இந்தியாவில் சோகம், சந்திராயன் விண்கலத்துடனான தொடர்புகள் இறுதி நேரத்தில் துண்டிப்பு!

வெள்ளி செப்டம்பர் 06, 2019

இந்தியாவின் நிலவுப் பயணத் திட்டமான சந்திரயான் 2-வின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவதற்கு 2 கிலோமீற்றர்களே இருந்த நிலையில், அந்த விண்கலத்துடனான தொடர்புகள்  துண்டிக்கப்பட்டுவிட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

முதல் கட்டத்தில் அதன் செயல்பாடு சிறப்பாக இருந்ததாக கூறிய அவர், பின்னர் லேண்டரில் இருந்து தரை கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பு இழந்துவிட்டதாக கூறினார்.

இது குறித்த காரணங்களை இஸ்ரோ ஆராய்ந்து வருவதாக சிவன் மேலும் கூறினார்.

சந்திர மேற்பரப்பில் இருந்து 2.1 கிலோமீட்டர் தொலைவில் இருந்த நிலையில், விக்ரம் லேண்டருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக சிவன் மேலும் தெரிவித்தார்.

முன்னதாக, இந்தியாவின் நிலவுப் பயணத் திட்டமான சந்திரயான் 2-வின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டது. விண்களத்தில் இருந்து எந்த சிக்னல்களும் வரவில்லை என்பதால் இஸ்ரோ கட்டுப்பாட்டு அறையில் உச்சக்கட்ட பதற்றம் நிலவியது.

நிலவின் சுற்றுவட்டப் பாதையில் இயங்கிக்கொண்டிருக்கும் சந்திரயான் விண்கலத் தொகுப்பில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் என்ற தரையிறங்கு கலன் நிலவின் மேற்பரப்பில் சனிக்கிழமை அதிகாலை 1.30 முதல் 2.30 மணிக்குள் மெதுவாகத் தரையிறங்கும் என அந்த வரலாற்றுத் தருணத்துக்காக இந்தியா காத்திருந்தது.

விண்வெளி நிலைய அதிகாரிகளுக்கு இந்தியப் பிரதமர் மோடி ஆறுதல் கூறினார்...

சந்திராயன் நிலவில் தரையிறங்கும் காட்சிகளை நேரலையாகக் காண்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் அவரோடு இணைந்து 60 சிறுவர்கள் மற்றும் நூற்றுக்கணக்கானோர் இந்திய விண்வெளி நிலையமான இஸ்ரோ கட்டுப்பாட்டு அறையில் காத்திருந்தனர். 

இந்த நிலையிலேயே இறுதி நேரத்தில் சந்திராயன் விண்கலத்திற்கும் கட்டுப்பாட்டு அறைக்குமான தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. 

சந்திரயான் விண்கலத்தில் இருந்து வந்த தகவல் துண்டிக்கப்பட்டதை அடுத்து, இது குறித்து கவலைப்பட வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோதி இஸ்ரோ அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

நாம் இதுவரை செய்தது ஒரு சின்ன விஷயம் அல்ல. மிகப் பெரிய விஷயம். தைரியமாக இருங்கள். நான் உங்களுடன் இருக்கிறேன். கவலைப்படாதீர்கள் என்று பிரதமர் மோதி இஸ்ரோ அதிகாரிகளிடம் தெரிவித்தார்.