இந்தியா முழுவதும் நெகிழி பைகளுக்கு தடை!

செவ்வாய் ஜூன் 28, 2022

புதுடெல்லி- ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி பொருள்களுக்கு இந்தியா முழுவதும் தடை விதிக்கப்படும் என ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது.

உலக அளவில் சுற்றுச்சூழலுக்கு பெரும் தீங்காக விளங்குகிறது நெகிழிப் பொருட்கள். இதனைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தாலும் புற்றீசல் போல் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

மேலும் இந்த நெகிழி பைகள் நிலத்தில் புதைந்தால் வருடக்கணக்கில் அதன் தன்மை மாறாமல் இருக்குமென சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர், இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், பல்வேறு நோய்களும் இதன் மூலம் மக்களுக்கு பரவுகிறது என தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தடுக்கும் வகையில், அதிக அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி பொருள்களின் உற்பத்தி, இறக்குமதி, விநியோகம், இருப்பு, விற்பனையை ஜூலை 1-ம் திகதி முதல் இந்தியா முழுவதும் தடை செய்யப்படுவதாக ஒன்றிய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் 2009ஆம் ஆண்டு முதன்முதலாக ஹிமாச்சலப் பிரதேசத்தில் நெகிழி பொருள்கள் பயன்பாடு தடை செய்யப்பட்டது. தொடர்ந்து, ராஜஸ்தான், ஜம்மு & காஷ்மீர், உத்தரப்பிரதேசம், மஹாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்கள் தடை விதித்தன. 

கோவா, குஜராத், கேரளா, ஒடிஷா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் நெகிழி பொருள்கள் பயன்பாட்டுக்குத் பாதியளவு தடை விதிக்கப்பட்டது. 2019ஆம் ஆண்டு தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி பைகள், பாலிதீன் கவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. 2020ஆம் ஆண்டு கேரள மாநிலம் நெகிழி பொருள்களுக்குத் தடை விதித்தது.

இந்நிலையில், ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் நெகிழி பொருட்கள் கைவிடுவதற்கு அரசு போதிய அவகாசம் அளித்துள்ளது என்று ஒன்றிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் சிங் யாதவ் தெரிவித்துள்ளார்.

100 மைக்ரான்களுக்கு குறைவான நெகிழி மற்றும் பிவிசி பேனர்கள், தட்டுகள், கோப்பைகள், உணவு உண்ண அல்லது பரிமாறப் பயன்படுத்தும் பொருட்கள், நெகிழி குச்சிகள், பலூன் குச்சிகள், மிட்டாய் குச்சிகள், அலங்காரத்துக்கான தெர்மாகோல் பொருட்கள் உள்ளிட்டவை ஜூலை 1 முதல் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.