இந்தியாவின் பெயரையே மாற்றுவார்கள்! திருமாவளவன்-

சனி ஓகஸ்ட் 06, 2022

திருப்பூர்- தப்பித்தவறி பாஜக 2024ல் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவின் பெயரையே மாற்றுவார்கள் என இந்திய கம்யூனிஸ்ட் மாநாட்டில், விசிக தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் பேசியுள்ளார்.

.திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25 வது மாநில மாநாடு இன்று நடைபெற்றது.

இதில் கொங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி , திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் , மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா, மாநில செயலாளர் முத்தரசன், விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 

முன்னதாக இந்த மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக வாழ்த்து தெரிவித்து சிறப்புரையாற்றினார்.

பின்னர் இதில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், தமிழகத்தை தாண்டி இதுபோல கூட்டணியை வலுப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் தேசிய பார்வையோடு அணுக வேன்டிய தேர்தல். அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைக்க கம்யூனிஸ்ட் கட்சிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

இனியும் தவறினால் மீண்டும் சங்பரிவாரம் அதிகாரத்தில் வரக்கூடும் என்று தெரிவித்த அவர், சங்பரிவார் இயக்கங்கள் தமிழகத்தை கையில் எடுத்திருக்கிறார்கள் என்றும், நாம் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார் 

தொடர்ந்து பேசிய அவர், கேரளாவையும் தமிழகத்தையும் குறி வைத்திருக்கிறார்கள் என்றும், தேசிய அளவில் அவர்களை எதிர்க்க கேரளாவும், தமிழகத்திலும் முன்மாதிரியாக உள்ளதாக தெரிவித்தார்.

இதில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் பங்கு பெரியது என்றும் இந்தியாவின் எந்தவொரு மூலையிலும் இடதுசாரி சிந்தனை இருக்க கூடாது என பாஜகவினர் முயற்சி மேற்கொள்கின்றனர். வலதுசாரிகளுக்கு எதிரான அனைவருமே இடதுசாரிகள்தான் .

அரைவேக்காட்டுதனமாக பேசினாலும் கூட பாஜகவை பற்றி பேசும் நிலையை சமூக ஊடகங்கள் உருவாக்கியுள்ளனர். ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். தப்பித்தவறி பாஜக 2024 ல் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவை காப்பாற்ற முடியாது . நாட்டின் பெயரையே மாற்றுவார்கள் .

நமக்கிடையே உள்ள கருத்து வேறுபாடுகளை களைந்து இந்திய அளவில் இணைந்து ஓரே அணியாக பாஜக-ஆர்எஸ்எஸ் அமைப்பை தனிமைப்படுத்த வேண்டும் . இதில் இடதுசாரிகள் பங்களிப்பு மிக முக்கியம் என்று தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.