இந்தியாவில் அடுத்த மாதம் கொரோனா உச்சம் தொடும் - ஆய்வுத் தகவல்

சனி மே 23, 2020

இந்தியாவில் அடுத்த மாதம் 21-ந் தேதியில் இருந்து 28-ந் திகதி வரையிலான கால கட்டத்தில் கொரோனா பரவல் உச்சம் தொடும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நந்ததுலால் பைராகி தலைமையிலான 6 பேர் குழு, ஒரு ஆய்வு நடத்தி கணிப்புகளை வெளியிட்டுள்ளது.

 அதில் வெளியாகியுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:-

அடுத்த மாதம் 21-ந் தேதியில் இருந்து 28-ந் தேதி வரையிலான கால கட்டத்தில் கொரோனா பரவல், இந்தியாவில் உச்சம் தொடும். தினமும் 7,000 முதல் 7,500 பேர் வரையில் கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள்.

 

கொரோனா வைரஸ் பரிசோதனை  - கோப்புப்படம்

 

 

ஜூலை மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்துதான் தொற்று ஒவ்வொரு நாளும் குறையும்.

அக்டோபர் முதல் வாரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 5 லட்சத்தை தொடும். கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியும் அறிகுறி இல்லாதவர்களால் 2 முதல் 3 பேருக்கு பரவும் அபாயம் இருப்பதால்தான் இந்தளவுக்கு பாதிப்பு அதிகரிக்கும்.

இந்தியாவில் தடுப்பூசியும், மருந்தும் இல்லாத நிலையில் ஊரடங்கை தொடர வேண்டும். நபருக்கு நபர் பரவுவதைத் தடுக்க இதை செய்ய வேண்டும். தொடர்பு கண்டுபிடிப்பதில் உள்ள சிக்கல்கள் காரணமாக பொது போக்குவரத்து சாதனங்களை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அந்த ஆய்வுத் தகவல்கள் கூறுகின்றன.