இந்திய இளம் விஞ்ஞானிக்கு ரூ.18 லட்சம் பரிசு !

வியாழன் நவம்பர் 14, 2019

பிரேசில் நாட்டில் நடந்த போட்டியில் இந்திய இளம் விஞ்ஞானிக்கு ரூ.18 லட்சம் பரிசு கிடைத்து உள்ளது.

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து ‘பிரிக்ஸ்’ அமைப்பை உருவாக்கி உள்ளன. இந்த அமைப்பின் இளம் விஞ்ஞானிகள் மன்ற மாநாடு கடந்த 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை பிரேசிலில் நடந்தது. இதில் மேற்படி 5 நாடுகளை சேர்ந்த இளம் விஞ்ஞானிகள் கலந்து கொண்டு தங்கள் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினர்.

இதில் இந்தியா சார்பில் 21 பேர் கொண்ட குழு பங்கேற்றது. அதில் பீகாரை சேர்ந்த ரவி பிரகாஷ் என்பவரும் இடம்பெற்று இருந்தார். பெங்களூருவில் உள்ள தேசிய பால் பண்ணை ஆராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவர், மலிவு விலையிலான பால் குளிரூட்டும் அலகு ஒன்றை கண்டுபிடித்து இருந்தார்.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இவரது படைப்பின் செயல்பாட்டை அங்கு விளக்கி காட்டப்பட்டது. இந்த போட்டியில் ரவி பிரகாசின் கண்டுபிடிப்பு, தற்போது பிரிக்ஸ் இளம் கண்டுபிடிப்பாளருக்கான முதல் பரிசை பெற்று உள்ளது. இந்த பரிசு 25 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.18 லட்சம்) கொண்டதாகும்.

ரவி பிரகாஷ் உருவாக்கியுள்ள இந்த பால் குளிரூட்டும் அலகானது, வெறும் 30 நிமிடங்களிலேயே பாலை 37 டிகிரி செல்சியசில் இருந்து 7 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலைக்கு மாற்றக்கூடிய திறன் வாய்ந்தது. இதற்காக நானோ-திரவ அடிப்படையிலான கட்டமைப்பு பொருட்கள் இதில் பயன்படுத்தப்படுகிறது. இந்த அலகு மலிவு விலையில் வாங்கக்கூடியது என்பதால், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

இந்த தகவலை வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

பிரிக்ஸ் நாடுகளை சேர்ந்த இளம் கண்டுபிடிப்பாளர்கள், தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் திட்டம் வகுக்க வேண்டும் என கடந்த 2014-ம் ஆண்டு நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி யோசனை தெரிவித்தார். இதை ஏற்று பிரிக்ஸ் இளம் விஞ்ஞானிகள் மன்றம் உருவாக்கப்பட்டு, இளம் கண்டுபிடிப்பாளர் பரிசும் உருவாக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், ‘பிரிக்ஸ், ஒரு புதுமையான எதிர்காலத்துக்கான பொருளாதார வளர்ச்சி’ என்ற தலைப்பில் பிரிக்ஸ் மாநாடு நேற்றும், இன்றும் பிரேசிலியாவில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.