இந்தியா- சிறிலங்கா உறவில் பாதிப்பு!

ஞாயிறு பெப்ரவரி 10, 2019

2014-ம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கு பின்பு, இந்தியா-சிறிலங்கா உறவில் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக சிறிலங்கா முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷ  தெரிவித்துள்ளார். 

பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள -சிறிலங்காவின் முன்னாள் அதிபர்மகிந்த ராஜபக்ஷ சென்றிருந்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

எனது தலைமையில் சிறிலங்கா ஆட்சி நடந்த போது, இந்தியாவுடனான நட்புறவு சிறப்பாக இருந்தது. இந்தியாவில் 2014-ம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கு பின்பு புதிய அரசு உருவானதும் இந்தியாவுக்கும், சிறிலங்காவுக்கும் இருந்த உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் இரு நாடுகளிலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் போது, இதுபோன்ற உறவில் பாதிப்பு ஏற்படுவது உண்டு. இரு நாடுகள் இடையே உள்ள உறவில் பாதிப்பு ஏற்படுவது சரியல்ல.

2014-ம் ஆண்டுக்கு முன்பாக 1980-ம் ஆண்டிலும் இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது கூட இந்தியா-சிறிலங்கா உறவில் விரிசல் உண்டாகி இருந்தது. என்றாலும், இரு நாடுகளுக்கு இடையே உண்டாகும் விரிசல்களை தவிர்த்திருக்கலாம்.

இந்தியா மற்றும் சிறிலங்காவின்  அரசியல் கட்சி தலைவர்கள் இடையே உறவை வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியமானதாகும். ஏனெனில் வெளியுறவுத்துறை, பொருளாதாரம், பாதுகாப்பு ஆகியவை அரசியல் கட்சி தலைவர்களிடமே இருக்கிறது.சிறிலங்காவில்  எதிர்க்கட்சியாக நான் இருந்தாலும், இந்தியாவில் ஆளுங்கட்சியுடன் நல்ல உறவு இருக்கிறது. அண்டை நாடுகளான இந்தியாவும், சிறிலங்காவும் தங்களது பாதுகாப்புக்கு உதவி செய்ய வேண்டும்.

இந்திய தலைவர்கள் எதிர்பார்ப்பது சிறிலங்கா  மூலம் 3-வது நபரால் எந்த அச்சுறுத்தலும் வந்து விடக்கூடாது என்று நினைக்கிறார்கள். அதையே சிறிலங்கா தலைவர்களும் எதிர்பார்க்கின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக இரு நாடுகளுடையே நடைபெறும் பேச்சு வார்த்தை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

பெங்களூருவுக்கு சென்றிருந்த  முன்னாள் அதிபர்மகிந்த ராஜபக்ஷ, முன்னாள் பிரதமர் தேவேகவுடா மற்றும் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

இதற்கிடையே சிறிலங்காவில்  2009-ம் ஆண்டு நடந்த போரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதை கண்டித்தும், மகிந்த ராஜபக்ஷ  பெங்களூருவுக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பெங்களூரு சுதந்திர பூங்காவில் நேற்று காலையில் கருநாடக தமிழர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.