இந்தியாவில் பா.ஜ.க.வை எதிர்த்த முதல் தலைவர் ஸ்டாலின்!

செவ்வாய் செப்டம்பர் 10, 2019

இந்தியாவில் பா.ஜ.க. வை எதிர்த்த முதல் தலைவர் ஸ்டாலின் தான் என்று ஆலோசனை கூட்டத்தில் கனிமொழி பேசியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தி.மு.க. இளைஞர் அணி ஸ்டாலினால் உருவாக்கப்பட்டது. தி.மு.க.வின் முக்கிய தலைவர்கள் இளைஞர் அணியில் இருந்து தான் வந்துள்ளனர். இளைஞர் அணி கூட்ட தீர்மானத்தில் குளம், நீர், நிலைகளை தூர்வாருவோம் என குறிப்பிட்டது மிகவும் பாராட்டுக்குரியது. தற்போது தூத்துக்குடியில் லாரிகளில் தண்ணீர் கொண்டு சென்று மக்களுக்கு வினியோகிக்கும் நிலை உள்ளது. மக்கள் உடைந்த குழாய்களில் இருந்தும் தண்ணீர் பிடித்து குடிக்கும் நிலை ஏற்ப்பட்டுள்ளது.

தண்ணீர் பிரச்சினையை சரி செய்ய இப்போது உள்ள ஆட்சியாளர்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. பாசிச பா.ஜ.க.வை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் என்பது தான் உங்களது முழக்கமாக இருக்க வேண்டும். மக்களை பிரிதாளக்கூடிய இயக்கம் பா.ஜ.க. இப்போதுள்ள அ.தி.மு.க. அரசு, பா.ஜ.க.வுக்கும், பா.ஜ.க. செயலுக்கும் ரத்தின கம்பளம் விரித்து வரவேற்கின்றனர்.

ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் அமைப்புகள் தி.மு.க.வுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பொய் செய்திகளை பரப்பி வருகின்றனர். இப்போது நமக்கும் கிடைக்கும் கல்வி, வேலை என்பது சாதாரணமாக வந்து விடவில்லை. பல போராட்டம் கடந்து தான் கிடைத்து இருக்கிறது. முதலில் நாம் நமது சரித்திரத்தை தெரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் பா.ஜ.க. வை எதிர்த்த முதல் தலைவர் ஸ்டாலின் தான்.

தொடர்ந்து தி.மு.க. இளைஞரணியினர் மக்களை சந்திக்க வேண்டும். இந்த அ.தி.மு.க. ஆட்சி தமிழகத்தை பின்னோக்கி இழுத்து சென்றுள்ளது. அதனால் நாம் வலி மிகுந்த சூழலில் உள்ளோம். இதை சரி செய்ய தி.மு.க. ஆட்சி அமைய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.