இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது பறவைக்காய்ச்சல்!

புதன் சனவரி 06, 2021

கேரளா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேச மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.

இந்த மாநிலங்களில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் அனைத்தும் சோதனை செய்ததில், பறவைக் காய்ச்சல் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இது பரவாமல் தடுக்க மத்திய அரசு பல்வேறு பாதுகாப்பு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. 

இதன்படி, பறவைக் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் திட்டங்களில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி, ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. 

அதேபோல் இமாச்சலப் பிரதேச மாநிலத்துக்கு 5-ம் தேதி (நேற்று) அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு, பறவைக் காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்கத் தேவையான வழிகாட்டல்கள் அமைச்சகம் சார்பில் வழங்கப்பட்டுள்ளன.

கேரள அரசு பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை ஏற்கெனவே தொடங்கி செய்து வருவதாகவும் தகவல்கள் உறுதி செய்கின்றன.

வனங்களில் வழக்கத்துக்கு மாறாக ஏதேனும் பறவைகள் இறந்திருந்தால், அதைத் தடுப்பது குறித்து வனத்துறைக்குத் தேவையான உதவிகளையும், ஒத்துழைப்பையும் மாநில அரசுகள் வழங்க வேண்டும். அவ்வாறு இயல்புக்கு மாறாகப் பறவைகள் இறந்துள்ளதா என வனத்துறையினர் மூலம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்குப் பரவுவதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை. கடந்த 2006-ம் ஆண்டில் இதுபோன்ற பறவைக் காய்ச்சல் தீவிரமானபோதும் மனிதர்களுக்குப் பரவியதாக ஆதாரங்கள் இல்லை. குளிர்காலத்தில் வெளிநாடுகளில் இருந்துவரும் இந்தியாவுக்கு வரும் பறவைகள் மூலம்தான் இந்தக் காய்ச்சல் பரவுகிறது''.

இவ்வாறு மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.