இன்று இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல்! துணை முதல்வர்-

செவ்வாய் பெப்ரவரி 23, 2021

இந்த ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர், ஆளுநர் உரையுடன் கடந்த 2ம் திகதி தொடங்கி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது.

சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெறும் இந்தத் தொடரில் காலை 11 மணிக்கு, அடுத்த நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.

சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ளதால், மூன்று மாத கால செலவினத்துக்காக இடைக்கால நிதிநிலை அறிக்கையாகவே அவர் தாக்கல் செய்ய உள்ளார்.

கடந்த 2011-ஆம் ஆண்டில் ஜெயலலிதா தலைமையில் அதிமுக அரசு பொறுப்பேற்றபோது ஒரு லட்சம் கோடியாக இருந்த தமிழக அரசின் கடன், 4 லட்சத்து 56 ஆயிரத்து 660 கோடியாக அதிகரித்துள்ளதாக கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. திமுக ஆட்சியில் தமிழகம் உபரி நிதி மாநிலமாக இருந்தாக தெரிவித்துள்ள அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தமிழக வரலாற்றிலேயே அதிக கடனை வாங்கி வட்டி கட்டிய அரசாக எடப்பாடி பழனிசாமி அரசு உள்ளதாக கடுமையாக சாடியுள்ளார்.

கடன் தொகை அதிகரித்தபோதிலும், தேர்தலையொட்டி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாணவர்கள், விவசாயிகள் என பல்வேறு தரப்பினரையும் கவரும் வகையிலான அறிவிப்புகளை வெளியிட்டார்.

எனவே இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கையில், அந்த அறிவிப்புகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டியுள்ளது.

மேலும் தேர்தல் நெருங்குவதால், வாக்காளர்களை கவரும் வகையில் கவர்ச்சிகர அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்று நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னர், சபாநாயகர் தனபால் தலைமையிலான சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூடி, கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என முடிவெடுக்கப்படும்.

இந்நிலையில் தமிழகத்தின் கடன் சுமை உள்ளிட்ட விவகாரங்களை கடுமையாக விமர்சிக்க திமுக, கொங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.