இந்திய வல்லூறுகள் செய்த பொல்லாத சதியில் அணைந்த தீபத்தின் 33ம் ஆண்டு

ஞாயிறு செப்டம்பர் 27, 2020

மாவீரர்கள் இறப்பதில்லை, அவர்கள் உயிராக நினைத்துவந்த தமிழீழக் கனவை மனங்களில் சுமந்து ஒவ்வொரு தமிழனும் இயங்கிவருகின்றார்கள் என்பதை உலகிற்கு உரத்துக் கூறும் வகையில் தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 33ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வுகள் உலக நாடுகளில் அந்தந்த நாட்டு சட்டவிதிகளுக்கு அமைவாக எழுச்சிபூர்வமாக நடைபெற்றிருந்தது.

தாயகத்திலும் இவ்வளவு இக்கட்டான சூழ்நிலையிலும் தமிழ் அரசியற்கட்சி தலைவர்களும், இளைஞர்களும் ஒன்றிணைந்து அடையாள உண்ணாவிரதத்தினை மேற்கொண்டிருந்தார்கள்.

பிரித்தானியாவில் தமிழர் ஒருங்கினைப்புக் குழுவின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபன் அவர்கள் உண்ணாவிரதமிருந்த 12 நாட்களையும் நினைவுகூறும் வகையில் கடந்த 12 நாட்களாக இணையவழியூடாக மக்கள் ஒன்றிணைந்து அவருக்கான வணக்கத்தையும் செலுத்தியிருந்தனர். இந் நிகழ்வில் திலீபன் அண்ணாவின் நினைவுகள் சுமந்த கவிதைகள், எழுச்சி உரைகள், பாடல்கள், நடனம் போன்ற எழுச்சி நிகழ்வுகளும் அரங்கேறியிருந்தது.

அதன்தொடர்ச்சியாக 12ம் நாளான இன்று No.10 downing street இல் அமைந்துள்ள பிரித்தானிய ஆட்சிமையத்திற்கு முன்னால், அடையாள உண்ணாவிரதப் போராட்டமும் மேற்கொள்ளப்பட்டது. அதன் தொடர்ச்சியாக வழமைபோல் மாலை 7 மணிக்கு இனையவழியூடாக மக்கள் ஒன்று கூடி தியாக தீபம் திலீபன் அண்ணாவிற்கான வணக்கத்தையும் செலுத்தியிருந்தார்கள். அத்தோடு இதே நாளில் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் 26.09.2001 இல் சிறீலங்கா படையினர் நடாத்திய கிளைமோர் தாக்குதலில் வீரச் சாவைத் தழுவிக்கொண்ட கேணல் சங்கர் (முகிலன்) அவர்களின் 19ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வும் நடைபெற்றிருந்தது.

t

இவ் வணக்க நிகழ்வில் எங்கள் அடுத்த தலைமுறையினரின் எழுச்சி உரைகள், கவிதை, பாடல், நடனம், நினைவுரை, ஆகிய கலைநிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் வடகிழக்குப் பிராந்தியமும் வெளிமாநிலப் பிராந்தியமும் இணைந்து இன்றைய நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.

33 ஆண்டுகள் கடந்தும் திலீபன் வைத்த எந்தவொரு கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை. திலீபன் இன்றும் பசியோடுதானிருக்கிறார் என்பதனை அனைத்து தமிழ்மக்களும் மனங்களில் சுமந்து தமிழீழம் நோக்கி பயணிப்போம்.