இந்தியாவில் ஆட்சியமைக்கப் போவது யார்?

வியாழன் மே 23, 2019

 நாடாளுமன்ற மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று வியாழக்கிழமை (மே 23) எண்ணப்படவுள்ளன. இதேபோல், ஆந்திரம், ஒடிஸா உள்ளிட்ட 4 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளும் வியாழக்கிழமை எண்ணப்படுகின்றன. இதனால், மத்தியிலும், ஆந்திரம் உள்ளிட்ட 4 மாநிலங்களிலும் அடுத்து ஆட்சியமைக்க போவது யார்? என்ற கேள்விக்கு இன்று வியாழக்கிழமை விடை கிடைத்துவிடும்.
 
 மக்களவையில் 545 இடங்கள் உள்ளன. இதில் 2 பேர், குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்படுவர். எஞ்சிய 543 பேர் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுவர். இதில் மத்தியில் ஆட்சியமைக்க 272 இடங்களில் வெற்றி பெற வேண்டியது அவசியமாகும்.

 இதனிடையே, தமிழகத்தின் வேலூர் தொகுதிக்கான தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. இதை தவிர்த்து, 542 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி தொடங்கி இம்மாதம் 19ஆம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலில் அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் உள்பட மொத்தம் 8,049 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் 724 பேர் பெண்கள். இந்தத் தேர்தலில் சுமார் 90 கோடி வாக்காளர்கள் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.
 
 7 கட்டத் தேர்தலில் பதிவான வாக்குகள், ஆந்திரம், ஒடிஸா, சிக்கிம், அருணாசலப் பிரதேசம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள், சில மாநிலங்களில் நடைபெற்ற இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் வியாழக்கிழமை எண்ணப்படுகின்றன.

  வாக்கு எண்ணும் பணி வியாழக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். இதையடுத்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். இதன்பின்னர், ஒவ்வொரு தொகுதியிலும் தேர்வு செய்யப்பட்ட 5 வாக்குச்சாவடிகளில் மட்டும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன், வாக்கு ஒப்புகைச் சீட்டுகள் எண்ணப்பட்டு சரிபார்க்கப்படும். அதாவது மொத்தமுள்ள 10.3 லட்சம் வாக்குச்சாவடிகளில் 20,600 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் மற்றும் வாக்கு ஒப்புகைச் சீட்டுகள் சரிபார்க்கப்படவுள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுக்கும், வாக்கு ஒப்புகைச் சீட்டுகளுக்கும் இடையே எண்ணிக்கையில் வித்தியாசம் காணப்படுமெனில், வாக்கு ஒப்புகைச் சீட்டுகளே ஏற்றுக் கொள்ளப்படும். இந்த சரிபார்ப்பு பணியால், வாக்கு எண்ணும் பணி நிறைவடைய ஏறத்தாழ 4 முதல் 5 மணி நேரம் கூடுதலாக பிடிக்கும். எனவே தேர்தல் முடிவுகள் சற்று தாமதமாகவே தெரிய வரும்.

  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பான புகார்களை கண்காணிக்க தில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையை தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பான புகார்கள், வாக்கு எண்ணிக்கை தொடர்பான புகார்கள் உள்ளிட்டவற்றை தெரிவிக்கலாம். வாக்கு எண்ணிக்கை தொடர்பான புகாரைத் தெரிவிக்க 011-23052123 என்ற 24 மணி நேர தொலைபேசி எண்ணையும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

  மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, ராதா மோகன் சிங், ரவிசங்கர் பிரசாத், ஹர்ஷவர்தன், நரேந்திர சிங் தோமர், பாஜக தலைவர் அமித் ஷா, சிரோமணி அகாலிதளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல், அவரது மனைவி ஹர்சிம்ரத் கௌர் பாதல், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியா காந்தி, சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ், அக்கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் உள்ளிட்டோர் முக்கியமானவர்கள் ஆவர்.
 
 மக்களவைத் தேர்தல் முடிவடைந்த பிறகு வெளியான வாக்கு கணிப்புகளில் பெரும்பாலானவை, மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே மீண்டும் ஆட்சியமைக்கும் எனத் தெரிவிக்கின்றன. இருப்பினும், வாக்கு கணிப்புகளை காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நிராகரித்து விட்டன. வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயிகள் பிரச்னை, பொருளாதார வளர்ச்சி வேகம் சரிவு போன்ற காரணங்களினால், மக்களவைத் தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்திக்கும் என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் அனைத்தையும், வாக்கு ஒப்புகைச் சீட்டுகளுடன் ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
 
 கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்றது. குறிப்பாக, பாஜக மட்டும் தனித்து 282 தொகுதிகளில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றது. மத்தியில் தொடர்ந்து 2 முறை ஆட்சியமைத்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு தலைமை வகித்த காங்கிரஸ் 44 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி படுதோல்வியடைந்தது. இதனால் மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாத நிலை காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டது.
 
இந்தத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியை மீண்டும் படுதோல்வியடைய செய்வோம் என்று தேசிய ஜனநாயக கூட்டணி சூளுரைத்துள்ளது. அதேபோல், காங்கிரஸ் கட்சியும் தேசிய ஜனநாயகக் கூட்டணியை தோற்கடிப்போம் என்று தெரிவித்துள்ளது. இதனிடையே, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், பிராந்திய கட்சிகளுடன் சேர்ந்து மத்தியில் பாஜக, காங்கிரஸ் அல்லாத அரசை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதுபோன்ற சூழ்நிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவை அடுத்து ஆளப் போவது யார்? என்பது வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தெரியும். இதனால் வாக்கு எண்ணிக்கை முடிவு இந்திய மக்கள் மட்டுமன்றி, உலக நாடுகள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.