இந்தியாவில் முதல் கொரோனா தடுப்பூசி தூய்மை பணியாளருக்கு போடப்பட்டது!

சனி சனவரி 16, 2021

இந்தியாவில் முதல் கொரோனா தடுப்பூசி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் தூய்மைப் பணியாளருக்கு போடப்பட்டது. எய்ம்ஸ் இயக்குநர், சீரம் இன்ஸ்டியூட் சிஇஓ உள்ளிட்ட சுமார் 3 லட்சம் பேர் இன்று தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தடுப்பூசி போடும் திட்டத்தில் பங்கேற்ற மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், பாரத்பயோடெக் கோவேக்சின் தடுப்பு மருந்தை கூடியிருந்தவர்களுக்கு காட்டினார். கொரோனாவுக்கு எதிரான போரில் தடுப்பு மருந்து உயிர்காக்கும் சஞ்சீவனியாக செயல்படும் என்றார்.

தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தவுடன், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தூய்மைப் பணியாளர் மணீஷ்குமாருக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டது. டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் ரண்தீப் குலேரியாவும் தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

அதே சமயத்தில் டெல்லி, ஜம்மு-காஷ்மீர், ஒடிசா என மாநிலந்தோறும் கொரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கியது. குஜராத், உத்தரப்பிரதேசம், ஆந்திரா, உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் முதலமைச்சர்கள் தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

கோவிஷீல்டு மருந்தை தயாரிக்கும் புனே சீரம் இன்ஸ்டியூட் நிறுவனத்தின் சிஇஓ அடார் பூனவல்லாவும் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

மகாராஷ்டிராவில் கோலம்போட்டும், செவிலியர்கள் கைதட்டியும், குஜராத்தில் வெடிகளை வெடித்தும், பல்வேறு மருத்துவமனைகளை அலங்கரித்தும் கொரோனா தடுப்பூசி திட்டத்திற்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டது.