இந்தியாவில் கொரோனா தொற்று மீட்பு விகிதம் 41.61 சதவீதமாக அதிகரிப்பு

புதன் மே 27, 2020

 இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 41.61 சதவீதமாக உயர்ந்துள்ளது என சுகாதார அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்தார்.

கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோய் பரவுதலை கட்டுக்குள் கொண்டுவர ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு, பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

மத்திய அரசின் கட்டுப்பாட்டு செயல்பாடுகளாலும், சிறந்த சிகிச்சை முறைகளாலும் கொரோனா தொற்றில் இருந்து மீட்கப்படுபவர்களின் விகிதமும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் மீட்பு விகிதம் 7.10 % முதல் 41.61% வரை இருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறுகையில், கொரோனாதொற்றில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை மார்ச் மாதத்தில் 7.10 சதவீதமாக இருந்தது. தற்போது அது அதிகரித்து 41.61 சதவீதமாக உயர்ந்துள்ளது.

முதல் ஊரடங்கில் 7.1%, இரண்டாவது 11.42%, 26.59% மூன்றாவது ஊரடங்கு நிலையில் இருந்த மீட்பு வீதம் இப்போது 41.61% ஆக உள்ளது. இதனால் பலியானோர் விகிதம் குறைந்து வருகிறது என தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து பேசிய ஐ.சி.எம்.ஆரின் டைரக்டர் ஜெனரல் டாக்டர் பால்ராம், இந்தியா ஒரு நாளைக்கு சராசரியாக 1.1 லட்சம் மாதிரிகளை சோதித்து வருகிறது என கூறினார்.