இங்கிலாந்தில் எண்ணெய் கப்பல் கடத்தல் - சந்தேகத்தின் பேரில் 7 பேர் கைது

திங்கள் அக்டோபர் 26, 2020

இங்கிலாந்து கால்வாய் பகுதியில் எண்ணெய் கப்பல் கடத்தல் சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இங்கிலாந்து நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டு உள்ள தகவலில், இங்கிலாந்து கால்வாய் பகுதியில் எண்ணெய் கப்பல் ஒன்று கடத்தப்படுகிறது என்ற தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது.

இதையடுத்து, அவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று, பாதுகாப்பு செயலகம் மற்றும் உள்துறை செயலகம் ஆகியவை ராணுவ படைகளை சம்பவ பகுதிக்கு அனுப்ப முடிவு செய்தது.

லைபீரிய நாட்டில் பதிவு செய்யப்பட்ட அந்த எண்ணெய் கப்பலை நைஜீரிய நாட்டினர் கடத்த முயன்றுள்ளனர் என கூறப்படுகிறது.

ஹெலிகாப்டர் மூலம் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ராணுவ வீரர்கள் கப்பலில் இறங்கி அதிலிருந்தவர்களை பாதுகாக்கவும், கப்பலை மீட்பதற்கான பணிகளில் ஈடுபட தொடங்கினர். கப்பலை தங்களது கட்டுக்குள் கொண்டு வந்த வீரர்கள் பின்னர் 7 பேரை கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளனர். கப்பலின் ஊழியர்கள் பாதுகாப்புடனும், நலமுடனும் உள்ளனர் என அறிக்கைகள் உறுதி செய்துள்ளன. தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.