்மையில் பாகிஸ்தான் நாட்டில் இருந்து நாடு கடத்தப்பட்ட அகதிகள் பாதிக்கப் பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் கவலை தெரிவித்துள்ளார். சுயஉரிமைக்காக சுமார் அறுபது ஆண்டு காலமாக அகிம்சை மற்றும் ஆயுதப் போராட்டம் செய்த தமிழ் மக்களை இன அழிப்பு மேற்கொண்டதுடன், கால் நடைகளைப் போல் முட்கம்பிகளுக்குள் அடைத் துவைத்து பல்வேறு கொடுமைகளை சந்தித்த மக்களுக்கு இவ்வாறான அமைப்புக்கள் எவ்விதமான ஆறுதல் வார்த்தைகளை தெரிவித்தார்களா? இல்லை.

உலக நாடுகளின் தேவைக்காக இலங்கைத் தீவை பயன்படுத்தும் நாடுகள், உரிமைப் போராட் டத்தையும், இன அழிப்பையும் மூடிமறைப்பதற் கான அனைத்து செயற்பாடுகளிலும் இறங்கியுள்ளனர். ஐக்கிய அமெரிக்காவில் இடம்பெற்ற இரட்டைக்கோபுர தாக்குதலைக் காரணம்காட்டி தமிழர் போராட்டத்தை நசுக்கியவர்கள், இன்று இலங்கைத்தீவில் முஸ்லிம் உலக பயங்கரவாதிகள் நடாத்திய தாக்குதலைக் காரணம்காட்டி, தமிழர் தரப்புக்கு வழங்கவேண்டிய நீதியை வழங்க மறுக்கின்றனர்.

பேரினவாத சக்திகளையும், உலக நாடுகளையும் குறை கூறிக்கொள்ளும் இந்தவேளையில், தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என தங்களை அடையாளப்படுத்துபவர்களும் இன்று பாதைமாறி செல்வதைக் காணக்கூடியதாக உள்ளது. அதுமாத்திரமல்ல, பேரினவாத சக்திகளை குற்றங்களிலிருந்து தப்பித்துக் கொள்ளவைக்கும் சக்தியாக தமிழர் தரப்புமாறி தனது இனத்திற்கு மாபெரும் துரோகத்தை இழைக்கின்றார்கள் என்பது நேரடியாக புலப்படுகிறது.

அண்மையில் கூட தமிழர்களை கசக்கி பிழிந்த பயங்கரவாதச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டத்திற்கு தமிழர் தரப்பு அரசியல்வாதிகள் ஆதரவு வழங்கியிருந்தனர். அதன் விளைவு இன்று குடாநாட்டில் பல்கலைக்கழக மாணவர்களை கைது செய்ய வழிவகுத்துள்ளது எனலாம். அதுமாத்திரமல்ல, இன அழிப்பு சம்பவத்தை நினைவேந்தலைக் கூட நடாத்தவிடாது செய்ய அரசாங்கம் கங்கணம் கட்டியுள்ளது.

காணாமல்போன உறவுகளைத் தேடி நடாத்தப்படும் போராட்டங்கள், மண்மீட்புக்கான போராட்டங்கள், தமிழர் அடையாளங்களைத் தடுப்பதற்கான போராட்டங்கள் என அனைத்தை யும் நசுக்குவதற்கான வழிவகைகளை தமிழ் அரசியல்வாதிகள் பேரினவாத சக்திகளுக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.  இதேபோன்று புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகள் அந்நிய சக்திக்கு விலை போகாது, எதிரியின் சூட்சிக்குள் சிக்காது எமது மக்களின் துன்ப துயரங்களில் பங்குகொள்வது டன், நீதியையும், உரிமையையும் எமது மக்களுக்குப் பெற்றுக் கொடுப்பதற்கு தாம் வாழும் நாடுகளின் அரசாங்கத்திற்கு அழுத்தங்களைக் கொடுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

எனவே, ஒற்றுமையே பலம் என்பதற்கு அமைவாக இந்த சந்தர்ப்பத்தில் கருத்துவேறுபாடுகள் இன்றி கட்சி வேறுபாடுகளின்றி அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதனுVடாகத்தான் எனது உரிமைகளையும் அரசியல் அபிலாசைகளையும் வென்றெடுப்பதுடன், பாதிக்கப்பட்ட எமது உறவுகளுக்கு ஒரு விடிவுகாலத்தைப் பெற்றுக் கொடுக்க முடியும் என்பது உண்மை. வாருங்கள் இந்தப் பத்தாண்டிலாவது ஒற்றுமையை வெளிக் காட்டுவோம்.

நன்றி: ஈழமுரசு