இந்தியப் படைகளை விரட்டவே பிரேமதாசா புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கினார்

செவ்வாய் ஜூன் 30, 2020

இந்தியப் படைகளைத் துரத்துவதற்காகவே பிரேமதாசா பிரபாகரனுக்கு ஆயுதங்களை வழங்கினார் என முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.

குருநாகல் பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் ஆட்சிக் காலத்தில், இந்திய இராணுவத்தினரைத் தோற்கடிக்கும் நோக்கிலேயே, விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டன. 
    
ரணசிங்க பிரேமதாஸ ஆட்சிக்கு வந்ததும், இலங்கையில் இருந்து இந்திய இராணுவத்தினரை வெளியேறுமாறு, காலக்கெடு ஒன்றை வழங்கியிருந்தார். 

ஆனால் இலங்கையின் தேசிய கொடிக்கு பதிலாக, வடக்கு, கிழக்குகென்று தனியான கொடியை அறிவிக்குமாறு, இந்திய இராணுவம் வரதராஜ பெருமாளுக்கு அறிவித்தது. 

இந்தச் சந்தர்ப்பத்திலேயே, அப்போதைய ஜனாதிபதி பிரேமதாஸ, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பிரபாகரனுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். அதன் பேரிலேயே அவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டன. – என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.