இந்தியாவின் முதல் ஆசிரியை சாவித்திரிபாய் புலே!

ஞாயிறு சனவரி 03, 2021

இந்தியாவில் முதலில் பெண்கள் பள்ளிக்கு செல்வதற்காக போராடிய பெண்மணி சாவித்திரிபாய் புலே ஆவார். பாலின மற்றும் ஜாதிய அடிப் படையில் பெண்களுக்கு கல்வி மறுக்கப்படுவதை எதிர்த்து போராடினார்.

சாவித்திரிபாய் ஒரு சமூக ஆர்வலர் மற்றும் பெண் கவிஞர் ஆவார். 'இந்தியாவின் முதல் ஆசிரியை' என்று அழைக் கப்படுகிறார். மேலும் பெண்கள் உரிமைக்காக குரல் கொடுத்ததால் 'இந்திய பெண்ணியத்தின் தாயார்' என்றும் அழைக்கப்படுகிறார்.

1831ஆம் ஆண்டு மகாராட்டிர மாநிலத்தில் நைகன் என்னும் கிராமத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் தங்களது தூரத்து உறவினரான ஜோதிராவ் புலேவை 1840-இல் திருமணம் செய்துவைத்தனர்.

சிறுவயதில் சாவித்திரிபாய் புலேவின் குடும்பத்தினரும் முற்போக்குச் சிந்தனையாளர்களாக இருந்த காரணத்தால் இவரும் மகாத்மா ஜோதிராவ் புலேவும் இணைந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கல்விப்புரட்சியை தொடங்கினர்.

1848ஆம் ஆண்டு ஜாதி மற்றும் பாலின ரீதியாக ஒதுக்கப்பட்ட பெண்களுக்கு கல்வி கற்றுக் கொடுக்க முயற்சிகள் பல செய்து பெண்களுக்கென தனிப் பள்ளி அமைத்தார். ஒடுக்கப்பட்ட மக்களை படிக்க வைப்பதற்காக மேல் ஜாதி மக்களிடமிருந்து அதிக எதிர்ப்புகளையும் தொந்தரவுகளையும் சந்திக்க வேண்டியதாக அமைந்தது. இத்தனை தடைகளையும் மீறி கணவன் மனைவி இருவரும் வாழ்நாளில் 18 பள்ளிகளுக்கு மேல் கட்டி தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி அளித்து வந்தனர்.

கைம்பெண்களின் தலையை மொட்டையடிப்பதைக் கண்டித்து நாவிதர்களை திரட்டி, 1863 ஆம் ஆண்டு மிகப் பெரிய போராட்டத்தினை சாவித்திரி பாய் நடத்தினார். 1870ஆம் ஆண்டு ஏற்பட்ட பஞ்சத்தினால் அனாதைகளான 52 குழந்தை களுக்கு உறைவிடப் பள்ளியை நடத்தினார். இதனால் தான் 'இந்தியாவின் முதல் ஆசிரியை' என்றும் 'பெண்ணியத்தின் தாயார்' என்றும் அழைக்கப்படுகிறார்.

இன்று அம்மையாரின் பிறந்த நாள்.

நன்றி - விடுதலை நாளிதழ்