இனப்படுகொலையாளியிள் மீள் வருகையும் தமிழர்களைச் சூழ்ந்துள்ள பேரச்சமும் - ‘தாயகத்தில் இருந்து’ காந்தரூபன்

புதன் நவம்பர் 27, 2019

சர்வதேச போர்க்குற்றவாளிகளான கோத்தபாய ராஜபக்சவும் மகிந்த ராஜபக்சவும் சிறீலங்காவின் ஆட்சியாளர்களாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை உலகளாவிய ரீதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த தீவான இலங்கையின் ஆட்சி ஈவிரக்கமற்ற கொலைகாரக் கும்பலின் கைகளில் சென்றமை குறித்து பன்னாட்டு இராஜதந்திரிகளும் அரசியல் ஆய்வாளர்களும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். ஈழத் தமிழர்களின் எதிர்காலம் தொடர்பாக அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

அதுவும் கார்த்திகை மாதத்தில் இந்த ஆட்சி மாற்றம் நடைபெற்றமை தமிழ் மக்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது. உலக வரலாற்றில், இனமொன்றின் விடுதலைக்காக ஒப்பற்ற தியாகங்களைப் புரிந்த வீர மறவர்களை நினைவுகூரும் மாதம் கார்த்திகை. உலகில் எந்த இனமும் செய்யாத, செய்யத் துணியாத உச்சபட்சத் தியாகங்களைப் புரிந்தவர்களை தமிழினம் பூசிக்கும் மாதம் இது. தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு தமிழீழம் தேசத்தை உருவாக்குவதற்காகப் போரிட்ட அந்தச் சாதனை வீரர்களை, அந்தத் தியாகிகளை, அந்தப் புனிதர்களை, அந்த மாவீரர்களை உலகத் தமிழினம் போற்றிக் கெளரவிக்கும் மாதம் கார்த்திகை.

ஆம், மாவீர்களுக்குச் சொந்தமான கார்த்திகையில் சிறிலங்காவின் ஆட்சி போர்க்குற்றவாளிகளின் கைகளுக்குச் சென்றிருக்கின்றமை ஈழத் தமிழ் மக்களை மட்டுமன்றி, ஒட்டுமொத்தத் தமிழ் மக்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

மனிதகுல வரலாற்றில், நாகரிகங்கள் தோற்றம்பெற்ற போது, தமிழர்கள் தனித்துவமான நாகரிகத்துடன் வாழ்ந்தார்கள் என்பதை வரலாற்று ஆய்வுகள் நிரூபிக்கின்றன. இதற்கான ஆகப் பிந்திய ஆய்வாக கீழடி ஆய்வு பல உண்மைகளை வெளிப்படுத்தியிருக்கின்றது. உலகின் பல நாடுகளை தமிழர்களே ஆட்சி செய்தார்கள் என்பதற்கு ஏராளம் சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இன்று மெருகூட்டப்பட்டு பயன்படுத்தப்படுகின்ற ஏராளமான தொழில்நுட்பங்களை முதன்முதல் கண்டுபிடித்து பயன்படுத்தியவர்கள் தமிழர்கள் என்பதை ஆய்வுகள் வெளிப்படுத்தியிருக்கின்றன. இதை எண்ணி தமிழினம் பெருமைகொள்ள வேண்டும்.

சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் காலத்திற்கு முன்னரும் தமிழினம் பெருமைமிகு பண்பாட்டுடன் வாழ்ந்தமையை பல சான்றாதாரங்கள் வெளிப்படுத்துகின்றன. அதேபோன்று, 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கி 21 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை ஈழத்தமிழர்கள் உலகில் பெரும் புரட்சி யுகத்தை ஏற்படுத்தினர். இதுவும் வரலாற்றில் பதிவாக்கம் பெறுகின்றது.

தமிழீழ தேசியத்த் தலைவர் வே.பிரபாகரன் தலைமையில் இப்புரட்சி யுகம் உருவாக்கப்பட்டது. அடக்கி ஒடுக்கப்பட்ட இனத்தின் சுதந்திர விடுதலைக்காக ஒருவர் எந்தளவு உயரிய தியாகங்களைப் படைக்க முடியும் என்பதை பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் உலகுக்கு எடுத்துக்காட்டினர்.

ஆண்கள் மட்டுமன்றி, பெண்களும் கள முனையில் நின்று எதிரிகளைத் தாக்கி அழித்து படை முகாம்களைக் கைப்பற்ற முடியும் என்பதை தலைவர் பிரபாகரனின் தமிழீழப் பெண்கள் படையணி வெளிப்படுத்தியது. அடுப்பெரிக்கும் பெண்களுக்கு படிப்பெதற்கு? என உலகம் பழைமைக்குள் மண்டியிட்டுக் கிடந்தபோது, யுத்த களத்தில் பிரகாசிக்கச் செய்தமை மட்டுமன்றி, உலக இராஜதந்திரிகளுக்கு நிகராக, பெண்களை பேச்சு மேசைக்கு அனுப்பி வெற்றி கண்டவர் பிரபாகரன்.

உலக அசைவியக்கத்தில் புதிய வரலாற்றைப் படைத்து, புதிய யுகம் ஒன்றை உருவாக்குவதற்கு ஏறக்குறைய 40 ஆயிரம் வரையான மாவீரர்கள் தங்கள் உயிர்களை ஆகுதியாக்கினர். தமக்கான அன்றி, தம் இனத்திற்காக உயிர்க்கொடை செய்த அந்தத் தியாகிகளை நினைவுகூரும் மாவீரர் தினம் தமிழர் வாழும் நாடுகள் எங்கும் உணர்வெழுச்சியுடன் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

2009 இல் போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து மாவீரர் தினத்தை அனுஸ்டிப்பது கேள்விக்குறியானது. மாவீரர் துயிலும் இல்லங்களை படையினர் இடித்து அழித்து துவம்சம் செய்தபோதிலும் தமிழ் மக்கள் மனங்களில் இருந்து மாவீரர் கனவுகளை சிங்களச் சேனைகளால் துடைத்தழிக்க முடியவில்லை. கடந்த சில வருடங்களாக துயிலும் இல்லங்களை தாங்களாக வடிவமைத்த தமிழ் மக்கள் அதே எழுச்சியுடன் தமது காவல் தெய்வங்களுக்கு வணக்கம் செலுத்தினர்.

கடந்த வருடம் (2018) கிளிநொச்சியில் நடைபெற்ற மாவீரர் தினத்தை நேரடி ஒளிபரப்பு செய்யும் அளவிற்கு மாவீரர் தினம் மீள் எழுச்சி பெற்றிருந்தது. ஆனால், அந்த நிகழ்வுகளுக்கு இப்போது மீண்டு பேரிடி வீழ்ந்திருக்கின்றது. சிறிலங்காவில் மீண்டும் காட்டாட்சி உருவாக்கப்பட்டிருக்கின்றது. தமிழ் மக்களைக் கொடூரமாக அழித்த, சர்வதேச போர்க்குற்றவாளிகளான (உலகில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்துபவர் சர்வதேச போர்க்குற்றவாளி) கோத்தபாய ராஜபக்சவும் மகிந்த ராஜபக்சவும் சிறீலங்காவின் ஆட்சியாளர்களாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

அண்மையில் இடம்பெற்ற தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து மகிந்த ராஜபக்ச பிரதமராகத் தெரிவாகியிருக்கின்றார். பயங்கரவாதத்திற்கு எதிரான மனிதாபிமான போர் என்ற பேரில் தமிழின அழிப்பு யுத்தத்தை நடத்திய இவர்களின் ஆட்சி மீண்டும் உருவாகியதால் தமிழ் மக்கள் மீண்டும் அச்சத்துடன் வாழவேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

சிறிலங்காவின் ஆட்சி ராஜபக்ச கும்பலிடம் சென்றமை குறித்து தமிழ் மக்கள் அச்சமும் கவலையும் அடைவதற்கு காரணம் என்ன என்பது சிறு பிள்ளைக்கும் தெரியும். 2005 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் தேர்தலைப் பகிஸ்கரித்தமையால் ஆட்சிக்கு வந்த ராஜபக்ச கும்பல் தொடர்ந்து 10 வருடங்கள் ஆட்சி நடத்தினர். மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகவும் கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும் அவர்களின் ஏனைய சகோதர்கள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளாகவும் பதவி வகித்தனர். அப்போது இவர்களின் காட்டுமிராண்டித்தன ஆட்சி மூலம் தமிழ் மக்கள் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்தனர்.

அந்த ஆட்சியில் காணாமற்போகச் செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் தற்போது ஆட்சி மற்றத்திற்கான தேர்தல் நடைபெறும்போதும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இளைஞர், யுவதிகள் கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்டமைக்கு கோத்தபாய ராஜபக்சவே பொறுப்பாக இருந்தவர். வெள்ளை வான்களில் இளைஞர்களைக் கடத்திச் சென்று சித்திரவதை செய்த பின்னர், சிறுநீரகம் உள்ளிட்ட முக்கிய உறுப்புக்களை எடுத்துவிட்டு படுகொலை செய்து முதலைகள் உள்ள குளத்தில் வீசினர். இது முற்றிலும் உண்மையானது என்பதை, இந்தக் கடத்தலில் ஈடுபட்ட வாகனச் சாரதி ஒருவரே அண்மையில் ஊடகங்களுக்கு முன்பாக ஒப்புக்கொண்டிருந்தார்.

மேலும், தமிழ் இளைஞர்களை புலனாய்வுச் செயற்பாடு என்ற ரீதியில் தமது வலைக்குள் வீழ்த்தி அவர்கள் மூலம் இளைய சமூகத்தையும் பாடசாலை மாணவர்களையும் கஞ்சா போதைப்பொருக்கு அடிமையாக்கியவர் கோத்தபாய.

அத்துடன், படையினரைப் பயன்படுத்தி இளைஞர்களைக் கண்டபடி தாக்கிக் காயப்படுத்தியதுடன் வீதிகளில் வைத்தும், வீடுகளுக்குள் புகுந்தும் துப்பாக்கிச் சூடுகளை நடத்தி அவர்களைப் படுகொலை செய்தவர். இதன்மூலம் ஆயிரக்கணக்கான தமிழ்க் குடும்பங்கள் இன்று வரை கண்ணீருடன் இருப்பதற்குக் காரணமானவர் கோத்தபாய.

இதைவிட, யுத்த காலத்தில், சர்வதேசத்தில் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகளையும் இரசாயனக் குண்டுகளையும் தருவித்து போர்க்களத்தில் பயன்படுத்தியதன் மூலம் ஒன்றரை இலட்சம் வரையான மக்களைப் படுகொலை செய்தவர்களும் இதே ராஜபக்சக்கள்தான்.

தமிழ் மக்களுக்கு மிகப்பெரும் அழிவுகளைச் செய்த கோத்தபாய ராஜபக்ச தேர்தல் களத்தில் நிற்கின்றார் என்பதை அறிந்தவுடனேயே தமிழ் இளைஞர்கள் உட்பட தமிழ் மக்கள் அனைவரும் அச்சமடைந்தனர். அவர் வெல்லக்கூடாது என்பதில் குறியாக இருந்தனர். இதனால்தான் அவருக்கு எதிராகப் போட்டியிட்ட சஜித் பிரேமதாசவிற்கு வடக்கு - கிழக்கு தமிழ் மக்கள் அனைவரும் வாக்களித்தனர். இதன் மூலம் கோத்தபாயவுக்கு பலமான எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

எனினும், படுமோசமான இனவாதத் தீயில் சிக்கியிருந்த சிங்கள தேசம் கோத்தபாயவிற்கு வாக்குகளை அள்ளி வழங்கியதன் மூலம் அவர் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார். தேர்தலைப் புறக்கணிக்குமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடுத்த அறிவிப்பை புறந்தள்ளி மக்கள் வாக்களித்தமைக்கு காரணம், தமிழினத்தைக் கொன்றொழித்த கோத்தபாய ராஜபக்ச ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காகவே. தமிழர்களின் எதிர்ப்பையும் மீறி அவர் ஆட்சிக்கு வந்தமையால் தமிழ் மக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர்.

புனர்வாழ்வின் பின்னர் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் செய்வதறியாது திகைத்துப்போயுள்ளனர். கோத்தபாய ராஜபக்சவின் கடும்போக்கு ஆட்சியில், தமிழர் தாயகத்தில் நில ஆக்கிரமிப்புக்களும் பெளத்த விகாரைகள் அமைக்கப்படுவதும் சிங்களக் குடியேற்றங்களும் தீவிரப்படுத்தப்படவுள்ளது. மாவீரர் துயிலும் இல்லங்கள் அனைத்திலும் பாரிய படை முகாம்கள் அமைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இவைகளை எண்ணி தமிழ் மக்கள் கடும் அச்சமும் கவலையும் வெளியிட்டுள்ளனர்.

கோத்தபாய சிறிலங்காவின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றமை, ஈழத் தமிழ் மக்களை மட்டுமன்றி தமிழகம் உட்பட பன்னாடுகளில் வாழும் தமிழ் மக்களையும் கடும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது. தேர்தலில் கோத்தபாய 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்ததை உலகத் தமிழர்களை அதிர்ச்சிக்கும் ஏமாற்றத்திற்குள்ளும் தள்ளிவிட்டது என, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து வெளியிட்டுள்ளார். ஈழத் தமிழர்களின் நலன்களைப் பேணவும் உரிமைகளைப் பாதுகாக்கவும் மோடி அரசு அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் இந்தியப் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேபோன்று தமிழகத்தில் உள்ள தமிழீழ விடுதலை உணர்வாளர்களும் தீவிர செயற்பாட்டாளர்களுமான  மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ், தமிழ்த் தேசிய முன்னணித் தலைவர் பழ.நெடுமாறன் போன்றோர் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாகியமைக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

இதற்கு எதிராகவும், தமிழர் தாயகத்தில் தமிழின இருப்பை உறுதிப்படுத்தக் கோரியும் விரைவில் தமிழகத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இது நல்லதொரு காலகட்டம். தமிழினத்திற்குக் கிடைத்த வரலாற்றுக் காலகட்டம். தமிழர் தரப்பு இதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தமிழ் மக்களைக் கொன்றொழித்த ராஜபக்சக்களின் ஆட்சிக்கு எதிராக, தமிழின இருப்பை உறுதிப்படுத்தக் கோரி, தமிழகத்திலும் புலம்பெயர் தேசங்களில் போராட்டங்கள் முனைப்புப் பெறவேண்டும்.

இந்த இடத்தில்தான் புலம்பெயர் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களின் ஒற்றுமை வேண்டப்படுகின்றது. தற்போது, புலம்பெயர் தேசத்தில் உள்ள தமிழீழக் கட்டமைப்புக்களும் தமிழர்களுக்காக உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசிய அமைப்புக்களும் பலமிழந்துள்ளன.  இவற்றை இயக்குபவர்களான தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அனைத்துலக செயற்பாட்டாளர்களும்  தமக்குள் பலப்பரீட்சையில் ஈடுபடுவதை அவதானிக்க முடிகின்றது.

தமிழீழம் பறிபோய்க்கொண்டிருக்கும் நேரத்தில் உங்களுக்கிடையேயான முரண்பாடுகளைத் தயவுசெய்து நிறுத்திக்கொள்ளுங்கள். நான் பெரிது, நீ பெரிது என வாழாமல் நாடு பெரிதென வாழுங்கள் என்ற தமிழீழத் தேசியத் தலைவரின் கருத்திற்கு இணங்க அனைவரும் ஓரணியில் திரண்டு ஓரிடத்தில் ஒன்றுகூடிப் பேசுங்கள். அனைவரும் ஓரணியில் திரள்வதன் மூலம் பெரும் புரட்சியை, வியத்தகு மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

சிங்கள தேசம் திகைத்துப்போகும் அளவிற்கு தமிழினப் பாய்ச்சல் இருக்கவேண்டும். இதுவே தாயக மக்களின் தற்போதைய கோரிக்கையாக உள்ளது.

இந்திய அரசை நோக்கி தமிழகத்திலும் பன்னாடுகளை நோக்கி புலம்பெயர் தேசங்களிலும் மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் வெடிக்கவேண்டும். இந்த எதிர்ப்பு அலைகளும் கோரிக்கைகளும் சிறிலங்கா ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரை குற்றவாளிக் கூண்டில் ஏற்றும். அதன் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும்.

எனவே, தமிழக மக்களும் தமிழீழ மக்களும் ஓரணியில் திரளத் தயாராகுங்கள்.

நன்றி: ஈழமரசு