இந்திய பிரதமர் மோடியின் லண்டன் பயணம்: வரவேற்பும் எதிர்ப்பும்

வியாழன் நவம்பர் 12, 2015

மூன்று நாள் பயணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இங்கிலாந்து சென்றுள்ளார்.

லண்டன் ஹித்ரோ விமான நிலையம் வந்தடைந்த அவரை இங்கிலாந்துக்கான இந்திய வெளியுறவுத் துறை அதிகாரி ராஜன் மாத்தாய், இந்தியாவுக்கான இங்கிலாந்து வெளியுறவுத் துறை அதிகாரி ஜேம்ஸ் பவன் மற்றும் பல உயர் அதிகாரிகள் வரவேற்றனர். இந்திய பிரதமராக மோடி பதவியேற்ற பின்னர் முதன் முறையாக இங்கிலாந்து பயணம் மேற்கொண்டுள்ளார்.

மோடி தனது சுற்றுப்பயணத்தின் போது இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் கூட்டு குழு கூட்டத்தில் உரையாற்றுகிறார். இந்திய பிரதமர் ஒருவர் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பேசுவது இதுவே முதல் முறையாகும்.

நவம்பர் 13  அன்று பிரதமர் மோடி இங்கிலாந்தைச் சேர்ந்த நிறுவனங்களின் முதன்மை நிர்வாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.  அறிவுசார் சொத்துகளை பாதுகாக்கவும், பாதுகாப்பு துறைக்கான ஆயுத கொள்முதலில் மாற்றங்களை கொண்டு வரவும் அவர்கள் ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளனர்.

முன்னதாக மோடி இங்கிலாந்து புறப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்னர் 15த்திற்கும் மேற்பட்ட முக்கிய துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு 100 சதவீத அனுமதி அளிப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. அதோடு அந்நிய நேரடி முதலீட்டுக்கான விதிகளும் பல இலகுவாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து ராணி எலிசபெத் அளிக்கும் விருந்தில் பங்கேற்கும் மோடி, விம்பிள்டன் மைதானத்தில் நடைபெறும் கூட்டத்தில் இங்கிலாந்து வாழ் இந்தியர்களுடன் கலந்துரையாடுகிறார். இறுதியில் துருக்கியில் நடைபெறும்  ஜி-270 மாநாட்டில் பங்கேற்பதற்காக நவம்பர் 20 ஆம் தேதி புறப்பட்டு செல்கிறார்.

இப்படியான அரச வரவேற்பு உள்ள அதே நிலையில் மோடி அரசின் மதவாத போக்கை கண்டித்து லண்டனில் மோடிக்கு எதிரான போராட்டங்களும் எதிர்ப்பும் வலுத்துள்ளன. 'மோடி உங்களை யாரும் இங்கு வரவேற்கவில்லை’ என்ற வாசகங்கள் கூட லண்டன் வீதிகளில் காணப்படுகின்றன.