இந்தியாவின் உதவியுடன் தமிழீழத்தை மீட்கப் போவதாகக் கே.பி கும்பலின் இலண்டன் பிரமுகர் புதிய புரளி!

வெள்ளி மே 01, 2020

இந்தியாவின் உதவியைப் பெற்றுத் தமிழீழத்தை மீட்டெடுக்கப் போவதாகக் கே.பி கும்பலின் இலண்டன் பிரமுகர் புதிய புரளியைக் கிளப்பியுள்ளார்.

 

தமிழீழ தேச சுதந்திரப் போராட்டத்தின் செல்நெறியை சிங்கள - இந்திய அரசுகளின் நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைவாகத் திசைதிருப்பி விடும் நோக்கில் தமிழீழ தேசியத் தலைவரின் இருப்பை மறுதலித்து, தன்னைத் தமிழீழ விடுதலைப் புலிகளின் அடுத்த தலைவராகப் பிரகடனம் செய்து, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஆகிய பெயர்களில் கானல்நீர் அமைப்புக்களை உருவாக்கி விட்டு சிங்கள அரசிடம் சரணடைந்து அதன் கைப்பாவையாக இயங்குபவர் செல்வராஜா பத்மநாதன் எனப்படும் கே.பி (கண்ணாடிப் பத்மநாதன்).

 

கிளிநொச்சியில் சிங்கள ஆயுதப் படைக் கொமாண்டோக்களின் அதியுச்ச பாதுகாப்பில் வசித்து வரும் கே.பியின் நேரடி நெறிப்படுத்தலிலேயே புலம்பெயர் தேசங்களில் தலைமைச் செயலகம், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஆகிய பெயரிலான கும்பல்கள் இப்பொழுதும் இயங்குகின்றன.

Arudkumar

இந்நிலையில் சூம் எனப்படும் இணையத் தொடர்பாடல் வலையமைப்பின் ஊடாகக் கடந்த 18.04.2020 அன்று இலண்டனில் அரசியல் கருத்தரங்கு ஒன்றை கே.பியின் பிரித்தானிய பிரமுகர்களான மருத்துவர் அருட்குமார், சங்கீதன் என்றழைக்கப்படும் தயாபரன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

 

இதில் இந்தியாவில் வசிக்கும் யாழ் பல்கலைக் கழகத்தின் முன்னாள் விரிவுரையாளரான மு.திருநாவுக்கரசு அவர்களும் கலந்து கொண்டார்.

 

இதன் பொழுது கருத்துரைத்த கே.பியின் பிரமுகர் தயாபரன், இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தித் தமிழீழத்தை உருவாக்குவதே தங்களின் திட்டம் என்றும், ஈழத்தீவில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துத் தமிழீழத்தை உருவாக்குமாறு தமக்கு இந்தியா பச்சைக் கொடி காட்டும் பொழுது புலம்பெயர் தேசங்களில் உள்ள போராளிகள் ஈழத்தில் களமிறங்கித் தமிழீழத்தை உருவாக்குவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

 

சிங்கள அரசின் கைப்பாவையாக இயங்கும் கே.பியின் பிரமுகராக விளங்கும் தயாபரனின் இப் புதுப்புரளி, புலம்பெயர் தேசங்களில் இயங்கும் முன்னாள் போராளிகளை சிங்கள - இந்தியப் புலனாய்வு நிறுவனங்களின் சூழ்ச்சி வலையில் வீழ்த்தும் நோக்கத்தைக் கொண்டது என்று இக் கருத்தரங்களில் கலந்து கொண்ட ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.