இந்திய பத்திரிகையாளரை தலிபான்களே கொன்றனர்

வெள்ளி ஜூலை 30, 2021

தாக்குதலில் காயம் அடைந்த டேனிஷ் சித்திக்கை ஒரு மசூதிக்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாக அமெரிக்க பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் கூறிப்பிடப்பட்டுள்ளது.

 ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறுவதையடுத்து தலிபான் பயங்கரவாதிகள் மீண்டும் ஆதிக்கம் செலுத்துவதற்காக தாக்குதல் நடத்தி பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

அவர்களுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினர் சண்டையிட்டு வருகிறார்கள். இரு தரப்பினர் இடையே துப்பாக்கி சண்டை, ராக்கெட் வீச்சு ஆகியவை நடந்து வருகிறது.

ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் மோதலை பற்றி செய்தி சேகரிக்க இந்தியாவை சேர்ந்த பத்திகையாளர் டேனிஷ் சித்திக் சென்றிருந்தார். அப்போது காரில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் டேனிஷ் சித்திக் சிக்கி உயிரிழந்தார்.

புலிட்சர் விருது பெற்ற இந்திய புகைப்பட நிருபர் டேனிஷ்சித்திக் கொல்லப்பட்டது உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் பல்வேறு நாடுகள் கண்டனங்களை தெரிவித்தன.

ஆனால் டேனிஷ் சித்திக் எப்படி இறந்தார் என்பது எங்களுக்கு தெரியாது. அதற்கு நாங்கள் காரணமல்ல. அவரது மரணத்துக்காக வருந்துகிறோம் என்று தலிபான்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் டேனிஷ் சித்திக்கை தலிபான்களே கொலை செய்தனர் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகி இருக்கிறது.

இதுகுறித்து அமெரிக்காவை சேர்ந்த வாஷிங்டன் எக்சாமினர் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

டேஷிஷ் சித்திக்கின் அடையாளத்தை சரி பார்த்த பிறகு அவரை தலிபான்கள் கொலை செய்துள்ளனர்.

டேனிஷ் சித்திக், ஆப்கானிஸ்தான் ராணுவ குழுவுடன் கந்தகார் ஸ்பின் போல்டாக் பகுதிக்கு சென்றார். அப்போது தலிபான்கள் தாக்குதல் நடத்தியதால் டேனிஷ் சித்திக்கிடம் இருந்து ராணுவ கமாண்டர் மற்றும் சிலர் பிரிந்து சென்றனர்.

அவருடன் மூன்று ராணுவ வீரர்களே உடன் இருந்தனர். தாக்குதலில் காயம் அடைந்த டேனிஷ் சித்திக்கை ஒரு மசூதிக்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதையடுத்து தலிபான்கள் அங்கும் தாக்குதல் நடத்தினார்கள். டேனிஷ் சித்திக்கை தலிபான்கள் உயிருடன் பிடித்தனர். பின்னர் அவர் பத்திரிகையாளர் என்ற அடையாளத்தை சரி பார்த்த பிறகு அவரை கொன்றனர். டேனிஷ் சித்திக்கை காப்பாற்ற முயன்ற ராணுவ கமாண்டர், மற்ற வீரர்களையும் கொன்றனர்.

தலிபான்கள் போர் விதிகளை மதிக்கவில்லை. உலகளாவிய சமூகத்தின் நடத்தையை மதிக்கவில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.