இந்தோனேசியா செல்லும் வெளிநாட்டினருக்கு விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகள்

வியாழன் டிசம்பர் 31, 2020

 கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதிச் செய்யும் சோதனை முடிவு, 5 நாட்கள் தனிமைப்படுத்தல் உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகளை இந்தோனேசியாவுக்கு செல்லும் வெளிநாட்டுப் பார்வையாளர்களுக்கு இந்தோனேசிய அரசு விதித்திருக்கிறது. 

அதே சமயம், இங்கிலாந்திலிருந்து வரும் பயணிகளுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. புதிய வகை கொரோனா கிருமித்தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக இங்கிலாந்திலிருந்து வருபவர்களுக்கு இக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக இந்தோனேசிய போக்குவரத்து அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஐரோப்பியா நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தோனேசியாவுக்குள் நுழைபவர்கள் 48 மணி நேரத்துக்கு முன்பு எடுத்த கொரோனா சோதனை முடிவினை சமர்பிக்க வேண்டும். மற்ற நாடுகளிலிருந்து நுழைபவர்கள் 72 மணிநேரத்துக்கு முன்பு எடுத்த முடிவினை சமர்பிக்க வேண்டும் என இந்தோனேசிய போக்குவரத்து அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் ஜனவரி 8ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. 

இது மட்டுமின்றி, வெளிநாடுகளிலிருந்து வருகைத் தரும் அனைத்து பார்வையாளர்களும் இந்தோனேசியர்களும் இந்தோனேசிய விமான நிலையங்களில் மீண்டும் சோதனை செய்து கொள்ள வேண்டும். 

இச்சோதனையில் கொரோனா தொற்று இல்லை என உறுதிச்செய்யப்பட்டாலும் அரசு குறிப்பிட்டுள்ள ஹோட்டல்களில் சொந்த செலவில் பார்வையாளர்கள சுய தனிமைப்படுத்தல் செய்து கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 

தற்போதைய நிலையில், இந்தோனேசியாவில் சுமார் 7 லட்சம் பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஒவ்வொரு நாளும் சுமார் 5 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்படுகிறது. கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 21 ஆயிரமாக உள்ளது.