இந்தியத் தமிழர்கள் அதிகமுள்ள தீவில் தஞ்சமடையும் இலங்கைத் தமிழர்கள்!

திங்கள் அக்டோபர் 14, 2019

ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைபவர்களை எந்த பரிசீலணையுமின்றி நாடுகடத்தும் நடவடிக்கை தொடர்ந்து வரும் நிலையில், தஞ்சமடைவதற்கு இலங்கையர்கள் புதிய கடல்வழியை தேர்ந்தெடுத்திருப்பதாக ஐ.நா.வின் அகதிகள் ஆணைய அறிக்கை சுட்டிக்காட்டி இருக்கின்றது.

இந்தியப் பெருங்கடலில் அமைந்திருக்கும் பிரான்சின் ஆளுகைக்கு உட்பட்ட La Réunion மற்றும் Mayotte உள்ளிட்ட தீவுகளை நோக்கிய படகுப்பயணங்களே இவ்வாறு சமீப காலத்தில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Reunion தீவின் மக்கள் தொகையில் இந்தியத் தமிழர்கள் முதன்மையான இடத்தில் இருப்பதும், இலங்கைத் தமிழர்கள் இத்தீவில் தஞ்சமடைவதற்கு ஒரு முக்கிய காரணமாக சொல்லப்படுகின்றது. 

ஜனவரி 2018 முதல் இதுவரை 290க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் இவ்வாறு தஞ்சமடைந்துள்ளதாகவும் அதில் பெரும்பான்மையானோர் தஞ்சக்கோரிக்கைக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பே நாடுகடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. 

முன்னதாக, கடந்த ஏப்ரல் 13 அன்று மீன்பிடி படகு வழியாக 120 இலங்கையர்கள் 4000 கிலோ மீட்டர் பயணித்து இந்திய பெருங்கடலில் அமைந்திருக்கும் ரீயூனியன் தீவுக்கு சென்றடைந்திருந்தனர். இதற்காக ஒவ்வொருவரும் தலா 2 லட்சம் இந்திய ரூபாய் முதல் சுமார் 5 லட்சம் ரூபாய் வரை( 2,230-5,580 அமெரிக்க டாலர்கள்) ஆட்கடத்தல்காரர்களிடம் கொடுத்ததாகக் கூறப்பட்டது. 

இதனை ஆட்கடத்தல் நிகழ்வாக அணுகிய பிரஞ்சு அரசு, இவர்களை அழைத்து வந்ததாக 3 இந்தோனேசிய படகோட்டிகளும் சட்டவிரோத குடியேற்றத்துக்கு துணைப்புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து நடந்த விசாரணையில், 3 இந்தோனேசியர்களுக்கும் 12 மாதங்கள் முதல் 15 மாதங்கள் வரை சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. 

சமீப ஆண்டுகளாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களின் முயற்சிகள், கடுமையான கட்டுப்பாடுகளின் காரணமாக தோல்வி அடைந்து வருகின்றது. இந்த நிலைமையை மனதில் கொண்டு, பிரான்சின் தீவுப்பகுதிக்கு செல்லும் முயற்சியை இலங்கையர்கள் நம்பியிருக்கலாம் என கருதப்படுகின்றது.