இனப்படுகொலையாளியான சிறிலங்கா பிரதமர் மகிந்தவை தனியாக சந்தித்தார் தமிழினத் துரோகி சுமந்திரன்

வியாழன் செப்டம்பர் 24, 2020

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்சவை கொழும்பில் தனியாகச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். 

இந்தச் சந்திப்பு நேற்று (23) கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது, புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகள் தொடர்பில் பரஸ்பர கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
    
குறிப்பாக, புதிய அரசியலமைப்பொன்று உருவாக்குவதாக இருந்தால், தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைக்கான தீர்வினையும் உள்ளடக்கியதாகவே அது அமைய வேண்டும் என்பதில் தான் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் அனைவரும் அதீத கரிசனை கொண்டிருப்பதாக தான் மகிந்தவிடம் வலியுறுத்தினார் என சுமந்திரன் கூறியுள்ளார். 

அதற்கு பதிலளித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 'புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதில் அதிக அக்கறை கொண்டிருக்கின்றோம். அத்துடன் புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பானது நிச்சயமாக தமிழர்களின் விடயங்களையும் உள்ளடக்கியதாகவே அமையும் என்றும் திட்டவட்டமாக கூறினார் எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

கடந்த காலங்களில் மட்டுமன்றி தற்போதும் தமிழ்த் தேசியத்திற்கு விரோதியாக செயற்படும் சுமந்திரன் கூட்டமைப்பின் ஏனைய உறுப்பினர்கள் எவரும் இன்றி தனியாக மகிந்தவை சந்தித்தமை தொடர்பாக தமிழ் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

சிங்கள மக்களுடனும் சிங்கள தலைவர்களுடனும் ஒட்டுறவாடிவரும் சுமந்திரன் ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கு அதிக ஆதரவை வெளிப்படுத்திவருகின்றார். தமிழர்களை முட்டாள்களாக்கி ஒற்றையாட்சி அரசியலமைப்பை திணிப்பதற்கு இவர் கடந்த காலங்களில் பல முயற்சிகளை மேற்கொண்டு வந்திருக்கின்றார்.

இதைவிட, போர்க்குற்ற விசாரணை முடிவடைந்து விட்டது என தமிழ் மக்களை ஏமாற்றிவருபவரும் இவர்தான். இந்நிலையில், இவர் தனியாக மகிந்தவை சந்தித்ததை தொடர்பாக தமிழ் மக்கள் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்.