இந்தோனேசிய வீதிகளில் வாழ்ந்துவரும் அகதிகள்!

வியாழன் ஜூலை 11, 2019

 சூடான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டு அகதிகள், தங்களது தஞ்சக்கோரிக்கை மனுவை ஐ.நா. அகதிகள் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் ஆணையம் அமைந்திருக்கும் வீதியில் வாழ்ந்து வருகின்றனர். 

சுமார் 30 பேர் அகதிகள் ஆணையம் உள்ள கட்டிடத்துக்கு எதிரே வசித்து வருகிறார்கள். 

iஅவர்களில் ஒருவரான ஆப்கான் அகதி லிசாவுக்கு 15 வயது. தாய் மற்றும் சகோதரருடன்  தற்காலிக டெண்டில் உள்ள லிசா, “எங்களது தஞ்சக்கோரிக்கை மனு ஐ.நா.அகதிகள் ஆணையத்தால் பரிசீலிக்கப்படுவதற்காக நாங்கள் காத்திருக்கிறோம். எங்களிடம் பணம் இல்லை, பணம் இருந்தால் இப்படி வீதியில் ஏன் படுத்திருக்க போகிறோம்,” என கேள்வி எழுப்புகிறார். 

கடந்த ஆண்டு மார்ச் மாதம் லிசா குடும்பம் இந்தோனேசியாவில் தஞ்சமடைந்திருக்கிறது. சர்வதேச இடப்பெயர்வு அமைப்பு லிசாவின் தந்தைக்கு வீடு அளித்துள்ள போதிலும் வேலை செய்வதற்கான உரிமை வழங்கப்படவில்லை. மற்ற குடும்ப உறுப்பினர்கள் தந்தையுடன் வசிக்கவும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. 

சூடானிய அகதியான அப்துல் நஜிப் என்ற 35 வயது இளைஞரும் இதே நிலையை பகிர்ந்து கொள்கிறார். “நான் ஓராண்டுக்கு மேலாக இந்தோனேசியாவில் இருக்கிறேன். 10மாதங்களாக வீதியில் தான் வாழ்ந்து வருகிறேன். அகதிகள் ஆணையத்தின் உதவிக்காக காத்திருக்கிறேன்,” எனக் கூறியுள்ளார். 

தங்கள் குடும்பம் ஆஸ்திரேலியாவில் மீள்குடியமர விரும்புவதாகவும், அதே சமயம் வேறொரு பாதுகாப்பான நாட்டில் மீள்குடியமர்த்தப்பட்டாலும் அதை ஏற்றுக்கொள்வதாக லிசா குறிப்பிடுகிறார்.  

“7மாத கர்ப்பிணி மனைவியுடன் மிருகங்களை போல வீதிகளில் வாழ்ந்து வருகிறோம்,” என வருந்துகிறார் அப்துல்.

இது தொடர்பாக, ஜகார்த்தாவில் உள்ள ஐ.நா.அகதிகள் ஆணையம் இதுவரை எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை. j

ஜூன் 2017 கணக்குப்படி, ஐ.நா.அகதிகள் ஆணையத்தின் பாதுகாப்பின் கீழ் 5,274 தஞ்சக்கோரிக்கையாளர்களும் 8,819 அகதிகளும் இந்தோனேசியாவில் வாழ்ந்து வருகின்றனர்.